‘மாற்றத்தின் முதல்படி!’ ஆஃப்கானில் ‘பெண்ணியல்’ பட்டம்பெற்ற காபூல் மாணவர்கள்SponsoredPhoto Courtesy: AFP

ஆஃப்கானிஸ்தான் நாட்டில், மேல்சட்டை மற்றும் குட்டைப் பாவாடையோடு ஹை ஹீல்ஸ் அணிந்துகொண்டு பெண்கள் வாழ்ந்தார்கள் என்று கூறினால், உங்களால் நம்பமுடிகிறதா. ஆனால், 1960-ம் ஆண்டுகளிலேயே அப்படி வாழும் சூழ்நிலை இருந்தது. பிறகுதான், கொஞ்சம் கொஞ்சமாக  தாலிபான்களின் ஆதிக்கம் பரவி, பெண்கள் ஒடுக்கப்பட்டார்கள். இந்த 2017-ம் ஆண்டில் அங்கே ஒரு பெண் உடல் முழுவதையும் போர்த்திக்கொண்டுதான் வீட்டைவிட்டு வெளியில் வரமுடியும். 1994-ம் ஆண்டு முதல் தாலிபான் பிடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தானில், கடந்த 20 ஆண்டுகளாகப் பெண்களின் முன்னேற்றம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது

Sponsored


2015-ம் ஆண்டின் மனித உரிமை ஆணைய அறிக்கையின்படி, ஆஃப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளின் எண்ணிக்கை 5132. இதில் 241 பெண்கள் கொல்லப்பட்டனர். இப்படிப் பெண்களின் சுதந்திரம் கேள்விக்குறியாக இருந்த நிலையில்தான் அதே ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதல்படி, ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக பாலினம் மற்றும் பெண்ணியல் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, இந்தப் படிப்பில் 7 மாணவர்கள், 18 மாணவிகள் என மொத்தம் 22 பேர் முதுகலை பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் கல்வி, சுதந்திரம் தொடர்ந்து மறுக்கப்பட்டுவரும் ஆப்கானில், இது ஓர் ஆச்சர்ய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். 

Sponsored


தாலிபான் தீவிரவாதம் அபரிமிதமாக ஆதிக்கம் செலுத்திவந்த காலம் 1996 முதல் 2001 ஆண்டு வரை. இந்தக் காலகட்டத்தில், இதுபோன்ற ஒரு முயற்சியை நினைத்தும் பார்த்திருக்க முடியாது. இன்றும் பெரும்பாலான பகுதிகளில், ஆணின் துணையில்லாமல் பெண் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாது. வீட்டிற்குள் பெண்களுக்கு நடக்கும் அடக்குமுறையும் அதிகம். ஆனால், பெண்களின் உரிமை குறித்துப் பேசும் ஒரு படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு, பட்டமளிப்பு விழா வரை வந்துள்ளது. பெண்ணியக் கருத்தாக்கம், ஊடகம், சமூகம், பெண் சுதந்திரம், அரசியல் போன்ற பல்வேறு தலைப்புகளில் ஆஃப்கானில் பெண்களின் நிலையை கருத்தில்கொண்டு, ஓர் இஸ்லாமிய நாட்டுக்கு ஏற்றவாறு  வடிவமைக்கப்பட்டது இந்தப் படிப்பு. இந்த இரண்டு ஆண்டு முதுகலை பட்டப்படிப்பின் முதல் பட்டமளிக்கும் விழா, கடந்த ஞாயிற்றுக்கிழமை (05-11-2017) நடைபெற்றது.

இதில் பட்டம்பெற்ற மாணவர்களில் ஒருவரான முஜ்தாபா ஆரிஃபி (Mustaba Arifi), ’எங்கள் சமுதாயத்தில் பெண்களின் நிலை எப்படி உள்ளது என்பதை இந்தப் படிப்பின்மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. மேற்கத்திய நாடுகள் பாலினச் சமத்துவத்தில் எத்தகைய வளர்ச்சி அடைந்திருக்கிறதோ, அத்தகைய நிலையை நாங்களும் அடைவதற்கான சாத்தியங்கள் உள்ளன. இது மாற்றத்துக்கான முதல் படி” என்று  உற்சாகமாகக் கூறினார்.

சஜியா சதிக் (Sajia Seddiqui) என்ற மாணவி, “மிகவும் குறுகிய காலத்தில், பெண்களின் முன்னேற்றத்தில் பெரிய மாற்றங்களை எதிர்ப்பார்க்க முடியாது. ஆனால், இதுபோன்ற படிப்பின்மூலம் எங்கள் சமூகத்தில் உள்ள பெண்களுக்குச் சின்னச் சின்ன மாற்றங்களைக் கொண்டுவர உதவ முடியும் என நம்புகிறேன்.” என்றார்.

பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமை, விளையாட்டு மைதானத்தில் அனுமதி, பெண்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிப்பு போன்ற விஷயத்தில் சவுதி அரேபியா கவனம் செலுத்திவருகிறது. அந்த வரிசையில், தற்போது ஆஃப்கானிஸ்தானும் பெண்கள் குறித்த படிப்புக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.Trending Articles

Sponsored