3 பேரின் உயிரைப் பறித்த வெங்காய வெடி... தரைமட்டமான வீட்டில் உயிர் பிழைத்த ஈரோடு சிறுவன்!Sponsoredஈரோட்டில் தடைசெய்யப்பட்ட வெங்காய வெடி மூட்டைகளை இறக்கும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு வளையக்கார வீதி பகுதியைச் சேந்தவர் சுகுமார். இவர் அதே பகுதியில் மளிகைக் கடை வைத்திருக்கிறார். இவரது நண்பரான முருகன் என்பவரும் ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டுப் பகுதியில் மளிகைக் கடை வைத்திருக்கிறார். இதில் முருகன் கடந்த 2 வருடங்களாகவே தீபாவளி நேரத்தில் தடை செய்யப்பட்ட வெங்காய வெடிகளை சட்டத்துக்குப் புறம்பாக வைத்து விற்பனை செய்து வந்திருக்கிறார். `இந்த வருடம் நீங்களும் வெங்காய வெடிகளை வாங்கி விற்பனை செய்யலாம். நல்ல லாபம் இருக்கு’ என முருகன் சொல்ல சுகுமாரனுக்கு ஆசை எட்டிப் பார்த்திருக்கிறது. `ஈரோடு சாஸ்திரி நகர், விநாயகர் கோயில் வீதியில் தனக்குச் சொந்தமான வீடு ஒன்றை வாடகைக்கு விட்டிருப்பதாகவும், அதில் உள்ள காலி அறையில் வெடி மூட்டைகளை வைத்துக் கொள்ளலாம்’ என நினைத்து சுகுமார் உற்சாகமாகியிருக்கிறார்.

Sponsored


Sponsored


அந்த வகையில், இன்று காலை 5.30 மணியளவில் வாகனத்தில் 15 வெங்காய வெடி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு முருகன், சுகுமாரின் மகனான கார்த்திக் மற்றும் டிரைவர் செந்தூர் பாண்டி ஆகியோர் சாஸ்திரி நகருக்குச் சென்றிருக்கின்றனர். 13 வெங்காய வெடி மூட்டைகளை வாடகைக்கு விட்டிருந்த வீட்டின் முன் இறக்கி வைத்திருக்கின்றனர். மீதமுள்ள 2 மூட்டைகளை வேறு இடத்துக்குக் கொண்டு செல்ல கிளம்பியபோது, வண்டியில் காலியாக இருந்த 20 லிட்டர் வாட்டர் கேனை எடுத்து வெங்காய வெடி மூட்டையின் மீது டிரைவர் வேகமாக வைத்திருக்கிறார். வாட்டர் கேனின் அழுத்தத்தால் வண்டியில் இருந்த வெங்காய வெடி மூட்டைகள் வெடித்துச் சிதறின. கீழே இறக்கி வைத்திருந்த 13 வெங்காய வெடி மூட்டைகளும் வெடித்துச் சிதறியிருக்கின்றன.

இதில் சம்பவ இடத்திலேயே முருகன், சுகுமாரின் மகன் கார்த்திக் (எ) கார்த்திக் ராஜா மற்றும் டிரைவர் செந்தூர் பாண்டி ஆகியோர் உடல் கருகி பலியாகினர். இந்த வெடி விபத்தினால் 200 மீட்டர் தூரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 5 வீடுகள் முழுமையாக இடிந்தும், பல வீடுகளில் விரிசலும் ஏற்பட்டன.

வெடி மூட்டைகளை இறக்கி வைத்த வாடகை வீட்டில் இருந்த பாபி - ஜாஸ்மின் என்ற தம்பதியினர் வீட்டுக்கு முன்பகுதியில் சிறியதாக மளிகைக் கடை வைத்திருந்தனர். பாபி வாட்ச்மேன் வேலைக்குப் போக, ஜாஸ்மின் மட்டும்தான் மளிகைக் கடையை கவனித்து வந்திருக்கிறார். சம்பவம் நடந்த அன்று பாபி நைட் டியூட்டிக்குச் சென்றிருக்கிறார். ஜாஸ்மினோ கடைக்குத் தேவையான காய்கறிகளை வாங்க மார்க்கெட்டுக்குச் சென்றிருக்கிறார். வீட்டில் 12 வயதுச் சிறுவன் மனோஜ் மட்டும் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறான். வெடி விபத்தில் வீடு முற்றிலுமாகச் சிதைந்து கிடக்க, சிறுவன் மனோஜ் சிறு காயங்கள் கூட இல்லாமல் உயிரோடு இருந்திருக்கிறான். அவனை அருகிலிருந்தவர்கள் மீட்டிருக்கின்றனர். வெடி விபத்தில் தன்னுடைய குழந்தைக்கு என்ன ஆனதோ எனப் பதறிப் போய் ஓடிவந்த தம்பதியினர் உயிரோடு இருந்த மகனைக் கண்டு உணர்ச்சிப் பொங்க கட்டிப்பிடித்து அழுதனர்.

இந்த வெடி விபத்து சம்பந்தமாக வீட்டின் உரிமையாளரும், வெடி மூட்டைகளை சட்ட விரோதமாகக் கொண்டு வர காரணமாக இருந்த சுகுமாரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், தடை செய்யப்பட்ட இந்த வெடிகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.Trending Articles

Sponsored