``வெள்ளை அறிக்கை வேண்டும்'' - அறநிலையத் துறை அமைச்சரை முற்றுகையிட்ட அதிகாரிகள்!ந்து சமய அறநிலையத் துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பிவருபவர்களைக் கண்டித்து, `வெள்ளை அறிக்கை' வெளியிட வேண்டும் என்று அறநிலையத் துறை அமைச்சரை, அதிகாரிகள் இன்று முற்றுகையிட்டனர்.

இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக ராமச்சந்திரன் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக, அறநிலையத் துறையின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டம் இன்று (11.9.18) நடைபெற இருந்தது. இதற்காகத் தமிழகம் முழுவதிலிருந்தும் அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத் துறை அலுவலகத்துக்கு வந்திருந்தனர். கூட்டம் தொடங்க இருந்த நேரத்தில், `கறுப்பு பேட்ஜ்' அணிந்த அதிகாரிகள், கூட்டத்தைப் புறக்கணித்து வெளியே வந்தனர். இதையடுத்து, கூட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆணையரைச் சந்தித்த அதிகாரிகள், தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கினர்.

Sponsored


இதுகுறித்துப் பேசிய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர், `` `ஆலயப் பாதுகாப்பு இயக்கம்' என்ற அமைப்பின் சார்பில் ஹெச்.ராஜா கடந்த 2-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் ஒன்றை நடத்தினார். அப்போது, சிலை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் அறநிலையத் துறை ஆணையர் தனபாலை, `பொதுவெளியில் வைத்து தோளை உரிக்க வேண்டும்' என்று பேசியிருக்கிறார். அதோடு, அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கியக் கோயில்களுக்குத் தனிநபர்களை நியமித்துக் கண்காணிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிர்வாகத்தில் தலையிட ஹெச்.ராஜாவுக்கு யார் உரிமை கொடுத்தது. அதோடு, அறநிலையத் துறையில் உள்ள அதிகாரிகளின் குடும்பங்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார் ஹெச்.ராஜா. இதனால், அறநிலையத் துறையில் வேலை செய்யும் அனைத்து அதிகாரிகளும் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். எங்களுடைய நிலைப்பாட்டை ஆணையருக்குத் தெரியப்படுத்தும் விதமாகத்தான் `கறுப்பு பேட்ஜ்' அணிந்து ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்தோம்'' என்றார்.

Sponsored


Sponsored


அறநிலையத்துறை மீது களங்கம் விளைவிப்பவர்கள் மீது, அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை; இந்தத் துறையின் அமைச்சரான சேவூர் ராமச்சந்திரனும் துறை மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தப் பதிலையும் இதுவரை தராமல் இருக்கிறார். இதனால், அமைச்சரை முற்றுகையிட அதிகாரிகள் முடிவு செய்து, தலைமைச் செயலகம் நோக்கிச் சென்றனர். அறநிலையத் துறையின் அதிகாரிகள் சங்கத்தின் சார்பாக, தலைமைச் செயலகத்தில் உள்ள சேவூர் ராமச்சந்திரன் அலுவலகத்தைக் கறுப்பு பேட்ஜ் அணிந்து முற்றுகையிட்டனர் அறநிலையத் துறை அதிகாரிகள். இதையடுத்து, அங்கிருந்த அனைத்து அதிகாரிகளையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் அமைச்சர். அப்போது, தங்கள் துறைமீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக `வெள்ளை அறிக்கை' வெளியிட வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தனர் அதிகாரிகள். அமைச்சரும் அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, விரைவில் செய்தியாளர் சந்திப்பு நடத்த முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ``அரசு நிர்வாகத்தில் உள்ள துறையைக் கையகப்படுத்த, தனிநபர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், துறை அமைச்சர் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அறநிலையத் துறையில் உள்ள அதிகாரிகள், எந்த முகாந்திரமும் இல்லாமல், கைது செய்யப்படுகிறார்கள். இதையும் துறை அமைச்சரின் கவனத்துக்குப் பல முறை கொண்டு சென்றோம். ஆனாலும், எந்த நடவடிக்கையும் இல்லை. இதையெல்லாம் அமைச்சரிடம் இன்று பேசியபோது எடுத்துக் கூறினோம்'' என்றார்.

அறநிலையத் துறை பதிவுபெற்ற அதிகாரிகள் சங்கம், அமைச்சுப் பணியாளர்கள் சங்கம், திருக்கோயில் பணியாளர்கள் சங்கம் உள்ளிட்ட ஆறு சங்கங்கள் இணைந்து சென்னை வள்ளுவர்கோட்டத்தில் வரும் 27-ம் தேதி, அறநிலையத் துறை மீது அவதூறு பிரசாரத்தில் ஈடுபடுவோரைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். Trending Articles

Sponsored