ராணுவத்தை பலப்படுத்தும் சீனா... உக்கிரமா... உதறலா? Sponsoredந்தியா - சீனா நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர பகையுணர்வு இன்னும் சிறிதளவுகூட குறைந்தபாடில்லை. கடந்த ஜூன் மாதம் இந்த மோதல் தொடங்கியதிலிருந்து, ஒவ்வொரு தரப்பும் தங்களுடைய படைப் பிரிவுகளைப் பலப்படுத்திக்கொண்டு, எதிர்தரப்பைப் பின்வாங்க அழைப்புவிடுத்து வருகின்றன.

''இந்தியா பாடம் கற்க வேண்டும்!''

Sponsored


இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்தப் பதற்றத்துக்கு என்ன காரணம்? இந்தியாவின் சிக்கிம் மாநிலம், பூடானின் டோகா லா, சீனாவின் டோங்லாங் பகுதிகள் ஒரு முனையில் சந்திக்கின்றன. இதில் சிக்கிம் மாநில எல்லைக்குள் சீன ராணுவம், அண்மையில் ஊடுருவி இந்திய ராணுவத்தின் இரண்டு பதுங்குக் குழிகளை அழித்தது. மேலும், பூடான் பகுதியை ஆக்கிரமிக்கும் வகையில் அங்குச் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டது. இதை இந்தியா தடுத்து நிறுத்தியது. இதனால் இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையே மோதல் உருவாகிய நிலையில், டோக்லாம் பகுதியில் இரு நாடுகளும் படைகளைக் குவித்தன. இதையடுத்து, 'இந்தியா தனது படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும்' எனச் சீனா தொடர்ந்து வலியுறுத்தியதுடன், போர் தொடுக்கப் போவதாகவும் தொடர்ந்து மிரட்டியது. இதனால் சிக்கிம் எல்லையில் தொடர்ந்து போர்ப்பதற்றம் நீடித்தது. இதற்கு, 'எல்லையிலிருந்து படைகளைத் திரும்பப் பெற முடியாது' என இந்தியா திட்டவட்டமாகக் கூறியது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே வார்த்தைப் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த ஜூன் - ஜூலை மாதங்களில் இரு நாடுகளும் டோக்லாம் பகுதியில் படைகளைக் குவித்திருந்த வேளையில், சீன ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் வு.கியான், “1962-ல் நடந்த போரிலிருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும்” என்றார். 

Sponsored


''இப்போதைய இந்தியா வேறு!''

இதற்கு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, “சமீபத்திய ஆண்டுகளில் நாடு ஏராளமான சவால்களைச் சந்தித்துள்ளது. ஆனால், ஒவ்வொரு சவால் மூலமும் நாடு மிகவும் வலிமையானதாக மாறி வருவதை நம்மால் பெருமையாகக் கூற முடியும். கடந்த 1962-ம் ஆண்டில் சீனாவுடன் ஏற்பட்ட போர் மூலம் இந்தியா ஏராளமான பாடம் படித்துள்ளது. ஆயுதப் படைகள் முழு பலத்துடன் இருக்க வேண்டும் என்பதே அது. ஏனெனில், தற்போதுகூட நமது அண்டை நாடுகளால் பல்வேறு சவால்களை நாடு எதிர்கொண்டு வருகிறது. 1962-ம் ஆண்டை ஒப்பிடுகையில், 1965 மற்றும் 1971-ம் ஆண்டு போர்களில் நமது படைகள் அதிக பலம் பெற்றிருந்தன. 1962-ம் ஆண்டு போரில் நாம் பல்வேறு துன்பங்களைப் பெற்றிருந்தாலும், பாகிஸ்தானுடனான 1965 மற்றும் 1971-ம் ஆண்டு போர்களில் நாம் வெற்றிபெற்றோம். 

ஆனால், தற்போதும் சில சவால்கள் இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். நமது நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைச் சிலர் குறிவைத்துள்ளனர். ஆனால், மேற்கு எல்லையோ அல்லது கிழக்கு எல்லையோ, எந்தப் பகுதியில் இருந்தும்வரும் சவால்களை எதிர்கொண்டு நாட்டைப் பாதுகாக்க நமது தீரமிக்க வீரர்களுக்குப் போதுமான வலிமை உண்டு என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். நாட்டின் பாதுகாப்புக்காக எவ்வித தியாகத்தையும் மேற்கொள்ள நமது ஆயுதப்படைகளால் முடியும். சுதந்திரம் பெற்ற ஆரம்ப காலத்தில் நாம் ஒரு நெருக்கடியைச் சந்தித்தோம். நமது அண்டை நாடு ஒன்று (பாகிஸ்தான்) காஷ்மீர் மீது ஒரு கண் வைத்திருக்கிறது. நமது நாட்டின் ஒரு பகுதி (ஆக்கிரமிப்பு காஷ்மீர்) பிரித்து எடுக்கப்பட்டதைத் தற்போதுகூட நம்மால் மறக்க முடியாது. அதை எப்படித் திரும்பப்பெறுவது என்பதே ஒவ்வோர் இந்தியரின் நோக்கமாக இருக்கிறது.

தீவிரவாதம் மற்றும் இடதுசாரி பிரிவினைவாதத்தால் நாடு மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு வருகிறது. எல்லைக்கு அப்பால் உள்ள சிலரும், இந்தியாவில் உள்ள சிலரும் கையில் ஆயுதங்களை ஏந்தி நாட்டின் வடக்குப் பிராந்தியத்தில் தீவிரவாதத்தைப் பரப்பி வருகின்றனர். இதற்கு எதிராக ராணுவம், சி.ஆர்.பி.எப். மற்றும் காஷ்மீர் போலீஸார் உள்ளிட்ட நமது பாதுகாப்புப் படையினர் ஏராளமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். எனினும், தற்போதும் சில இடங்களில் இத்தகைய தீவிரவாதச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. எனவே, தீவிரவாதத்துக்கு எதிராக இந்தச் சபையும், ஒட்டுமொத்த நாடும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும்” என்றார். 

''ஒரு கேடயமாகப் பயன்படுத்துகிறது!''

அருண் ஜெட்லி கருத்துக்குப் பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங், “1962 இந்தியாவுக்கும் 2017 இந்தியாவுக்கும் வித்தியாசம் உள்ளது என்று அவர் கூறுவது சரியே. அதேபோல்தான் சீனாவும் மாறிவிட்டது. இந்திய அரசு 1890 உடன்படிக்கையை மதிக்க வேண்டும். எல்லையைக் கடந்துவரும் இந்தியப் படைகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். எங்களுடைய இறையாண்மையைக் காக்க நாங்கள் நடவடிக்கைகளை எடுத்தே தீருவோம். பூட்டான் கூறியதை ஒரு கேடயமாக இந்தியா பயன்படுத்துகிறது. இந்தியப் படையினரின் சட்ட விரோதச் செயல்களுக்குப் பூட்டான் கூறியதை ஒரு கேடயமாக இந்தியா பயன்படுத்துகிறது. எது சரி... எது தவறு என்பதைக் குழப்ப முயற்சி செய்கின்றனர், இது விரயமான செயலே. டோக்லாம் பகுதியில் இந்தியப் படை நுழைந்ததைப் பூட்டான் முன்பு அறிந்திருக்கவில்லை. ஆனாலும், இந்திய - சீன தரப்பினரிடையே ராஜாங்க தகவல் தொடர்புகள் வழக்கம்போல் நிதானமாகவே உள்ளன” என்றார்.

இப்படியானச் சூழ்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீனப் பிரதமர் ஜின்பிங்கும் ஜெர்மனியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், போருக்கான சாத்தியங்களும், காரணங்களும் அப்படியே நீடிக்கின்றன. 

''சீன ராணுவத்தைத் தரம் வாய்ந்ததாக மாற்ற வேண்டும்!'' 

இந்த நிலையில், சீன அதிபராக இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்பிங், கடந்த 26-ம் தேதி இரவு உயர் ராணுவ அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், “கட்சிக்கு முற்றிலும் விசுவாசமாக இருங்கள். போர்களில் எப்படி வெற்றிபெறுவது என்பதில் கவனம் செலுத்துவதன்மூலம் போருக்கான ஆயத்த நிலையைத் தீவிரப்படுத்துங்கள். சீர்திருத்தங்களை, புதுமைகளை முன்னெடுத்துச் செல்லுங்கள்” என்றார். தொடர்ந்து அவர், “ராணுவத்தில் கட்சியை வலுப்படுத்துங்கள். போருக்கான ஆயத்தப் பயிற்சியைத் தீவிரமாக்குங்கள். எதிர்காலத்தில் ராணுவ அபிவிருத்திக்கான பிரச்னைகளைக் கவனமாகக் கையாளுங்கள், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் எழுந்த உணர்வுகளைச் செயலுக்குக் கொண்டு வாருங்கள். ராணுவத்தைப் பலம் வாய்ந்ததாகக் கட்டமைப்பதில் கவனம் செலுத்துங்கள். ராணுவத்தை நவீனமயமாக்க வேண்டும். 21-ம் நூற்றாண்டின் மத்தியில் உலகின் தரம்வாய்ந்த ராணுவமாகச் சீன ராணுவம் உருவாக வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். 

தற்போதையை சூழலில், இரு நாடுகளுமே போரில் ஈடுபடுவது சாத்தியமில்லாத விஷயம். சுற்றிலும் பகைவர்களை வைத்துக்கொண்டு சீனா இந்தியாவுடன் நிச்சயமாகப் போரில் ஈடுபட முடியாது என்கிற குரல்களும் எழத்தான் செய்கின்றன.Trending Articles

Sponsored