கரூரில் கனஜோராக ஒலிக்கும் காங்கிரஸ் கோஷ்டி கானம்!.Sponsored
 

'பிரிக்க முடியாதது எது?' என்று என்று கேட்டால், கொஞ்சம் அரசியல் தெரிந்தவர்களே, 'காங்கிரஸூம் ஓயாத கோஸ்டிப் பூசலும்' என்று சொல்லிவிடுவார்கள். ஆனால், கரூர் மாவட்ட காங்கிரஸில் நடப்பது அதற்குமேல். 'யார் கட்சியின் இப்போதைய மாவட்டத் தலைவர்?' என்று தெரியாத அளவுக்கு, உச்சக்கட்ட கோஷ்டி சண்டை நடக்கிறது. கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக தற்போது நியமிக்கப்பட்டிருப்பவர் காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செய்தி தொடர்பாளரான ஜோதிமணியின் ஆதரவாளரான சின்னசாமி. ஆனால், அவரிடம் கட்சியின் மாவட்டத் தலைவர் பதவியை இழந்த முன்னாள் மாவட்டத் தலைவர் பேங்க் சுப்ரமணியன், இப்போதைய தலைவரை மதிக்காமல், தானே இப்போதும் மாவட்டத் தலைவர் போல் தன்னிச்சையாக மாவட்ட கூட்டம் நடத்துவது, உறுப்பினர்களைச் சேர்ப்பது, போராட்டம் நடத்துவது என்று செயல்படுவதாக சின்னசாமி தரப்பு புலம்பி வருகிறது.

இந்நிலையில், கோஷ்டிப் பூசலின் உச்சமாக இன்று கரூரில், ராகுல்காந்தி கார் தாக்கப்பட்டதைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பரித்து கிளம்பி இருக்கிறது கோஷ்டி சண்டை. ஒவ்வொரு மாவட்டத்திலும், ராகுல்காந்தி மீதான தாக்குதலைக் கண்டித்து, அந்தந்த மாவட்டத் தலைவர்கள் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கரூர் மாவட்டத்திலும் இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் சின்னசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அந்த தரப்பு எற்பாடு செய்தது. ஆனால், குறுக்கே புகுந்த முன்னாள் மாவட்டத் தலைவர் பேங்க் சுப்ரமணியன் தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க இருப்பதாக மீடியாக்களுக்கு தகவல் சொன்னதோடு, மாலை தனது ஆதரவாளர்களை மட்டும் அழைத்துக் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி முடித்துவிட்டார். ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை என்று தனது பெயரைத்தான் எல்லோரையும் முன்மொழிய வைத்தார்.
இதனால், கோபமான மாவட்டத் தலைவர் சின்னசாமி, தாங்கள் ஏற்பாடு செய்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தவில்லை. ''என்னை பேங்க் சுப்ரமணியன் தரப்பு அழைக்கவும் இல்லை. இங்கே நான் மாவட்டத் தலைவரா, இல்லை அவர் மாவட்டத் தலைவரான்னே தெரியலை. என்னை எல்லா வகையிலும் செயல்படவிடாம தடுக்கிறார். மாநில தலைமையிடம் பேங்க் சுப்ரமணியனைப் பற்றி முறையிட இருக்கிறேன்'' என்று சின்னசாமி புலம்புகிறாராம்.
 

Sponsored
Trending Articles

Sponsored