தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசு குறித்த அறிக்கை! - மத்திய அரசிடம் விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்



தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் மட்டும் காரணம் அல்ல என்ற மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கைக்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு 2 வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Sponsored


தூத்துக்குடியில், நிலத்தடி நீர் மாசு குறித்து மத்திய நீர்வளத்துறையின் கீழ் செயல்படும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், தூத்துக்குடி நகரின் நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டும் காரணமல்ல எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஆதரவான இந்த அறிக்கைக்குத்  தடை விதிக்கக்கோரி தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி சுப்பையா, நீதிபதி பொங்கியப்பன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல், தூத்துக்குடியில் நிலத்தடி நீரை ஆய்வு செய்து இந்த அறிக்கையை நிலத்தடி நீர் வாரியம் வெளியிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Sponsored


Sponsored


தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கெனவே முழு அளவில் ஆய்வு நடத்தி நிலத்தடி நீர் மாசடைந்ததற்கு ஸ்டெர்லைட் நிறுவனம்தான் காரணம், என்பதாலேயே ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டுள்ளதாக, தமிழக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், இது தொடர்பான வழக்குகள் பசுமைத் தீர்ப்பாயத்திலும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கும் நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்ட நிலையில், இந்த அறிக்கையால்  தூத்துக்குடியில் மீண்டும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தமிழக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



Trending Articles

Sponsored