மீத்தேன் திட்டத்துக்கு முதல் பலி, ஒன்றரை லட்சம் ஏக்கர் விவசாய நிலமே!Sponsored                                           

மிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என்று சொல்லி அப்போலோவில் சேர்த்துவிட்ட  கடந்த  செப்டம்பர் 22-ம் தேதி முதலே ஏதோ ஒரு பிரச்னை தமிழ்நாட்டில்  இருந்துகொண்டுதான் இருக்கிறது. காய்ச்சல் என்று அனுமதிக்கப்பட்ட முதல்வரின் சுகவீனம் வெவ்வேறு விதமான வடிவங்களை எடுத்து, மரணம் வரை போய் நின்றுவிட்டது. தமிழக மக்களும், அன்றிலிருந்து இந்த நிமிடம் வரை  உள்காய்ச்சல் வந்ததுபோல அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். பண மதிப்பிழப்பு, ஏடிஎம் வரிசை, மர்மக் காய்ச்சல், டெங்கு,  ஜல்லிக்கட்டு  போராட்டத்தில் வெடித்த வன்முறை, பாலியல் துன்புறுத்தலில் சிறுமிகள் கொலை என்று பிரச்னைகள் இருந்துகொண்டே இருக்கிறன. இப்போது தொடங்கியிருப்பது, 'ஹைட்ரோ-கார்பன்' பிரச்னை. மீத்தேன் வாயுவுக்கு புதிய முகமூடி போட்டுக் கிளம்பியுள்ளது இந்தப் பிரச்னை.

சென்னையில் தொடங்கி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வந்தவாசி, விருத்தாசலம், ஆரணி, திருவண்ணாமலை மாவட்டங்களில்தான் அதிகளவு விவசாய பூமிகள் அடுக்குமாடிக் குடியிருப்புகளாகி இருக்கின்றன. தென்மாவட்டங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும்  விளைநிலத்தை விற்கும் வழக்கம்  குறைவாகவே உள்ளது.  'ஹைட்ரோ-கார்பன்' திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம்  ஒரு லட்சத்து 64 ஆயிரத்து, 819 ஏக்கர் தென்மாவட்ட  விவசாய நிலங்களை அரசும், தனியார் ஒப்பந்த நிறுவனங்களும் விற்கத் தொடங்கியுள்ளன. தமிழக அரசியலில் மையமாய்ச் சுழலும் மன்னார்குடி பகுதிதான், 'ஹைட்ரோ-கார்பன்' விவகாரத்தின் இன்றைய  மையப் புள்ளியும்கூட.

Sponsored


'ஹைட்ரோ கார்பன்' திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை  2010-ல் தான், மன்னார்குடியின் மையத்தில் வைத்து  அன்றைய காங்கிரஸ் பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கிவைத்தார். "இந்தியாவில், இயற்கை எரிவாயுவின் பயன்பாடு, கடந்த ஆண்டை விட 18% அதிகரித்துள்ளது. அதனால், இந்தியாவில் மீத்தேன் எடுக்கப்பட வேண்டும்" என்றும், மீத்தேன் எரிவாயுவை வரவேற்று அன்று  மன்மோகன்சிங் உரையும் ஆற்றினார். மன்னார்குடி, தமிழ்நாட்டில்தான் இருக்கிறது, அங்கிருந்து ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கும் இதே ஹைட்ரோ-கார்பனைத்தான்  எடுக்கப்போகிறார்கள் என்பதை அன்றைய தமிழக அரசு மறந்துபோனது.

Sponsored


பாண்டிச்சேரி முதல் ராமேசுவரம்  வரை  உள்ள நிலக்கரிப் படுகையில் இருந்து மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு  690 கி.மீ. சுற்றளவில், உள்ள மொத்த  நிலங்களையும் பயன்படுத்தலாம் என்று, மத்திய  அரசு தடையில்லா சான்றும் கொடுத்தது. அரசின் சான்று கிடைத்த பின், அதற்கான ஆய்வுகள் வேகம்பிடித்தன. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய  காவிரி டெல்டா பகுதிகளில்தான்  பூமிக்கடியில் மீத்தேன் எரிவாயு  அதிகம் இருப்பதாகக் கண்டு ஆய்வுகள் தெரிவித்தன. ஒப்பந்தம் எடுத்திருந்த ஜி.இ.இ.சி.எல். கம்பெனியும், மன்மோகன் அரசும், ஆய்வின் முடிவைக் கேட்டு, மகிழ்ச்சியில்  கைகளைக் குலுக்கிக்கொண்டனர்.

கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (ஜி.இ.இ.சி.எல்) என்ற  பெயரில் இப்போதுள்ள தனியார் நிறுவனம், 15 ஆண்டுக்கான நீண்டகால ஒப்பந்தத்தை இப்படித்தான் கையிலெடுத்தது. தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் கருணாநிதியும்,  அவரவர் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கான பெரிய பாதிப்பாக  மீத்தேன் திட்டத்தைக் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளவில்லை. ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில்  இந்தத் திட்டம் கருணாநிதி அரசால் கொண்டுவரப்பட்ட ஒன்று. விவசாயிகளும், பொதுமக்களும் இந்தத்  திட்டத்துக்கு எதிராகக்  கோபப்பட்டால், அது தி.மு.க.வுக்குத்தான் பலவீனம் என்று  மக்கள் போராட்டங்களைக் கண்டுகொள்ளாமல்  அரசியல் செய்தார். மீத்தேன் போராட்டங்கள் பெரிதாய் வெடித்தபோதெல்லாம், அது கருணாநிதிக்கு எதிரான போராட்டம் என்று அமைதி காத்தார். 


    

சமூக வலைதளங்கள் அதிவேகமாக முன்னேறிக்கொண்டிருந்த காலகட்டமான  2013-ம் ஆண்டில், மீத்தேன் திட்டம் குறித்த புரிதல் வெளிச்சத்துக்கு வரவே, அது மக்கள் போராட்டமாக வெடித்தது. மீத்தேன் எடுக்கும் பகுதியைச் சுற்றிலும் 690 கிலோ மீட்டர் தூர எல்லை வரையில் வசித்த டெல்டா பகுதி  மக்களின்  தொடர் எதிர்ப்பால், 2013-ம் ஆண்டில் அந்தத்   திட்டத்துக்கு, ஜெயலலிதா இடைக்காலத் தடை விதித்தார். அந்தத் தடை தொடர்ந்து நீட்டிப்பிலேயே இருந்தது. மீத்தேன் வாயுவை எடுக்கும் பணியை, குறிப்பிட்ட நாளுக்குள் தொடங்காததால்,  ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம் என்று மத்திய அரசு  2015-ல் அறிவிக்கவே, 'இத்தோடு மீத்தேன் விவகாரம் முடிந்தது' என்று மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கோடிகளை முதலீடு செய்திருந்த 'கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட்' நிறுவனம்,  'மீத்தேன்  வரைபடத்தில்  சில தவறுகள் இருந்தது. அதைச்  சரிசெய்யும் முயற்சியால்தான் கால தாமதமாகிவிட்டது, இப்போது சரி செய்துவிட்டோம்' என்று சொல்லி  ஒப்பந்தத்தை  உடனே  புதுப்பிக்க  மத்திய அரசுக்குக் கடிதம் கொடுத்தது.  ஒப்பந்த நிறுவனத்தின் அந்தக் கடிதத்தை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டுள்ளதால், எந்த நேரமும் மீத்தேன் கிணறை வெட்டி, கொடும் பூதத்தை வெளியேற்றலாம் என்ற அச்சம் டெல்டா பகுதிகளில் நிலவுகிறது. அதைத் தொடர்ந்தே போராட்டங்கள் வலுப்பெற ஆரம்பித்துள்ளன. பூமியின் கீழ்ப்பகுதியில் பல ஆயிரம் அடிகளுக்கும் கீழே பாறைகளின் இடுக்குகளில் கிடைக்கும் 'மீத்தேன்' வாயுக்களால் என்ன பாதிப்பு ? ஒரு நவீனம் உள்ளே வரும்போது பழமைவாத எண்ணத்துடன், காரணமே இல்லாமல் அந்த நவீனத்தை விரட்டலாமா? என்ற கேள்விகளும் முன் வைக்கப்படுகின்றன.

ஆயிரம்  அடிகளுக்குக் குறையாமல் பூமியில் துளையிட்டு, அதே ஆயிரம் அடிகளுக்கு மேல் பூமியின் உள்ளே ஊடுருவித்தான் மீத்தேன் எடுக்க முடியும். மீத்தேன்  எடுக்கும்போது, நிலத்தடி நீர் மொத்தமும்  வெளியில் போய்விடும் என்பதுதான் விவசாயம் சார்ந்த, சாராத அனைத்து மக்களின் கவலையுமே. துளைகளின் வழியே முதலில் நீரையும், ஐநூறுக்கும்  மேற்பட்ட  அதிக நச்சுத்தன்மைகொண்ட வேதிப் பொருட்களையும் பூமிக்கடியில்  அழுத்தமாகச் செலுத்தி, பாறைகளை வெடிக்கச்செய்வதன் மூலமாகத்தான்  மீத்தேனை அடைய முடியும். அப்படியான நிகழ்வுக்குப் பின், வேதிப்பொருள்களோடு வெளியே  வரும் மீத்தேனை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்துக் கொண்டு, நச்சு மிகுந்த  வேதிப்பொருள்களைக் கீழே  (பூமியின் மேற்பரப்பில்) கொட்டிவிடுவது இன்னொரு ஆபத்து. "நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சி எடுத்துவிட்ட பின், அழுத்தக் குறைவு காரணமாக கடல்நீர் நிலத்துக்குள்  தஞ்சம் புகுவதைத் தடுக்க முடியாது. நிலம் உள் வாங்கிக்கொள்ளும் ஆபத்தும் உள்ளது. பசுமை வயல்வெளிகள் பாலைவனமாக மாறும். மீத்தேனை எடுக்க பூவோடு சேர்ந்த நாறாய் உள்ளே போன வேதிப்பொருட்களால் நிலம் நச்சுத்தன்மைகொண்டதாக மாறிவிடும். நிலமே விஷமாகும்போது நிலத்தடி நீர் அமிர்தமாகவா இருக்கும்? அதுவும் நஞ்சுதான்" என்கின்றனர் விவசாயிகள்.


மீத்தேனின் கெமிக்கல் ஃபார்முலா பெயர்  CH4 . குரூட் ஆயில், இயற்கை எரிவாயு மற்றும் சாண எரிவாயுவில் இந்த  CH4 காணப்படும். இயற்கை விஞ்ஞானியான நம்மாழ்வார்,  "மீத்தேன் திட்டத்துக்குப் பதிலாக ஒவ்வொரு வீட்டிலும் சாண எரிவாயுக் கலன் அமைத்து, அதன்மூலம் சமையல் எரிவாயு, மின்சாரம் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கலாம். இதற்காக அரசு நிதி ஒதுக்கினாலே போதும்" என்று அப்போது கொடுத்த குரல், யார் காதிலும் விழவில்லை. சதுப்பு நில வாயு என்ற பெயரும் CH4 -என்கிற கெமிக்கல் ஃபார்முலாவுக்கு உண்டு . மிச்சமே வைக்காமல் முழுதாக எரிந்துவிடும் தன்மைகொண்டது, இந்த ஃபார்முலா. சதுப்பு நிலப்பகுதிகளில் இந்த வாயு, திடீர் என்று வெளிப்படுவதைப் பார்த்துத்தான், இன்னமும் நாட்டில் சிலர் கொள்ளிவாய்ப் பிசாசு என்ற பெயரில் இல்லாத ஒன்றை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

விவசாய மக்களோ, அந்தக் கொள்ளிவாய்ப் பிசாசு, ஒப்பந்த நிறுவனங்களும், தலையாட்டி அரசுகளும்தான் என்று கொதித்துக் கிடக்கிறார்கள். இலை, மரங்கள், உயிரின உடல்கள் மண்ணோடு மண்ணாகி மட்கிப்போய், பின் அவைகள்  பாக்டீரியாவினால் அழிக்கப்பட்டு கார்பனாக மாறுகின்றன. அவைகளே  காற்று மாசிலுள்ள ஹைட்ரஜனுடன் சேர்ந்து  மாறுவதுதான் மீத்தேன். பூமிக்குள் இருக்கும் இந்த மீத்தேன் வாயு, தொடர்ச்சியாக நகரும் தன்மையைக்கொண்டது, நகர்ந்து நகர்ந்து நகர முடியாத இறுக்கமாக பாறைகளின் இடுக்குகளில் பதுங்கிக்கொள்கிற நிலையைக்கொண்டிருக்கிறது, மீத்தேன். பன்னாட்டு தனியார் நிறுவனங்களோடு  கைகோக்கும் ஆட்சியாளர்கள், இயற்கையோடு இணைந்த வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை... மாறாக, வணிகரீதியிலான வேகமான அழிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகிலுள்ள நெடுவாசல் பகுதியிலும் அப்படித்தான்  மீத்தேன் எடுக்க மனங்களைப் பாறையாக்கிக்கொண்டிருக்கிறார்கள், அதிகாரிகள்.


ந.பா.சேதுராமன்

படங்கள் : ம.அரவிந்த்Trending Articles

Sponsored