"சினிமா... ஒரு மரணிக்கும் கலை!" இயக்குநர் வெற்றிமாறன் #VikatanStudentScheme



Sponsored



ஊடகத்துறையில் சாதனை படைக்க நினைக்கும் கல்லூரி மாணவர்களுக்கு பத்திரிகைத் துறை குறித்த புரிதலைக் கொடுப்பதற்காக மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தை விகடன் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படும் மாணவப் பத்திரிகையாளர்களுக்கு ஊடகத் துறை குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாம் சென்னையில் நடைபெறும். இந்த ஆண்டும் மாணவப் பத்திரிகையாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 75 மாணவர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நடைபெற்று வருகிறது. அது குறித்த அப்டேட்ஸ் இங்கே...! 

ஜூலை 28, மாலை 2:30 மணி:

Sponsored


Sponsored


'தமிழகம் இனி' எனும் தலைப்பில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், "இப்போது சகிப்புத்தன்மை குறைந்து கொண்டே வருகிறது. அரசை கேள்வி கேட்கும், விமர்சிக்கும் படங்களை வேண்டாம் என்கிறார்கள். இதுபோன்ற பிரச்னைகளை மீறித்தான் படங்கள் எடுக்க வேண்டியுள்ளது.
சினிமா மரணிக்கும் ஒரு கலையாக இருக்கிறது. 200 படங்களில் 5 படம் தான் வெற்றி பெறுகிறது. லாபமில்லாத துறையாக சினிமா துறை மாறி வருகிறது.
சினிமா மக்களின் ஊடகம். நேரடியாக மக்களிடம் கொண்டு சேரும் ஊடகம். சினிமாவை குறைந்த அளவு பொறுப்புடன் பயன்படுத்தினால் கூட அது நல்லத்தாக்கத்தை ஏற்படுத்தும்.
 சினிமாவில் திடீர் திடீர்னு ஒரு சீசன் வரும். லஞ்சம், திருவிழா, ஃபேமிலி செண்ட்டிமெண்ட், விவசாயம் காப்போம்னு விதவிதமான டிரெண்ட் இருக்கும். ஆனால் அந்தப் படங்கள் எல்லாம் வியாபாரத்துக்காக மட்டுமே பயன்பட்டதே தவிர, அந்தப் பிரச்னையைப் பேசவில்லை. அதற்கான தீர்வையும் முன்வைக்கல.
அரசு இந்த மாதிரியான அணுகுமுறையை கையாண்டால் எல்லா துறைகளும் பாதிக்கும். சினிமாவை பெரிதாக பாதிக்கும்.
சினிமாவின் எதிர்காலம் இருண்டு இருப்பது போன்று தான் தெரிகிறது. அடுத்து 5 , 10 வருடத்தில் புதிய இயக்குநர்கள் வருவது வெகுவாகக் குறையும். 
சினிமாவில் எல்லா தயாரிப்பாளர்களும் கடனில் இருக்கிறார்கள். கடந்த 100 வருடமாக கதாநாயகன் தான் தெரிகிறார்கள். நடிகர்களின் முகத்தை வைத்து தான் படமெடுக்கிறார்கள். படைப்பாளிகளைப் பார்த்து படம் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே உள்ளது. 
இவ்வாறு வெற்றிமாறன் பேசினார்.

கேள்வி :  “எங்களுக்கு ஒரு அறிவுரை சொல்லுங்களேன்”


வெற்றிமாறன் : எனக்கு அறிவுரை கேக்கவும் புடிக்காது, சொல்லவும் புடிக்காது. பாலு மகேந்திரா சார் எப்பவும் ஒரு அட்வைஸ் சொல்லுவார், “நிறைய படிங்க, நிறைய படம் பாருங்க” நான், ஏற்கனவே படிப்பேன், படம் பார்ப்பேன்… இப்போ சமீப காலமாக படிக்க நேரம் இல்லை. மனசுல ஏதோ ஒரு நினைப்பு ஓடிட்டே இருக்கு. ஆனா, சீக்கிரமே படிப்பேன்.  நீங்களும் வாசிக்கலாம்... நிறைய படம் பார்க்கலாம்.

ஜூலை 28, காலை 11:30 மணி:

கேள்வி : இடஒதுக்கீட்டில் கிரிமிலேயர் முறை கொண்டு வரவேண்டும் என எழுந்துள்ள கோரிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?

தொல்.திருமாவளவன் : கிரிமிலேயர் என்பது பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீடு. சமூக நீதி என்பதில் சமூக அந்தஸ்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு சமூக அந்தஸ்து வழங்குவது தான் சமூக நீதி. சமூக அந்தஸ்து யாருக்கெல்லாம் மறுக்கப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கு அந்த அந்தஸ்தை ஏற்படுத்தித்தர அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு வழங்க வேண்டியது அவசியம்.
பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீடான
கிரிமிலேயர் முறை மேலோட்டமாகப் பார்க்க நியாயமாகத் தின்றும். ஆனால் சமூக நீதி என்ற கோட்பாடு அதில் அடி வாங்கும். எனவே தான் கிரிமிலேயரை நாங்கள் எதிர்க்கிறோம்.

தலித் அரசியல் முன்னெடுத்தாலும், தமிழ் தேசிய கண்ணோட்டத்தில் இயங்குகிறீர்கள். இப்போது தலித் அரசியல் பேசுபவர்களுக்கும், தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கும் முரண் ஏற்பட்டுள்ளதே?

தமிழ் தேசியம் பேசுபவர்கள் மீது சாதி குறித்த புகார்களை அவர்கள் வைக்கிறார்கள். தமிழன் தான் தமிழனை அடிக்கிறார். என்ற கேள்வி நியாயம் தான். இதை சித்தாந்தங்களுடன் பொருத்திப்பார்த்து விவாதித்துதான் ஆகவேண்டும். சாதிப் பிரச்னைகளை பெரிதுப்படுத்தினால் ஒற்றுமை சிதைந்துபோகும் என்ற அச்சமும் இருக்கிறது. 'சாதி பேசினால் நட்பு சிதையும்; எல்லா ஜனநாயக சக்தியை அச்சப்படுத்தும்' என்ற அச்சமும் உள்ளது. இதை மீறி விவாதித்து விடைகாண வேண்டும்.

சுய சாதி பெருமிதம் தலித் மக்களிடையே அதிகரித்து வருகிறதா?

இது நீண்டகாலமாக இருக்கும் பிரச்னை. எல்லா சாதிகளுக்குமிடையே தடுப்புச்சுவர் இருக்கிறது. நிர்வாக காரணங்களுக்காக தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் என பிரிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு பிரிவிலும் பல சாதிகள் இருக்கிறது. எல்லா சாதிகளுக்கு இடையிலும் தடுப்புச்சுவர், தீண்டாமை இருக்கிறது. அது தலித் மக்களிடமும் இருக்கத்தான் செய்கிறது. ஊடக வெளிச்சத்தால் இது வெளியே தெரிகிறது. தலித் சமூகத்தில் 78 சாதிகள் தமிழகத்தில் இருக்கிறது. இதில் முரண்பாடுகள் இருக்கிறது. இதை ஒப்புக்கொண்டு விவாதித்து தீர்வை எட்ட வேண்டும்.

கேள்வி : உங்களிட. 10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தால் என்ன நலத்திட்டம் செய்வீர்கள்?
அமைச்சர் ஜெயக்குமார் : அடிப்படை கட்டமைப்பு வசதி முக்கியம். எனவே ரோடு, பாலம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவேன்.
கேள்வி : சென்னையில் இருந்து சேலத்துக்கு பல சாலைகள் இருக்கு. இப்போ 10 ஆயிரம் கோடி செலவுல எட்டு வழிச்சாலை எதற்கு?
அமைச்சர் ஜெயக்குமார் : இப்போது உருவான கட்டடங்கள், சாலைகள் எல்லாம் இப்படி அமைக்கப்படவை தான்.  தொலைநோக்கு பார்வையோடு இயங்க வேண்டும். வாகனங்கள் எண்ணிக்கை அடுத்த சில ஆண்டுகளில் 4 கோடியாகி விடும். சாலைகள் என்பது போக்குவரத்து தேவைக்கு அத்தியாவசியம். இதோடு மாநிலத்துக்கு முதலீடு வருவது நல்லது. அதற்கு உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்த வேண்டியது அவசியம்.


கேள்வி : அறிஞர் அண்ணா 4 வரிகளில் பிரச்சார உரையை நிகழ்த்தியது பிரபலம். அப்படி நீங்கள் செய்த சுவாரஸ்ய பிரச்சாரத்தைப் பற்றி சொல்லுங்களேன்? 

தமிழிசை : 'தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்'
'மழை வந்தால் குளம் நிரம்பும். குளம் நிரம்பினால் தாமரை மலரும்'
'இலைகள் துளிர்க்கிறதோ இல்லையோ...
சூரியன் உதிக்கிறதோ இல்லையோ...
பழங்கள் பழுக்கிறதோ இல்லையோ...
பம்பரம் சுழல்கிறதோ இல்லையோ...
தாமரை மலர்ந்தே தீரும்" 
இவை எல்லாம் சுவாரஸ்யமான பிரச்சாரங்கள் தான்.

உங்களைப் பற்றிய மீம்ஸ் பற்றி?

அமைச்சர் ஜெயக்குமார் : மீம் கிரியேட்டர்களுக்கு நாங்க ரெண்டு பேரும் தான் டார்கெட். ஒருமுறை ஒரு மீம் வந்துச்சு. என் தலை படத்தை போட்டு, பக்கத்துல என் தலையில முடி முளைச்ச மாதிரி இன்னொரு படத்தைப் போட்டு ரெண்டு போட்டோவுக்கு நடுவுல அஸ்வினி ஆயில் பாட்டிலை வைச்சுட்டாங்க. இந்த மீம்ஸை நான் என்
பேரன், பேத்தியோடு ரசித்துப்பார்த்தேன்.
அதே மாதிரி சகோதரி (தமிழிசையைப் பார்த்து) தாமரை மலர்ந்தே தீரும்னு சொன்னதுக்கு, எனக்கு முடி இருக்குற மாதிரி படத்தைப்போட்டு இப்படி நடந்தாலும் நடக்கும். அது நடக்காதுன்னு மீம் போட்டிருந்தாங்க. இதைப் பார்த்தும் நான் சிரிச்சேன். இவை எங்களை கிண்டல் செய்வதாக எடுத்துக்கொள்ளவில்லை. எங்களுக்கு பிபி இல்லாமல் பார்த்துக்கொள்கிறது.


தமிழிசை : மீம்ஸ் பற்றி கேட்டால் எங்கள் இருவரிடம் தான் கேட்க முடியும். என்னை வைத்து மீம்ஸ் போடுகிறார்கள். சமூக கருத்தோடு இருந்தால் அதை நான் மதிப்பேன். நிறம், முடியை வைத்துதான் மீம் போடுகிறார்கள். சிவப்பா, அழகா இருப்பவர்கள் மீம்ஸில் வரமாட்டார்கள் போல என நினைப்பதுண்டு. இந்த மீம்ஸ் என்னை காயப்படுத்துவதில்லை. மாறாக அதில் அவர்களின் பிம்பம் வெளிப்படுகிறது.


கேள்வி : அம்மா, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அமைச்சர் ஜெயக்குமார் : 

இவை மூன்றும் ஒரே அரசு தான். அம்மா ஆட்சி தான். இப்போதும் அம்மா ஆட்சி தான் நடக்கிறது.


திமுக தலைவர் கருணாநிதியிடம் உங்களுக்குப் பிடித்தது எது?

அவரது நகைச்சுவைத் திறன் எனக்குப் பிடிக்கும். சட்டமன்றத்தில் கேட்கும் கேள்விகளுக்கு நகைச்சுவையுடன் பதில் அளிக்கும்  தலைவர் கருணாநிதி  அது எனக்கு பிடிக்கும்.


கேள்வி : 8 வழிச் சாலைக்கு விவசாய நிலம் கையகப்படுத்துவதை ஆதரிக்கிறீர்கள். உங்களுக்கு நிலம் இருந்தால் கொடுப்பீர்களா?

தமிழிசை : எனக்கு நிலம் இருந்தால், நான் மகிழ்ச்சியாகக் கொடுப்பேன். சாலை என்பது பின்தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சிக்கு உதவும். எனவே நிலத்தை மகிழ்ச்சியுடன் கொடுப்பேன்.

---

'அரசியல் எனும் ஆயுதம்' எனும் தலைப்பில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், "மாணவப்பருவத்தில் நினைத்ததை சாதிக்க முடியும். வாள் முனையை விட பேனா முனை சக்திவாய்ந்தது. எனவே சமூகத்துக்கு நன்மை பயக்கும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும்," என்றார்.


 

தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், "மாணவப்பத்திரிகையாளர் திட்டம் மூலம் மிகச்சிறந்த பத்திரிகையாளர்களை விகடன் உருவாக்கி வருகிறது. இது உங்களுக்கு அரிய வாய்ப்பு. ஊடகம் உலகத்தையே ஆட்டிபடைக்கும் வல்லமை கொண்டதாக ஊடகங்கள் மாறியிருக்கிறது. எல்லோரும் ஊடகவியலாளர்களாக மாறிவிட்டோம். சமூக வலைதளம் மிகப்பெரிய வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்த சூழலில் சிறந்த செய்தியாளராக உருவாக இந்த பயிற்சி உங்களுக்கு பயன்படும்.
அரசியல் என்றால் கட்சி, தலைவர்கள், தொண்டர்கள் என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அதன் மீதான நிறை, குறை அடிப்படையில் தான் அரசியலைத் தீர்மானிக்கிறோம். உண்மையில் அரசியல் அதுவல்ல. அரசு தொடர்பான இயல் தான் அரசியல். அரசு மக்களால் உருவாக்கப்பட்ட நிறுவனம். அதைப்பற்றிய புரிதல் தேவை. அரசியல் சாக்கடை என்பது தவறான மதிப்பீடு. 
எல்லா நிர்வாகங்களுக்கும் தலையாய நிர்வாகம் அரசியல் நிர்வாகம். எல்லா வகையிலும் உச்சபட்ச அதிகாரம் கொண்டது அரசியல் தான். எல்லாவற்றையும் அடிப்படையாக கொண்டு இயங்கும் அரசியலில் குழுக்கள் தான் கட்சிகள். எனவே, கட்சி சித்தாந்தம், கொள்கைகள் குறித்த புரிதல் அவசியம். அதுதான் அரசியல்.

அதேபோல், மனிதநேயம், பெண்ணியம், விளையாட்டு, பொருளாதாரம் குறித்த  புரிதல்களும் உங்களுக்கு தேவை.  செய்தி சேகரிப்பது செய்தியை பதிவு செய்வது மட்டுமல்ல. சித்தாந்தங்களின் புரிதல்களுடன் செய்தி சேகரிப்பதே உங்கள் பணி இருக்க வேண்டும்," என்றார் தொல்.திருமாவளவன்.

---

கேள்வி - பதில் நிகழ்வில் மாணவப் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு தமிழக அமைச்சர் ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பதிலளித்து பேசினர்.
கேள்வி : பெரியாரிய எதிர்ப்பு, இடஒதுக்கீடு எதிர்ப்பு குரல்களும் எழத்துவங்கி இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
தொல்.திருமாவளவன் : பெரியார் அவர்களே 'நான் சொல்லும் கருத்தே இறுதியானது என ஏற்றுக்கொள்ள வேண்டாம். அதை விவாதித்து சரி என உங்களுக்குப் பட்டால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்' என்றுதான் சொல்லியிருக்கிறார். எந்த கருத்துக்கும் 100 சதவிகித ஆதரவு இருக்காது. எதிர்ப்பும் இருக்கும். எனவே எதிர்ப்பே கூடாது எனச் சொல்ல முடியாது. என்ன எதிர்க்கிறார்கள், ஏன் எதிர்க்கிறார்கள் எனப் பார்க்க வேண்டும். 
அம்பேத்கார், பெரியார் கருத்துகளில் எனக்கு எந்த வேறுபாடும் இல்லை. அவர்களை நான் முழுமையாக பின்பற்றுகிறேன். சமூகநீதியில் உடன்பாடு இல்லாதவர்கள் தான் அம்பேத்கரை, பெரியாரை எதிர்ப்பார்கள் என்பது என் கருத்து. பெரியாரை, அம்பேத்கரை எந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் அவர்கள் எதிர்க்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதுதான் முக்கியம்.

ஜூலை 28, காலை 9:00 மணி:

பயிற்சி முகாமின் இரண்டாம் நாளான முதல் நாள் நிகழ்வில் நீயா நானா கோபிநாத், 'உன்னை உணர்' எனும் தலைப்பில் பேசினார். அவர் பேசுகையில், "எதிர்பாராத பல சவால்கள் உங்களுக்கு உள்ளது. 15 வருடம் முன்பு எழுத தெரிந்தால் போதுமானது. ஆனால் ஜர்னலிஸத்தின் முகம் மாறி வருகிறது. ஒவ்வொருவரும் ஒரு ஊடகமாக மாறி இருக்கிறார்கள். இது மிகப்பெரிய மாற்றம். இந்த மாற்றத்துக்கு நீங்கள் தயாராவது அவசியம்.

முன்னர் பொய் செய்திகள் முதலில் பார்த்த உடன் தெரியும். ஆனால் இப்போது பொய் செய்திகளை அடையாளம் காண்பதில் சிரமம் இருக்கத்தான் செய்கிறது. இது பெரிய சிரமமாகப் பார்க்க வேண்டாம். இதில் தான் உங்களுக்கான பொறுப்பு அதிகரிக்கிறது. பொதுவாக கட்டமைக்கப்படும் பிம்பங்களுக்கு செய்தியாளர்கள் பலியாகக் கூடாது. எனவே விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்," என்றார்.

---

ஜூலை 27, மதியம் 3:00 மணி:

கலக்கப்போவது யாரு டீமைச் சேர்ந்த தீனா, ராமர், தங்கதுரை, வடிவேல் பாலாஜி, திவாகர், நாஞ்சில் விஜயன் மற்றும் நிகழ்ச்சியின் இயக்குநர் தாம்சன் ஆகியோர் பங்கேற்றனர்.

சோஷியல் மீடியாக்களில் வைரலான 'ஆத்தாடி என்ன உடம்பி' என்ற பாடலை பாடினார் ராமர். வடிவேல் பாலாஜி கானா பாடலை பாட... உற்சாகமானது முகாம்.

(தங்கதுரையிடம்) உங்களை பாதிச்ச சம்பவம் எது?
'வாய்ஸ் உங்கள் சாய்ஸ்'னு ஒரு நிகழ்ச்சி. வழக்கமாக விஜய், அஜித் வாய்ஸ் பேசச் சொல்வார்கள். ஆனா ஒருநாள் ஒரு வாய்ஸ் பேசச்சொன்னார்கள். சமாளிச்சு ஓடி வந்துட்டேன். அந்த சம்பவம் தான் பெரிய சம்பவம்.


(வடிவேல் பாலாஜியிடம்) 
வாய்ஸ் பேசும்போது எது கஷ்டம்? உங்க வாய்ஸ் மறந்து போச்சேன்னு வருத்தம் இருக்கா? 

என் வாய்ஸ் எது என்பதே எனக்கு தெரியவில்லை. அது வருத்தமும் இல்லை. ஆனால், அதை தேடிக்கொண்டிருந்தால் 30, 40 பேர் தாண்டி போயிடுவாங்க. 

உங்க காமெடி ஒரு டிரெண்டையே உருவாக்குகிறது. இதை எப்படி பார்க்கறீங்க?

இப்போ இங்கே காமெடி பண்ணாங்க. சில இடங்கல நீங்க சிரித்திருப்பீர்கள். சில நேரத்துல கோவம் கூட வந்திருக்கும். காமெடியை வைரல் ஆக்க வேண்டும் என ப்ளான் செய்து செய்யமாட்டோம். வைரலாவது மக்களால் தான்.


(ராமரிடம்)
இப்போ நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகிவிட்டீர்கள்? எப்படி ஃபீல் பண்றீங்க?

உங்களுக்கு பிடிச்சிருக்கா. பிடிச்சிருந்தா சந்தோஷப்படுறேன்.

ராமருக்கு இது 15 வருடம் போராட்டம். சிவகார்த்திகேயன் டைட்டில் வின் செய்த போது, அவரோடு பெர்ஃபாமன்ஸ் கொடுத்தவர் ராமர். இப்போது கிடைத்த வெற்றி அவரது 15 ஆண்டு உழைப்பு.

டபுள் மீனிங் டயலாக்க்கு வரவேற்பு இருக்கும்னா அதையும் செய்வீங்களா?

ஃபேமிலி ஆடியன்ஸை கவர என்ன செய்ய வேண்டும் என நினைத்து தான் ஸ்கிரிப்ட் செய்வோம். அப்படியெல்லாம் எழுத மாட்டோம்.

ஜூலை 27, மதியம் 1:00 மணி:

டைம்ஸ் நவ் பத்திரிகையாளர் ஷபீர் அகமது பேசுகையில், "மாணவப் பத்திரிகையாளர் வாய்ப்பு என்பது மிகப்பெரிய வாய்ப்பு. பல ஆளுமைகளை இந்த வாய்ப்பு தான் உருவாக்கியிருக்கிறது. 

பத்திரிகையாளர் பணி மக்கள் சேவை பணி என்றுதான் சொல்ல வேண்டும். 
பத்திரிகையாளருக்கு இருக்க வேண்டிய அடிப்படையான தகுதி, 'தெரிந்து கொள்ள வேண்டும்' என்ற தேடுதல். ஒரு பத்திரிகையாளர், சமூகத்தில் தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஒரு செய்தியாளர் மக்களை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டும். செய்தியாளராக உங்களுக்கு சமூக பொறுப்பும், அக்கறையும் மிக அவசியம்," என்றார்.

ஜூலை 27, காலை 12:00 மணி:  

ஃப்ரன்ட்லைன் இதழ் ஆசிரியர் விஜய்சங்கர் பேசுகையில், "விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் உங்களுக்கான அருமையான வாய்ப்பு. ஊடகங்களில் அச்சு ஊடகம் தான் அடிப்படை. தொலைக்காட்சி ஊடகம் முக்கியமானது தான்.  ஆனால் அடிப்படையானது அச்சு ஊடகம் தான். அதை தேர்வு செய்துள்ளது உங்களுக்கு நல்ல துவக்கமாக இருக்கும்.
மாநில மொழிகளில் அச்சு ஊடகங்கள் வளர்ந்து கொண்டே வருகின்றன. 


இப்போது செய்தி சேகரிக்க நவீன வசதிகள் கிடைத்துள்ளன. ஆனால் அது நமக்கு எப்படி பயன்படுகிறது என்றால் நெகட்டிவ்வான பதில் தான் கிடைக்கிறது. நம்மை தொழில்நுட்ப வசதிகள் சோம்பேறி ஆக்கியிருக்கிறது. ஊடகங்களுக்கு முக்கிய பணி இருக்கிறது. சமூக அக்கறையோடு கமர்ஷியலும் இருக்க வேண்டும். ஆனால் சமூக அக்கறை பிரதானமாக இருக்க வேண்டும். ஆனந்த விகடன் பல பிரச்னைகளை சமூக அக்கறையுடன் கையாள்கிறது. பத்திரிகையாளர் பணியை நீங்கள் பொது சேவை பணியாக கருதி பணியாற்ற வேண்டும். 


செய்தியாளராக 4 விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும்.


முதலாவது நீங்கள் கொடுக்கும் செய்தி, நம்பகத்தகுந்த செய்தி தானா என்பது மிக முக்கியம்.

அடுத்து, செய்தியில் உங்களின் விமர்சனப் பூர்வமான பார்வை அவசியம்.

மூன்றாவது, சமூக அக்கறையை மக்களிடம் வளர்க்க உங்கள் செய்தி பயன்பட வேண்டும். மக்களுக்கு உங்கள் செய்தி மூலம் கற்பிக்க வேண்டும்.

நான்காவதாக வாசகரை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் பணி உங்களுக்கு இருக்கிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

செய்தியாளர்களுக்கு தொடர்புகள் மிக முக்கியமானது. அதே நேரத்தில் தொடர்புகளுக்கு நீங்கள் பலியாகி விடக்கூடாது. நாம் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, 
செய்திகளை உறுதிப்படுத்துவது என்பது மிக அவசியம். அதேபோல், நீங்கள் பணியாற்றும் பகுதி மக்களின் சமூகம்,  அரசியல், கலாச்சார பின்னணியை அறிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஊடகம் சார்ந்த சட்டங்களை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். மொழி ஆளுமையை வளர்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்," என்றார்.

ஜூலை 27, காலை 11:00 மணி:  

மூத்தப்பத்திரிகையாளர் ஆர்.மணி பேசுகையில், "நாம் எதற்கு பேச வேண்டும். எழுத வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். எல்லாம் மக்களுக்காகத்தான் எழுதுகிறோம் என்பதை உணர வேண்டும். எழுதும் முன்னர் அது பெண்களை, குழந்தைகளை, சிறுபான்மையினர் மக்களை பாதிக்குமா என யோசித்து எழுத வேண்டும். அது மிக முக்கியம். உங்களுக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பு மிக அருமையான வாய்ப்பு. மகாத்மா காந்தி, இந்திய விவசாயத்தையும் நீங்கள் படிக்க வேண்டும். காந்தியை படிக்காமல் இந்தியாவை புரிந்து கொள்ள முடியாது. பத்திரிகையாளர் பாதுகாப்பில் 136வது இடம். முழு பாதுகாப்பு யாருக்கும் கிடையாது. பத்திரிகையாளர்களுக்கு அது இன்னும் அதிகமாக இருக்கிறது. உலகின் பல நாடுகளில் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. உங்கள் காதுகளையும், கண்களையும் நன்றாக திறந்து வையுங்கள். மற்றவர்கள் சொல்வதை அப்படியே நம்பிவிடாதீர்கள். எதிர்கருத்துகளுக்கும் செவி கொடுங்கள்" என்றார்.

ஜூலை 27, காலை 10:00 மணி:  

விகடன் மேலாண்மை இயக்குநர் திரு. பா. சீனிவாசன் அவர்கள் மாணவர்களுக்கு இந்த திட்டம் குறித்த பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார். 

ஜூலை 27, காலை 9:00 மணி:  

சென்னை மீனாட்சி திருமண மண்டபத்தில் விகடன்  மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2018 -19 தொடங்கியது.



Trending Articles

Sponsored