வேலைவாய்ப்பு, வாகனம் ஓட்டுதல், விளையாட்டு மைதானங்களில் அனுமதி... முன்னேறும் சவுதிப் பெண்கள்!



‘விஷன் 2030' திட்டத்துக்குச் சுறுசுறுப்புடன் தயாராகிவருகிறது, சவுதி அரேபியா. 

Sponsored


எண்ணெய் உற்பத்தியில் மட்டுமே கவனம் செலுத்திவந்த சவுதி அரேபியாவுக்கு, பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. இதனைச் சரிசெய்ய, பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருகிறது. பொருளாதார ரீதியான இந்த மாபெரும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பெண்களின் உரிமை தொடர்பாக பல்வேறு திட்டங்களை அந்நாட்டு அரசு செயல்படுத்தப்போகிறது. சவுதி மன்னர் சல்மான், பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மானை நியமித்து, பெண்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். 

Sponsored


அங்கே ஆண் துணையில்லாமல் பொதுவெளியில் செல்லவே தடை இருந்தது. வாகனம் ஓட்டவோ சுத்தமாக அனுமதி கிடையாது என்ற நிலை இருந்தது. இதற்காக, அங்கிருக்கும் பெண்கள் தொடர்ந்து போராடிவந்தனர். கடந்த செப்டம்பர் மாதம்தான், பெண்களும் வாகனம் ஓட்டலாம் என அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 30 வருட போராட்டத்துக்குப் பிறகு, சவுதி அரேபியா பெண்களுக்கு கிடைத்த வெற்றி இது. இந்தத் திட்டம் 2018 ஜூன் முதல் நடைமுறைக்கு வருகிறது. இனி, சவுதிப் பெண்களும் வாகனம் ஓட்டலாம். எனினும், அவர்களின் ஓட்டுநர் உரிமம்குறித்து பரிசீலிக்க, தனி ஆய்வுக் குழு அமைக்கப்படுகிறது. 

Sponsored


தற்போது, அடுத்த வருடம் நாட்டின் மூன்று முக்கிய விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் போட்டிகளைக் காண, பெண் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் தலைநகரமான ரியாத், ஜித்தாஹ், தம்மம் ஆகிய விளையாட்டு மைதானங்களில் பெண் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் 23-ம் தேதி, சவுதி அரேபியாவின் தேசிய தினம் கொண்டாடப்பட்டபோது, ரியாத் நகரிலுள்ள ஒரு கால்பந்து விளையாட்டு மைதானத்தில் முதன்முறையாக, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஜூலை மாதம், பள்ளி மாணவிகள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள திரையரங்குகளில் பெண்களுக்கு அனுமதி வழங்கவும்  அந்நாட்டு அரசு  ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. பெண்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் இத்தகைய திட்டங்களுக்கு, ஒரு தரப்பினர்  எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.  ஆனால், நாட்டின் பொருளாதார நிலையை சீரமைக்க, பெண்களின்  பங்களிப்பு அவசியம் என்ற நிலைப்பாட்டுடன் தான் செயல்பட்டுவருவதாக அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் கூறியுள்ளார்.

ஒரு பெண் கல்வி கற்கவும், பயணம் செல்லவும், வேலைக்குச் செல்லவும் தன் குடும்பத்தில் இருக்கும் ஆண்களின் அனுமதி பெறவேண்டும். அது தந்தையாகவோ, அண்ணனாகவோ அல்லது கணவனாகவோ இருக்கலாம். இதுதான் சவுதியில் இருக்கும் நடைமுறை. ஆனால், விஷன் 2030 திட்டத்தின்கீழ், பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, அங்கே வேலை செய்யும் சவுதி பெண்களின் எண்ணிக்கை சராசரியாக 22% இருக்கிறது. இதனை 30 சதவிகிதமாக அதிகரிப்பதாக அறிவித்துள்ளார்கள். உலக அளவில் பாலின சமத்துவத்தில் பின்தங்கியுள்ள நாடுகள் அறிக்கையில், சிரியா, பாகிஸ்தான், ஏமன் ஆகியவற்றை அடுத்து, நன்காவது இடத்தில் சவுதி அரேபியா இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது, வாகனம் ஓட்ட அனுமதிப்பது, விளையாட்டு மைதானங்களில் அனுமதி என தற்போது எடுக்கப்படும் முடிவுகள், சர்வதேச அளவில் சவுதி அரேபியாவின் நிலையை உயர்த்தும். பெண்களுக்கு அளிக்கப்படும் மதிப்பு மேலும் பல திட்டங்களில் தொடரும் என நம்புவோம்!



Trending Articles

Sponsored