” கம்யூனிஸம்... கட்டுக்கோப்பு... 23 நிமிட உரை!” - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன்- தொடர் -1Sponsoredசீனா என்றவுடன் உங்களுக்குச் சட்டென்று என்னென்ன விஷயங்கள் நினைவுக்கு வரும்..?  மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடு, அண்டை நாடுகளின் எல்லையில் அவ்வப்போது ஆக்கிரமிப்பு செய்து வம்புக்கு இழுக்கும் அதன் முரட்டுத்தனமான ராணுவம், அரசையும் ஆள்பவர்களையும் எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாத ஒடுக்குமுறை அரசாங்கம், உள்நாட்டில் நடக்கும் நல்லது கெட்டது வெளியில் கசிந்துவிடாதபடி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் ஊடகங்கள், ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களுக்குத் தடை எனப் பெரும்பாலும் நெகட்டிவ் சமாசாரங்கள்தானே..? ஆனால், மேற்கூறிய அத்தனை நெகட்டிவ் சமாசாரங்களையும் தனக்கான பாசிட்டிவான விஷயமாக மாற்றிக்கொண்ட சீனாவை, இன்னும் 30 ஆண்டுகளில் உலகின் வல்லரசாக்கிவிட வேண்டும் எனத் துடியாய்த் துடிக்கிறார் அந்த நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங். 

இது, சாத்தியமா என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ... இல்லையோ... சர்வதேச அரசியல் ஆய்வாளர்களும், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் 'அது சாத்தியம்தான்' எனத் தலையை ஆட்டுகின்றனர். அதற்கான முக்கியக் காரணமாக, அவர்கள் சுட்டிக்காட்டுவது சீன அதிபர் ஜி ஜின்பிங், மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு அப்பதவியில்  நீடிக்கும் வகையில் அந்த நாட்டின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதையும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சாசனத்தில் அவரது சித்தாந்தம் இடம் பெற்றுவிட்டதையும்தான். அந்த அளவுக்கு இன்றைய தேதிக்கு உலகின் மிக அதிகாரம்படைத்த தலைவராக விஸ்வரூபமெடுத்து நிற்கத் தொடங்கியிருக்கிறார் ஜின்பிங்.

Sponsored


Sponsored


சீனாவில் வழக்கமாகச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி, அக்கட்சியின் 19-வது தேசிய மாநாடு சென்ற (அக்டோபர்) மாதம் 17-ம் தேதி தொடங்கி ஒரு வாரகாலம் நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில்தான், 'அரசியல், பொருளாதாரம், ராணுவம், சுற்றுச்சூழல் என முக்கிய சமாசாரங்கள் அனைத்திலும் உலகை வழிநடத்தும் வல்லமைமிக்க நாடாகச் சீனா உருவெடுக்க இதுவே தருணம்' என்று அறிவித்து, இதுநாள்வரை உலக 'டான்' ஆக... ஸாரி வல்லரசாகத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கும் அமெரிக்காவை அசால்ட்டாகத் தட்டிவிட்டுச் செல்லும்விதமான திட்டங்களையும் அறிவிப்புகளையும் ஜின்பிங் வெளியிட்டதை வெலவெலத்துப் போய் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் இதர நாட்டுத் தலைவர்களும்.

ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதிலிருந்தே அந்த நாட்டுக்குச் சனி பிடிக்க ஆரம்பித்துவிட்டது. அதிபர் பதவிக்கு வரும் முன்பும், வந்த பின்பும் ட்ரம்ப் வெளியிட்ட கோக்குமாக்கான அறிவிப்புகளுக்கும் திட்டங்களுக்கும் உள்நாட்டிலேயே ஏகத்துக்கும் எதிர்ப்புகள் கிளம்ப... உலக நாடுகள் மற்றும் தலைவர்கள் மத்தியில் இதுநாள்வரை அமெரிக்காவுக்கு இருந்துவந்த மதிப்பு மெள்ளமெள்ளக் குறைந்து வருகிறது. மேலும், ஆப்கானிஸ்தான், ஈராக் என உலகின் பல இடங்களில் மூக்கை நுழைத்ததனால் ஏற்பட்ட பிரச்னைகள், பொருளாதார இழப்புகள் போன்ற காரணங்களால் இப்போதைக்கு உள்நாட்டு விவகாரங்களில் மட்டும் அதிகக் கவனம் செலுத்தப்போவதாக ட்ரம்ப் அறிவித்துவிட்டார். இந்தச் சூழலில் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு அதிபர் ஜின்பிங், தன்னை ஒரு சிறந்த உலகத் தலைவராகவும், சீனாவை ஒரு பொறுப்புமிக்க உலகின் வல்லரசு நாடாகவும் காட்டுவதற்கான பிம்பங்களை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டார். 

ட்ரம்ப் - ஜின்பிங்

இதுநாள்வரை, அமெரிக்க அதிபருக்கு அடுத்தபடியாக ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மன் போன்ற நாடுகளும், அவற்றின் தலைவர்களும்தான் உலகின் வசீகரத்தைப் பெற்றிருந்தனர். ட்ரம்ப்புக்குத்தான் 'கட்டம்' சரியாக இல்லையென்றால், ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்க்கல், பிரிட்டனின் தெரசா மே போன்ற தலைவர்களுக்கும் உள்நாட்டிலேயே எதிர்ப்பு. அவ்வளவு ஏன்..? அமெரிக்காவுக்குக் கடும் சவால் விடுத்துக்கொண்டிருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும்கூட, சீன அதிபர் ஜின்பிங்குக்கு இருக்கும் அளவுக்கான அரசியல் அதிகார ஸ்திரத்தன்மை மற்றும் (நாட்டின்) பொருளாதாரப் பாதுகாப்பு நிலைமை இல்லை. எனவேதான், போட்டியாளரே இல்லாமல் உலகின் சர்வவல்லமை மிக்கத் தலைவராகக் கிடுகிடுவென வளர்ந்துகொண்டிருக்கிறார் ஜின்பிங். 

சீனாவில் பல கட்சி ஜனநாயகமெல்லாம் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே ஆள முடியும். எனவே, அந்த நாட்டில் ஒவ்வோர் ஐந்தாண்டுகளுக்கும் ஒருமுறை நடைபெறும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அந்த நாட்டு மக்களால் மட்டுமல்ல; இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளாலும் பார்க்கப்படும். அப்படித்தான் கடந்த அக்டோபர் மாதம் பெய்ஜிங்கில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது தேசிய மாநாடும் உலகின் கவனத்தை ஈர்த்தது. 

கம்யூனிஸப் பாதையிலிருந்து விலகல் இல்லை!

இம்மாநாட்டில் மூன்று மணி நேரம் 23 நிமிடங்களுக்கு உரையாற்றிய ஜின்பிங், "இந்தப் புது யுகத்தில் சீனப் பண்புகளோடு கூடிய சோஷலிசம், நாட்டை உலகில் பெரிய சக்தியாக்கி இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாகச் சோர்வடையாமல் மேற்கொண்ட போராட்டத்தினால்தான் சீனா, உலக அரங்கில் இன்று உறுதியுடன் மிக உயரத்தில் வளர்ந்து நிற்கிறது. அரசியல், பொருளாதாரம், ராணுவம் மற்றும் சுற்றுச்சூழல் என முக்கியப் பிரச்னைகளில் உலகை வழிநடத்திச் செல்லும் ஒரு வலிமைமிக்க சக்தியாக சீனா தன்னை மாற்றிக்கொள்வதற்கான சரியான தருணம் இது. சீனாவின் வளர்ச்சியில் இது ஒரு புதிய வரலாற்று திருப்புமுனை" என்று சொல்லி, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான கட்சியின் முன்னுரிமை செயல் திட்டங்களை வெளியிட்டார்.

இதில் முக்கியமாகச் சீனாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், உலக நாடுகளுடனான வர்த்தகத்தை அதிகரிக்கும் விதமான நடவடிக்கைகளைப் பட்டியலிட்ட ஜின்பிங், உலகத்துடனான தன் கதவுகளைச் சீனா மூடிக்கொள்ளாது என்றும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான தடைகளைக் குறைப்பது உள்ளிட்ட மேலதிக பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார். 

மேலும், சீனாவின் தற்போதைய ஒட்டுமொத்த அரசியலமைப்பில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்போவதில்லை என்று கூறிய அவர், மற்ற நாடுகளின் அரசியலமைப்பை இயந்திரத்தனமாகச் சீனாவும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று சொன்னதோடு, சீனா தொடர்ந்து இதே கட்டுக்கோப்பான கம்யூனிஸப் பாதையிலேயே செல்லும் என்பதையும், ஜனநாயக முறையிலான அரசியலமைப்பை இப்போதைக்கு நினைத்தே பார்க்க முடியாது என்பதைச் சீன மக்களுக்கு மட்டுமல்ல, உலகுக்குமே தனது உரைமூலம் திட்டவட்டமாக உணர்த்திவிட்டு அமர்ந்தார். 

அரசியல் சாசனத்தில் ஜின்பிங் சித்தாந்தம்! 

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சீனக் கம்யூனிஸ கட்சியின் 19-வது மாநாடு,  அக்டோபர் 24-ம் தேதியுடன் நிறைவடைந்தது. நிறைவு நாளன்று ஜின்பிங் மேலும் ஐந்து ஆண்டுகள் சீன அதிபர் பதவியில் நீடிக்கும் வகையில், கட்சியின் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட்டது. மேலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட்டு, ஜின்பிங்கின் 'புதிய சகாப்தத்துக்கான சீனப் பண்பு நலன்களுடனான சோஷலிசம்' என்னும் சித்தாந்தம் சேர்க்கப்பட்டது.

சீனக் கம்யூனிஸ மாநாட்டில்...

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சாசனத்தில் ஜின்பிங்கின் பெயரும், அவரது சித்தாந்தமும் இடம்பெற்றுவிட்டதால் அவர், கட்சியின் நிறுவனரான மாசேதுங், அவரைப் பின்தொடர்ந்து வந்த டெங் ஜியாவோபிங் ஆகியோரின் வரிசையில் இடம்பிடித்து விட்டார்.

இதனிடையே, அடுத்த ஐந்தாண்டுகளுக்குக் கட்சியை வழிநடத்திச் செல்வதற்குப் புதிதாக ஒரு மத்தியக் குழுவை இம்மாநாடு தேர்வு செய்துள்ளது. இந்தக் குழு, கட்சியின் அரசியல் விவகாரக் குழுவைத் தேர்வு செய்யும். இந்த அரசியல் விவகாரக் குழுதான், ஆளும் கவுன்சிலின் அதிகாரமிக்க அமைப்பாக இருக்கும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார வரிசையில் முதலிடத்தை அதிபர் ஜின்பிங்கும், இரண்டாம் இடத்தைப் பிரதமர் லீ கெகியாங்கும் வகிப்பார்கள்.

தற்போது முடிவடைந்துள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநாட்டின் போக்கு, முடிவுகள், அதிபரின் செல்வாக்கு ஆகியவை குறித்தும், இது உலகச் சந்தையிலும், சர்வதேச அரசியலிலும் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் உலக அளவில் பேசத் தொடங்கிவிட்டனர். கட்சியின் உயர் அமைப்பான அரசியல் தலைமைக் குழு (பொலிட் பீரோ) இனி ஜின்பிங்கின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதால், அவர் தன்னிகரில்லாத் தலைவராக அதிகாரம் பெற்றுள்ளதாகவே உலக அரங்கில் பார்க்கப்படுகிறது. இதன்மூலம் தன் நாட்டுக்கும், உலகுக்கும் ஒரு புதிய அத்தியாயத்தை ஜின்பிங் தொடங்கி வைத்துள்ளதாகவும், உலக அரசியல் விவகாரங்களைத் தீர்மானிக்கும் சக்தியாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் தலைவர் ஜின்பிங்கும் பார்க்கப்படுவதாகவும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

சீன ராணுவம்

இப்படி இன்று சீனாவின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் அதிகாரம் கொண்ட தனி ஒருவனாகத்  தன்னை வளர்த்துக்கொண்டுள்ள ஜின்பிங், எப்படி அரசியலுக்குள் நுழைந்தார், எப்படித்  தன்னை இந்த அளவுக்கு வளர்த்துக்கொண்டார், இந்த வளர்ச்சி அவருக்கு எப்படிச் சாத்தியமானது, அவர் அதிபரான பின்னர் சீனா விஸ்வரூபம் எடுப்பது எப்படி போன்றவற்றைத் தெரிந்துகொள்ளும் முன்னர், ஜின்பிங்குக்கு முந்தைய தலைவர்களின் காலத்தில் சீனா எத்தகைய நிலைமையில் இருந்தது, தன் நாட்டில் நடக்கும் விஷயங்கள் வெளியில் தெரிந்துவிடாதபடிக்குச் சீனா ஏன் தனக்கு இரும்புத் திரை போட்டுக்கொண்டுள்ளது, சீனாவின் இரும்புத் திரைக்குக் காரணமான கம்யூனிஸம் அந்த நாட்டில் எப்படி, எதனால் வலுவாக வேர்விட்டது, அதற்கு முன்னர் புரட்சிப் போராட்டங்கள் வெடித்து கம்யூனிஸம் தோன்றக் காரணமான மன்னராட்சி சீனாவில் எவ்வாறு முடிவுக்கு வந்தது, அதற்குக் காரணமான தலைவர்கள் யார் யார், இன்னமும் ஏன் ஒற்றைக் கட்சி ஆட்சி முறையைச் சீனா விடாமல் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறது, திபெத் தலைவர் தலாய் லாமாவை ஏன் சீனா அப்படி வெறுக்கிறது, 1989-ம் ஆண்டு ஜனநாயகம் கோரி மாணவர்கள் நடத்திய தியான்மென் சதுக்கப் போராட்டத்தைச் சீன அரசு எப்படி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியது, அந்த நிகழ்வுக்குப் பிறகு சீன மக்களுக்கு ஜனநாயகம் கோரும் எண்ணமே எட்டிப்பார்க்க விடாதபடிக்குச் சீன அரசு எத்தகைய கெடுபிடிகளை அமல்படுத்திக் கொண்டிருக்கிறது போன்றவற்றை வரும் அத்தியாயங்களில் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்....Trending Articles

Sponsored