குட்கா விற்பனை ஊழலில் சி.பி.ஐ விசாரணை: வைகோ கோரிக்கை!



Sponsored



குட்கா விற்பனை ஊழல் தொடர்பான வருமான வரித்துறை ஆவணங்கள் மறைக்கப்பட்டுள்ளதால், சி.பி.ஐ விசாரணை தேவை என்று வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக காவல்துறை சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி-யாகப் பணியாற்றிய டி.கே.ராஜேந்திரன், ஜூன் 30-ம் தேதி ஓய்வுபெறும் நாளில், இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி, சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டார்.

Sponsored



டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன் பணி நீட்டிப்பு உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், “சென்னையில் 2016-ல் வருமான வரித்துறை நடத்திய சோதனைகளின்போது தடை செய்யப்பட்ட குட்கா உற்பத்தி நிறுவனங்களிடம் சில ஆவணங்களைப் பறிமுதல் செய்தது. அவற்றில் மாநில அமைச்சர் மற்றும் சில காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பான குறிப்புகள் சிக்கின. அப்போதைய சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த டி.கே.ராஜேந்திரன் மீதும் புகார் எழுந்தது. தமிழக முதல்வர் “இந்த விவகாரம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் உள்ளது” என்றார். 

Sponsored



இந்நிலையில், புகாருக்கு உள்ளானவர் காவல்துறை தலைமை இயக்குநராகப் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளதற்குத் தடை விதிக்க வேண்டும். குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பான விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறையிடமிருந்து சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என்று பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஜூலை 17-ல் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் வழக்கறிஞர், “தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா விற்பனைக்கு அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு பெரும் தொகை லஞ்சம் வழங்கப்பட்டதாகத் தமிழக அரசுக்கு மத்திய வருமான வரித்துறை கடந்த 2016 ஜூலை 9-ல் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், டி.கே.ராஜேந்திரன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.


ஆனால், தமிழக அரசின் வழக்கறிஞர், “வருமான வரித்துறையிடமிருந்து தமிழக அரசுக்கு எந்தக் கடிதமும் வரவில்லை” என்று தெரிவித்தார். இவ்வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், ஜூலை 20-ல் தமிழக அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சென்னை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், “வருமான வரித்துறையினரிடமிருந்து கடிதம் எதுவும் வரவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், “தமிழக அரசிடம் இது தொடர்பாக ஆவணங்கள் எதுவும் இல்லை” என்று மனுத்தாக்கல் செய்திருப்பது ஏன்? நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கருதப்படும் கிரிஜா வைத்தியநாதன், இப்படி உண்மைக்கு மாறான தகவலை நீதிமன்றத்தில் கூறியுள்ளது பல ஐயங்களை எழுப்புகிறது.

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைகளுக்கு உள்ளான ராமமோகன்ராவ் தன்னிடம் வழங்கப்பட்ட கோப்புகளை அழித்துவிட்டாரா? காவல்துறை தலைவர் பொறுப்பேற்றபின் அறிக்கை மறைக்கப்பட்டுவிட்டதா? என்ற கேள்விகள் எழுகின்றன.
புகாருக்கு உள்ளான டி.கே.ராஜேந்திரனுக்குப் பதவி நீட்டிப்பு அளித்திருப்பது காவல்துறையின் நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது. வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி மக்களுக்குப் பாதுகாப்புக் கிடைக்கும்? காவல்துறைத் தலைமை இயக்குநர் பதவியில் இருப்பவர் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்கிற அடிப்படை விதிகள்கூட கடைப்பிடிக்கப் படாதது கண்டனத்துக்கு உரியது ஆகும்.


தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டது குறித்து வருமான வரித்துறை ஆவணங்கள் அடிப்படையில் மத்தியப் புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டால்தான் உண்மைகள் வெட்ட வெளிச்சமாகும். குற்றம் புரிந்தோர் யாராக இருந்தாலும் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.



Trending Articles

Sponsored