இரும்பு மனுசியின் இளகிய இதயம்... பாகிஸ்தானின் இரும்புப் பெண்மணி முனிபா மஸாரி! #MunibaMazariSponsored'பாகிஸ்தானியப் பெண்களின் உண்மை முகம்', 'இரும்புப் பெண்மணி' எனப் பாராட்டப்படுபவர், முனிபா மஸாரி. 

தாய்மை அடைதலில் சிக்கல், விவாகரத்து, உடல் உறுப்பு செயலிழப்பு, புறக்கணிப்புகள் என எல்லாவற்றையும் எதிர்கொண்டவர் முனிபா. பாகிஸ்தானின் ரஹிம்யர் கான் மாவட்டத்தில் 1987 மார்ச் 3-ம் தேதி பிறந்தவர். கலைத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவருக்கு 18 வயதிலேயே திருமணமானது. 2007-ம் ஆண்டு கணவருடன் தன் சொந்த ஊருக்கு வரும்போதுதான், அந்தப் பயங்கர விபத்து நிகழ்ந்தது. ஓட்டுநர் எதிர்பாராத விதமாகத் தூங்கிவிட, அவர்களின் கார் கால்வாயில் வீழ்ந்தது. முனிபாவின் கணவர் அந்த விபத்திலிருந்து தப்பிவிட்டார். ஆனால், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த முனிபாவை அங்கேயே விட்டுவிட்டுப் போய்விட்டார். நீண்ட நேரமாக உதவிக்கு யாருமின்றி காருக்குள் கிடந்தார் முனிபா. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ஆட்கள் வந்தார்கள். ஆனால், அந்த நகரில் அம்புலன்ஸ் கிடைக்காததால் ஜீப்பிலேயே மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். 

Sponsored


சென்ற மருத்துவமனையிலோ முதலுதவி வசதிகள்கூட இல்லை. வேறு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லுங்கள் என்றார்கள். மீண்டும் பயணம். அடுத்த மருத்துவமனையில் முனிபாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், ''இவர் இன்னும் கொஞ்ச நேரத்தில் இறந்துவிடுவார். சிகிச்சை அளிப்பதில் பயனில்லை'' என்றார்கள். மூன்றாவதாக, கராச்சியில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார் முனிபா. ஒருவழியாக அங்கே சிகிச்சை ஆரம்பித்தது. 

Sponsored


இதுகுறித்து ஒரு மேடை நிகழ்ச்சியில் பேசிய முனிபா, ''விபத்து நிகழ்ந்தபோது எனக்குக் கால்கள் இருப்பதையே என்னால் உணரமுடியவில்லை. எலும்புகள் எல்லாம் நொறுங்கிப்போனதாக நினைத்தேன். அதைவிட எனக்கு எல்லாமே என நம்பியிருந்த உறவு என்னை விட்டுப்போனது மிகுந்த வலியைத் தந்தது. நான் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவள். எனது திருமணம் பெற்றோரின் ஆசைப்படி நடந்தது. பொதுவாகவே பெண்கள், தங்கள் திருமணம் பற்றிய கருத்துகளைப் பகிரும் சுதந்திரம் இங்கில்லை. ஆகையால், நானும் திருமணத்துக்கு மறுப்பு தெரிவிக்காமல் சம்மதித்தேன். எனது திருமண வாழ்க்கை சந்தோஷமாக இல்லை. திருமணமான இரண்டு வருடத்தில் அந்த விபத்து நடந்தது. விபத்தில் தப்பிய கணவர், என்னைக் காப்பாற்றாமல் சென்றதற்காக இப்போது சந்தோஷப்படுகிறேன். தினமும் அவர் நலனுக்காகக் கடவுளை வேண்டுகிறேன். விபத்து நடந்த சில நாள்களிலேயே அவர் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இந்தச் செய்தியைக் கேட்டதும் அவருக்கு எனது வாழ்த்துகளைக் குறுஞ்செய்தியாக அனுப்பினேன்" என்றபோது அந்தத் தன்னம்பிக்கை மனுசியின் கண்களில் சில துளி கண்ணீர். 

இரண்டு ஆண்டு தீவிர சிகிச்சை, மூன்று பெரிய அறுவை சிகிச்சை, இரண்டு சிறிய அறுவை சிகிச்சைகளைத் தாண்டி, இன்றைக்குப் பலருக்குத் தன்னம்பிக்கை உதாரணமாக முனிபா இருக்கக் காரணம், அவரின் தாயார். அவர்தான் முனிபாவை ஊக்குவித்துக்கொண்டே இருந்தார். முனிபாவால் இனி நடக்கவே முடியாது, குழந்தையும் பெற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லிவிட, அவருக்குக் கால்களாகச் செயல்பட்டவர் தாயார்தான். 

தண்டுவடத்தில் ஏற்பட்ட பிரச்னையால் தான் தாயாக முடியாது என்று மருத்துவர்கள் கூறியதுதான் முனிபாவின் மிகப்பெரிய கவலை. 'இந்த உலகில் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோர் இல்லாமல் இருக்கிறார்களே. அவர்களில் ஒரு பிள்ளை என்னை அம்மா என்று அழைக்கலாமே' என்று நினைத்தார். ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவுசெய்து அதற்கான பதிவுகளையும் செய்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து அவருக்கு அழைப்பு வந்தது. 'பாகிஸ்தானில் பிறந்து இரண்டே நாள்களான ஆண் குழந்தை ஒன்றுள்ளது. நீங்கள் விரும்பினால் அந்தப் பிள்ளையைத் தத்தெடுக்கலாம்' என்றார்கள். உடனடியாகச் சம்மதம் தெரிவித்து அந்தக் குழந்தையைத் தத்தெடுத்தார் முனிபா. எல்லா வசதிகளும் உள்ளவர்களே தத்தெடுப்புக்குத் தயங்கும்போது, உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சிக்கல்களை எதிர்கொள்ளும் முனிபா, ஒரு குழந்தையைத் தத்தெடுத்தது அவரின் தன்னம்பிக்கைக்கும் தாய்மை உணர்வுக்கும் சிறந்த உதாரணம். 

இன்று, 'முனிபாஸ் கேன்வாஸ் - உங்கள் சுவர்கள் வண்ணங்களை உடுத்தட்டும்' (Muniba's Canvas - Let your wall wear colors) என்கிற அறிவிப்புடன் இணையதளத்தில் அவருடைய ஓவியங்கள் விற்பனையில் சாதனை படைக்கின்றன. பல கண்காட்சிகளில் இவரின் ஓவியங்கள் விற்றுத் தீர்கின்றன. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில முன்னாள் ஆளுநர் சல்மான் தசீர், முனிபாவின் ஆரம்ப காலத்து ஓவியங்கள் அனைத்தையும் வாங்கிக்கொண்டார். 

உணவுச் சுகாதாரம், ஏழை மாணவர்களின் ஆரோக்கியம், கல்வி, பெண்களின் சுதந்திரம், மாடலிங், டிவி ஆங்கரிங், பாடகர் எனப் பல துறைகளில் கால் பதித்துள்ளார் முனிபா மஸாரி. ஐக்கிய நாடுகளின் அமைப்பு, 2015- ம் ஆண்டு அதிகாரம் மற்றும் பாலின சமத்துவத்துக்கான நல்லெண்ணத் தூதராக முனிபாவை நியமித்தது. 2015-ம் ஆண்டு பிபிசி வெளியிட்ட சிறந்த 100 பெண்கள் பட்டியலில் முனிபா மஸாரி இடம்பிடித்தார். போர்ப்ஸ் பத்திரிகையின் '30 அன்டர் 30' என்ற பட்டியலில் 2016-ம் ஆண்டு மீடியா மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் இடம்பிடித்தார். 

உலகப் பெண்களுக்கு உதாரணமாக வலம்வருகிறார் முனிபா மஸாரி! 


முனிபாவின் எழுச்சிமிக்க பேச்சுகளிலிருந்து சில... 


1. என்னுடைய கதை எப்படி முடியும் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அதில் ஒருமுறைகூட 'நான் தோற்றுவிட்டேன்' என்ற வாக்கியத்தைப் படிக்க முடியாது. 

2. உனது வாழ்வில் நீ சந்திக்கும் கடினமான போராட்டம் எது என்றால், அது நீயாக இருக்க முயலும் போராட்டமே. 

3. எனக்குள்ளே இருக்கும் தீ என்னைச் சுற்றி இருக்கும் தீயைவிடப் பிரகாசமாக இருப்பதால்தான் நான் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். 

4. உங்கள் மதிப்பையும் திறமைகளையும் சந்தேகித்தவர்களுக்கு உங்கள் வெற்றியைச் சமர்ப்பியுங்கள். 

5. என் ஐந்து வயது மகன், ஒரு பெண்போல பலமாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறான். உண்மையான ஒரு மனிதர், பெண்களைத் தாக்கவோ இகழவோ மாட்டார். 

6. ஓர் அற்புதமான கலை, மிகவும் கசப்பான அனுபவங்களிலிருந்தும் வேதனைகளிலிருந்தும் உருவாகிறது. 

7. ஆரோக்கியமான மனநிலை வேண்டும் என்றால், எப்போதும் பாசிட்டிவாக இருங்கள். உங்கள்மீது பாசிட்டிவ் எண்ணங்கள் மற்றும் நம்பிக்கைகள்கொண்டவர்களை உங்களைச் சுற்றி இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். 

8. உறுதி, தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் துணிவான குரல்கொண்ட எந்தப் பெண்ணும் அனைவரின் ரோல்மாடலாக இருக்கலாம். 

9. எங்கு ஒரு சக்கரம் இருக்கிறதோ, அங்கே ஒரு வழி இருக்கிறது. 

10. நான் ஒரு ஹீரோவைக் கடந்துவரவில்லை. அதனால், நானே ஹீரோவாக இருக்க விழைகிறேன். Trending Articles

Sponsored