ஐந்து மாதத்தில் 4 கோடி ரூபாய் அபராதம் வசூல் - டிக்கெட் எடுக்காதவர்களைத் திணறடித்த சேலம் ரயில்வே கோட்டம்



சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டங்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தது உள்ளிட்டவை மூலம் ரூ.4.02 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ள தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Sponsored


பயணிகள் பயணச்சீட்டு எடுத்து ரயிலில் பயணிக்க வேண்டும்' என்பதையும், பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களால் ரயில்வே துறைக்கு ஏற்படும் இழப்பைத் தடுக்கவும், சேலம் ரயில்வே கோட்டம் பயணச்சீட்டு சோதனையைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. அந்தவகையில்,சேலம் ரயில்வே கோட்டத்தின் வணிக பிரிவு குழுவினர் சார்பில் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில் ரூ.82,03,502 அபராதம் வசூலிக்கப்பட்டது. இதில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்ததாக 3,472 வழக்குகள் பதிவு செய்து,ரூ.14,84,749 அபராதமும், உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணித்ததாக 15,747 வழக்குகள் பதிவு செய்து,ரூ.65,26,657 அபராதமும், பதிவு செய்யாமல் சரக்குகளை எடுத்து சென்றதாக 486 வழக்குகள் பதிவு செய்து ரூ.1,92,096 அபராதமும் வசூலிக்கப்பட்டது. 

Sponsored


மேலும், சேலம் ரயில்வே கோட்டத்தில் 2018 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான பயணச்சீட்டு சோதனையில் 4.2 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பயணச்சீட்டு இல்லாமல் பயணித்ததாக 18,496 வழக்குகள் பதிவு செய்து ரூ.75,52,839 அபராதமும், உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணித்ததாக 76,459 வழக்குகள் பதிவு செய்து ரூ.3,17,48,076 அபராதமும், பயணிகள் பதிவு செய்யாமல் சரக்குகளை எடுத்து சென்றதாக 2,231 வழக்குகள் பதிவு செய்து ரூ.9,67,174 அபராதம் வசூலிக்கப்பட்டது. கடந்த 2017 இல் இதே காலகட்டத்தில் அபராத தொகை ரூ.3.41 கோடி வசூலிக்கப்பட்டது.

Sponsored


நிகழாண்டு வசூல் தொகை கடந்த ஆண்டை விட 17.89 சதவீதம் அதிகமாகும். சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ், கூடுதல் கோட்ட மேலாளர் அண்ணாதுரை ஆகியோர் முதுநிலை வணிக மேலாளர் விஜுவின், கோட்ட வணிக மேலாளர் மது, உதவி வணிக மேலாளர் ஷாஜகான் ஆகியோரையும், பயணச்சீட்டு சோதனையில் ஈடுபட்ட அனைத்து ரயில்வே அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். 

மேலும், பயணச்சீட்டு சோதனையில் சிறப்பாகச் செயல்பட்ட ஆய்வாளர்கள் கீவர், செல்வகுமார், சத்யராஜ், பி.எஸ்.பத்மகுமார், முத்துகுமார், ஏ.கார்த்திகேயன் ஆகியோருக்கு தலா ரூ.1,000 ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. சேலம் ரயில்வே கோட்டத்தில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்து, ரயில்வே துறைக்கு வருவாய் இழப்பை ஏற்படுவதைத் தவிர்த்திடும் வகையில் மேலும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என கோட்ட மேலாளர் சுப்பாராவ் அறிவுறுத்தினார். அதேபோல, 'சீசன் டிக்கெட்கள், முன்பதிவில்லாத டிக்கெட்கள் மூலம் ஜனசதாப்தி, சதாப்தி, உதய் மற்றும் கரீப் ரதம் ஆகிய ரயில்களில் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட ரயில்களில் முன்பதிவில்லாத மற்றும் சீசன் பயணச் சீட்டுக்களுடன் பயணிக்க கூடாது' என ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.



Trending Articles

Sponsored