நெல்லை அருகே போதையில் தள்ளாடிய இளைஞர்களை காருடன் கடத்திய கொள்ளையர்கள்!Sponsoredநெல்லையில் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் மதுபோதையில் இருந்த இளைஞர்களை அடித்து, உதைத்ததுடன் அவர்களைக் கொள்ளையர்கள் காருடன் கடத்திச் சென்றனர். காரிலிருந்து தப்பித்த அந்த இளைஞர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். 

நெல்லை உடையார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர், சுரேஷ்குமார். இவர் சமீபத்தில் புதிய கார் வாங்கியிருக்கிறார். அதனால் தன் நண்பர்களான ரகுராமகிருஷ்ணன், நம்பிராஜன் ஆகியோருக்கு மது விருந்து வைத்துள்ளார். இதற்காக இருவரையும் அதே காரில் ஏற்றிக்கொண்டு, தாமிரபரணி நதிக்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மூவரும் அங்கேயே நீண்ட நேரமாக இருந்து மது குடித்துள்ளனர். போதை இறங்கியதும் ஆற்றில் குளித்துவிட்டு மீண்டும் மது வாங்கிவந்து குடித்திருக்கிறார்கள். 

Sponsored


இப்படி நீண்ட நேரமாக அவர்கள் அங்கேயே குடித்துவிட்டு தள்ளாடியபடி இருந்துள்ளனர். அப்போது 3 பைக்குகளில் 6 பேர் அங்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் சுரேஷ்குமாரின் நண்பர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. பின்னர், இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். அதனால் சுரேஷ்குமாரும் அவரின் நண்பர்களும் காரில் ஏறி புறப்பட்டுள்ளனர். 

Sponsored


அவர்களை வழிமறித்த அந்தக் கும்பல், கார் சாவியை எடுத்துக்கொண்டதுடன், காரில் இருந்த மூவரையும் சேர்த்து காரை கடத்திக்கொண்டு நாகர்கோவில் சாலையில் சென்றுள்ளனர். வழியில் ஸ்பீட் பிரேக்கரில் கார் வேகம் குறைந்தபோது சுரேஷ்குமாரும் ரகுராமகிருஷ்ணனும் கார் கதவைத் திறந்து கீழே குதித்துவிட்டனர். அதில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

காரில் இருந்த நம்பிராஜனிடம் இருந்த ஏ.டி.எம் கார்டு, ரொக்கப் பணம் 15,000 ஆகியவற்றைப் பறித்துக்கொண்ட அந்தக் கும்பல், அவரை டக்கரம்மாள்புரம் பகுதியில் காரிலிருந்து கீழே தள்ளிவிட்டு காருடன் சென்றுவிட்டனர். பலத்த காயமடைந்த நிலையில் மூவரும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாகப் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, காரை கடத்திச் சென்ற கும்பலைத் தேடிவருகின்றனர். Trending Articles

Sponsored