கோவில்பட்டியில் அறுந்துவிழுந்த மின்சார வயர்! நடுவழியில் நின்ற ரயில்கள்



Sponsored



கோவில்பட்டி பகுதியில், பலத்த காற்றுடன்கூடிய மழையினால், மின்சார வயர் அறுந்துவிழுந்தது. இதனால், தென் மாவட்டங்களிலிருந்து செல்லும் ரயில்கள், பாதி வழியிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். 

கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்றிரவு பலத்த காற்று,  இடி, மின்னலுடன்கூடிய மழை பெய்தது. இதில், சாத்தூர் செல்லும் வழியில் கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கு அருகே, தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தின் மேற்கூரை, காற்றினால் பறந்து விழுந்ததில் சுமார் 4 கி.மீ தூரத்துக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கு அதிகாலை 3 மணிக்கு வந்த திருநெல்வேலி - மும்பை தாதர் விரைவு ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து, 5 மணிக்கு வந்த திருநெல்வேலி - ஜமுதாவி விரைவு ரயிலும் கோவில்பட்டியிலேயே நிறுத்தப்பட்டது. 

Sponsored


இதேபோல, கோயம்புத்தூர் - நாகர்கோவில் பயணிகள் ரயில், சாத்தூர் ரயில் நிலையத்திலும், தூத்துக்குடி - மைசூர் விரைவு ரயில் குமாரபுரம் ரயில் நிலையத்திலும், சென்னை-குருவாயூர் விரைவு ரயில் துலுக்கர்பட்டியிலும் நிறுத்திவைக்கப்பட்டன. திருநெல்வேலியிலிருந்து ரயில்வே மின் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் விரைந்துவந்து மின் வயரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதன் காரணமாக, தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் சுமார் 7 மணி நேரம் தாமதமாகச் சென்றது.

Sponsored


நேற்று நள்ளிரவுப் பணிகள் தற்காலிகமாகச் சரிசெய்யப்பட்ட நிலையில் ரயில்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில், இன்று காலை சென்னையிலிருந்து அனந்தபுரி நோக்கிச் சென்ற விரைவு ரயில், வேலாயுதபுரம் அருகே வந்துகொண்டிருந்தபோது, மீண்டும் மின்வயர் அறுந்து விழுந்தது. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், மீண்டும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இங்கு மின்சாரம் இல்லாத காரணத்தால், மின்சார ரயில்கள் அனைத்தும் இயக்கப்படாமல் உள்ளன. தற்காலிகமாக, டீசல் இஞ்சின்மூலம் ரயில்கள் ஆங்காங்கே அருகில் உள்ள ரயில் நிலையங்களில் இணைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. மின்சார இணைப்பைச் சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.



Trending Articles

Sponsored