அரசுப் பள்ளிக்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கல்விச்சீர் பொருள்கள் வழங்கிய மக்கள்!Sponsored 

கரூர் மாவட்டத்தில் உள்ள உப்பிடமங்கலத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்விச் சீர்வரிசை பொருள்களை வழங்கி அந்தக் கிராம மக்கள் அதிசயிக்க வைத்திருக்கிறார்கள். 

சீர்வரிசையில், மூன்று கம்ப்யூட்டர்கள், இரண்டு ஃபேன்கள், மாணவர்கள் அமர்வதற்கு பெஞ்சுகள் உள்ளிட்ட பொருள்கள் அடங்கி இருந்தன. இந்த நிகழ்ச்சிக்கு கல்வி இயக்க கரூர் மாவட்டத் துணைத் திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவர் முன்னிலையில் தாங்கள் கொண்டு வந்த கல்விச்சீர் பொருள்களை கிராம மக்கள் பள்ளியின் தலைமை ஆசிரியை ராஜம்மாளிடம் வழங்கினர். அதை அவர் மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டார். இன்னும் சில பொருள்கள் பள்ளி மாணவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

Sponsored


சிறப்பு விருந்தினராக வந்திருந்த அனைவருக்கும் கல்வி இயக்க கரூர் மாவட்டத் துணைத் திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் பேசியபோது,
'இது உண்மையில் சிறந்த முன்னுதாரணமான நிகழ்வு. பெற்றோர்கள் இப்போது தனியார் பள்ளிகளை நோக்கி தங்கள் பிள்ளைகளை சேர்க்க ஓடும் நேரத்தில், இந்தத் தலைமை ஆசிரியை இங்குள்ளவர்களின் பிள்ளைகளை இங்கே சேர்க்க வைப்பதோடு, அவர்களிடம் கல்விச்சீர்வரிசைப் பொருள்களையும் வாங்கி இருப்பது ஆச்சர்யமான விஷயம். அந்த அளவிற்கு இந்தப் பள்ளியில் சிறந்த முறையில் ஆசிரியர்களால் கல்வி போதிக்கப்படுகிறது என்பது தெரிகிறது. அதனால்தான், கிராம மக்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த இப்படி லட்சக்கணக்கில் செலவு செய்து பள்ளிக்குத் தேவையான பொருள்களை வழங்கியிருக்கிறார்கள். மாவட்டத்தில் உள்ள மற்ற தொடக்கப் பள்ளிகளும் இந்தப் பள்ளியைப் பார்த்து மாற வேண்டும்" என்றார்.

Sponsored


 உப்பிடமங்கலம் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை ராஜம்மாளிடம் பேசினோம்.
 

"இந்தக் கிராமம் பின்தங்கியது. அநேகம் பேர் அன்றாடங்காய்ச்சிகள். அவர்களின் பிள்ளைகள் இங்கே படிக்கிறார்கள். அதனால், அந்த மாணவர்களுக்குச் சிறப்பான கல்வி வழங்க வேண்டுமென்று நானும், சக ஆசிரியர்களும் மெனக்கெட்டோம். அடிப்படை கல்வியை சிறந்த முறையில் வழங்கத் தொடங்கினோம். இங்கு படிக்கும் மாணவர்களை இன்னும் மேம்படுத்த சில வசதிகள் தேவைப்பட்டன. அதைப் பற்றி சில வருடங்களாகே ஊர் மக்களிடம் பேசினோம். ஓரிரண்டு பொருள்களை ஒவ்வொரு வருடமும் வாங்கி கொடுத்தார்கள். இந்த வருஷம் இப்படி மொத்தமாக இரண்டு லட்சம் செலவு செய்து கல்விச்சீர்வரிசையாக பொருள்களைக் கொண்டு வந்து எங்களை மெய்சிலிர்க்க வைத்து விட்டார்கள். அவர்கள் அன்புக்கு நாங்கள் கைமாறாக இங்க படிக்கும் 105 மாணவர்களின் எல்லா திறன்களையும் மேம்படுத்துவோம்" என்றார் உணர்ச்சி மேலிட!
 Trending Articles

Sponsored