கையில் ஊன்றுகோல்; தலையில் தலைப்பாகை!- பாரதியார் வேடமணிந்த மாணவர்கள்Sponsoredமகாகவி பாரதியாரின் 97-வது நினைவுநாளை முன்னிட்டு எட்டயபுரத்தில் உள்ள அவரது பிறந்த வீட்டில் உள்ள சிலைக்கு பள்ளி மாணவ, மாணவிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். மேலும் ``துணிப்பைகளையே பயன்படுத்துவோம், தேச ஒற்றுமையைக் காப்போம்” என நினைவுநாளில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ளது மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த வீடு. இன்று அவரது 97-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, பாரதியார் நினைவு அறக்கட்டளை மற்றும் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற பாரதியாரின் நினைவுதின நிகழ்வில், 97 மாணவ, மாணவிகள் பாரதியார் வேடமணிந்து, மணி மண்டபத்தில் உள்ள பாரதியாரின் வெண்கலச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்தனர். 

Sponsored


பின்னர், ``பாரதியாரின் 97 வது நினைவு நாளான இன்று முதல் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்த மாட்டோம். துணிப்பைகளையே பயன்படுத்துவோம். வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்துவோம். பெண் கல்வியை ஊக்குவிப்போம். தேச ஒற்றுமையைப் பாதுகாப்போம்” என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

Sponsored


அங்கிருந்து அவரது பிறந்த வீடு வரை, ``ஒளிபடைத்த கண்ணினாய் வா வா”, ``அச்சமில்லை அச்சமில்லை..” ஆகிய பாரதியாரின் பாடல்களைப் பாடியும், ``வந்தே மாதரம்” கோஷம் எழுப்பிய படியும் நகரின் முக்கிய வீதிகள் வழியாகக் கையில் துணிப்பைகள் ஏந்தி, ஊர்வலமாகச் சென்று பாரதியாரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து, பாரதி வேடமணிந்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

எட்டயபுரத்தில், கடந்த 1882-ம் ஆண்டு, டிசம்பர் 11 ம் நாள் பிறந்த பாரதியார், 1921-ம் ஆண்டு செப்டம்பர் 11 ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு மேல் மறைந்ததாக அவரது இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அவரது இறப்பு நாள் செப்டம்பர் 12 ம் தேதி எனக் கடந்த 2014-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் வீடு மற்றும் மணிமண்டபத்தில் உள்ள கல்வெட்டுகளிலும் 12 ம் தேதி என மாற்றம் செய்யப்பட்டது.

தேதி திருத்தி அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையிலும், தமிழகத்தின் பல பள்ளிகள், கல்லூரிகளில் பழைய தேதியான நேற்றே (11ம் தேதி) அனுசரிக்கப்பட்டுவிட்டது. தினசரி காலண்டர்களிலும் பழைய தேதியே குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை மூலம் மீண்டும் ஒருமுறை திருத்தப்பட்ட தேதி குறித்து தெரிவிக்க வேண்டும் எனத் தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Trending Articles

Sponsored