பனாமா பேப்பர்ஸ் ஊழல் விவகாரம்: வழக்கில் ஆஜராகாத நவாஸ் ஷரீஃப்



பனாமா பேப்பர்ஸ் ஊழல் விவகாரத்தில், இன்று ஆஜராகவேண்டிய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃப், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

Sponsored


உலகில் உள்ள பல முக்கியப் பிரமுகர்கள், ஊழல்செய்து சேர்த்த கறுப்புப் பணத்தைப் பாதுகாக்க, மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் முதலீடுசெய்து வருவதாக, 'பனாமா லீக்ஸ்' ஒரு பரபரப்பான செய்தியை வெளியிட்டது. உலகத்தையே பரபரக்கச்செய்த ஊழல் வெளியீட்டுப் பட்டியலில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃப்  பெயரும் சிக்கியிருந்தது பரபரப்பை அதிகப்படுத்தியது.

Sponsored


நவாஸ் ஷரீஃப் மட்டுமல்லாமல், அவரின் மகன்களும் இந்த ஊழல் வழக்கில் உள்ளதால், அவர்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த விசாரணையின்போது, கடந்த மே மாதம் ‘கூட்டு விசாரணைக் குழு’ ஒன்று நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டு விசாரணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், கடந்த ஜூலை மாதம் வழக்கின் இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, நவாஸ் ஷரீஃபை பிரதமர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவர்மீது குற்ற வழக்கும் பதிவுசெய்யப்பட்டது.

Sponsored


இந்நிலையில், இன்று நவாஸ் ஷரீஃபுக்குச் சொந்தமான சொத்துகள் குறித்து விசாரிக்கவேண்டி, அவரை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தேசியப் பொறுப்புடைமைக் குழுவின் முன் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், நவாஸ் ஷரீஃப் இந்த விசாரணையில் ஆஜராகவில்லை. லண்டனில் தங்கியுள்ளதால், பாகிஸ்தானுக்கு விசாரணைக்கு வர இயலவில்லை என நவாஸ் காரணமும் தெரிவித்துள்ளார். இதனால், வழக்கை வரும் 26-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.



Trending Articles

Sponsored