”சென்னை, நாகை கடலில் மூழ்கும்!” - நீர் ஆராய்ச்சி நிறுவனம் தந்த எச்சரிக்கையின் அடிப்படை என்ன?Sponsoredஉலகம் முழுவதும் இயற்கைப் பேரிடர்கள் பல்வேறு நாட்டு மக்களை நிலைகுலையச் செய்து வருகிறது. பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் போன்றவை காரணமாகச் சொல்லப்பட்டாலும் இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள்தாம். புவி வெப்பமயமாதலும் காலநிலை மாற்றமும் கடல் மட்ட உயர்வை வெகு சாதாரணமாக அதிகப்படுத்திவிட்டன. பல்வேறு தீவு நாடுகளும் கடலில் மூழ்கும் அபாயத்தால் அங்கு நெடுங்காலமாக வாழும் மக்களை இழந்து ஆளரவமற்ற தீவுகளாக மூழ்க ஆரம்பித்துள்ளன. கடல் மட்ட உயர்வால் குட்டி குட்டி தீவு நாடுகள் மட்டும் மூழ்கும் அபாயத்தில் இல்லை. கடலோர நகரங்களுக்கும் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் கடலோர கிராமங்களும் நகரங்களும் கூட கடலுக்குள் செல்ல அதிகம் வாய்ப்பிருக்கிறது. இந்தக் கருத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாகச் சென்னை, நாகை மாவட்டங்கள் கடலுக்குள் மூழ்கும் ஆபத்து உள்ளது எனத் தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் தெரிவித்துள்ளார். 

சேலத்தில் பாலம் வாசகர் சந்திப்பு கூட்டத்தின் 5-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘இயற்கை பேரிடர்’ என்ற தலைப்பில் வாசகர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் பேசியதாவது: 

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பேரிடர், இடுக்கி அணை நீரால் ஏற்பட்ட சேதம், இயற்கை சீற்றம் என பல்வேறு காரணங்களைக் கூறுகின்றனர். உண்மையில் அது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர். 6 மாநிலங்களில் பரவியுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை சூழல் பாதுகாப்பு குறித்து அறிவியலாளர் மாதவ் காட்கில் தலைமையிலான குழு 2011-ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதில், மேற்கு தொடர்ச்சி மலையை 4 மண்டலங்களாகப் பிரித்து, அதில் முதல் 3 மண்டலங்களில் குவாரிகளை அனுமதிக்கக் கூடாது, குடியேற்றங்களை அனுமதிக்கக் கூடாது, இயற்கைக்கு எதிரான எந்தச் செயல் திட்டங்களையும் அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியது. ஆனால், கேரள, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்கள் அதை ஏற்க மறுத்தன. இதன் விளைவுதான் கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு. இதேபோன்ற பேரிடர் ஆபத்து கோவா மாநிலத்துக்கும் உள்ளது என மாதவ் காட்கில் எச்சரித்துள்ளார். 

Sponsored


இந்தியாவிலேயே சென்னை நகரில்தான் வெள்ளநீர் விரைவாக வெளியேற வடிகால் வசதி உள்ளது. வட சென்னையில் கொசஸ்தலை, தென் சென்னையில் அடையாறு, மத்திய சென்னையில் கூவம் என ஆறுகளும், 16 பெரிய நீரோடைகளும் சென்னை நகரத்தில் உள்ளன. இத்தனை இருந்தும் 2015 ஆம் ஆண்டு சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதற்குக் காரணம் அவற்றை முறையாகப் பராமரிக்காததுதான். சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகள் யாவும் நீர்தேங்கும் இடமாகும். அந்தந்த பகுதிக்கு ஏற்ற மரங்களை நாம் நட்டு வளர்க்க வேண்டும். 2016 ஆம் ஆண்டு சென்னையில் வர்தா புயலின் போது, வேரோடு சாய்ந்த மரங்கள் யாவும் வெளிநாட்டு வகை மரங்கள்தான், ஆனால், நம் நாட்டு இனங்களான வேம்பு, அரசு உள்ளிட்ட மரங்கள் ஒன்றுகூட விழவில்லை. 

Sponsored


குவாரிக்காகவோ அல்லது நியூட்ரினோ போன்ற திட்டங்களுக்காகவோ பாறையை உடைக்கும் போது அல்லது குடையும்போது அந்தப் பாறையோடு இணைந்த உறுதியான மண் பிணைப்பு நெகிழ்ந்துவிடும். இது மழைக் காலத்தில் நிலச்சரிவை ஏற்படுத்தும். நிலத்தடியில் இருந்து மீத்தேனை எடுக்கும்போது, மீத்தேனுடன் நிலக்கரி, பாறைகள், தண்ணீர் ஆகியவற்றை வெளியேற்ற வேண்டும். அவ்வாறு செய்யும்போது, நிலத்தின் உட்பகுதியில் வெற்றிடம் ஏற்படும். இதனால் நிலமட்டம் தாழ்ந்து போகும், கடல்நீர் எளிதில் உட்புகுந்து விடும். 
புவி வெப்பமயமாதலால் கடல் மட்டம் உயர்ந்து சென்னை, நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து உள்ளது. இதில், நாகை மாவட்டத்துக்கு பெரும் ஆபத்து உள்ள நிலையில், அங்கு மீத்தேன் எடுத்தால், நிலத்தடியில் வெற்றிடம் ஏற்பட்டு நிலமட்டம் தாழ்வதால் கடல் நீர் எளிதில் உட்புகுந்துவிடும். எனவே, இயற்கையின் சமநிலையை நாம் எப்போதும் சீர்குலைக்கக் கூடாது இவ்வாறு அவர் பேசினார். 

உலக அளவில் கடல் மட்ட உயர்வு ஏற்படுத்தும் பாதிப்புகள் மிக அதிகம். கடந்த சில ஆண்டுகளாகக் கடல் மட்டம் உயர்வதாலும், வெள்ளங்களாலும் பாதிக்கப்படும் வங்கதேசத்தின் கடலோர கிராம மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏறக்குறையச் சொந்த நாட்டிற்குள்ளேயே அகதிகள் போன்ற நிலைதான் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. 

பிரம்மபுத்திரா ஆற்றின் டெல்டா பகுதியில் கடலின் மட்டம் அறிஞர்கள் நினைத்ததைவிட இருமடங்கு அதிகமாக உயர்வதால் அந்தப் பகுதி முழுவதும் அடுத்த இருபது ஆண்டுகளில் கடல்சூழ் பகுதியாக மாறினாலும் ஆச்சர்யமில்லை என்கிறது ஒரு ஆய்வு. தாய்லாந்து வளைகுடாவுக்கு அருகில் உள்ள கடலின் நீர் மட்டம் வருடத்துக்கு நான்கு மில்லி மீட்டர் அளவுக்கு உயருவதால் அடுத்த பத்து வருடங்களில் பாங்காக் நகரமே மூழ்கி விடும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். உலக மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் கடல்மட்ட உயர்வால் பாதிக்கப்படும் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

காலநிலை மாற்றமும் புவி வெப்பமயமாதலும் இன்னும் புவியின் பல்வேறு அபாயங்களுக்கும் காரணமாக அமையலாம். குறைந்த நேரத்தில் அதிக மழைப்பொழிவும, சரசரவென உயரும் கடல்மட்டம் எனச் சுற்றுச்சூழல் பாதிப்பின் விளைவுகள் பூமியின் மாந்தர்களை இன்னும் ஆட்டம் காண வைக்கலாம். அதற்கான முன் தயாரிப்புகளை எடுப்பதற்கு முன்பு பூமியின் சமநிலையையும் சுற்றுச்சூழலையும் சீர்குலைக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மிகத் தேவை.Trending Articles

Sponsored