முகபேவின் அரசியல் பாதையும், ஜிம்பாப்வேவில் நிகழ்ந்த பொருளாதாரச் சரிவும்!Sponsoredரு நாட்டின் பொருளாதாரம்தான் அங்கு வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்வாதாரமாக அமையும். நாட்டை நேசிப்பதற்கும் வெறுப்பதற்கும் பொருளாதாரம் மட்டுமே காரணமாக இருக்கும். அந்தப் பொருளாதாரத்தில் சிக்கிச் சின்னாபின்னமான ஜிம்பாப்வே நாட்டின் தற்போதைய நிலை என்ன. பொருளாதார வீழ்ச்சிக்கு அதிபர் முகபே கொண்டுவந்த கொள்கை என்ன. வாங்க பார்ப்போம்!

யார் இந்த ராபர்ட் கேப்ரியல் முகபே? :

தெற்கோத்சியாவில் (ஜிம்பாப்வே நாட்டின் முந்தைய பெயர்) உள்ள `குட்டமா' எனும் சிற்றூரில், கேப்ரியல் - போனா தம்பதிக்குப் பிறந்தவர்தான் ராபர்ட் கேப்ரியல் முகபே. அந்த ஊரில் வாழும் மக்கள், கிருஸ்தவத்தின் மேல் அதீத நம்பிக்கையுடையவர்கள். அதனால் கிருஸ்தவத்தின் பெருமையையும் அரசியலைப் பற்றியும் முகபேவுடன் சேர்த்து தன் ஆறு குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுத்து வளர்த்தனர். முகபேவின் பாட்டனார், 19-ம் நூற்றாண்டில் ஆண்ட லோபிங்குலா என்கிற மன்னருக்கு சேவகராகப் பணியாற்றியவர். பள்ளிப்பருவத்தில் படிப்பில் சிறந்து விளங்கிய முகபே, யாருடனும் பழகாமல் தன்னுடைய நேரத்தை தனியே அதிகம் கழிப்பார். அம்மாவின் பேச்சை ஒருபோதும் மீற மாட்டார். இதனாலேயே அவருக்கு `அம்மாவுக்குப் பயப்படும் கோழை' என்ற பட்டப்பெயரும் இருந்தது. 1930-ம் ஆண்டில் அந்தக் கிராமத்தில் கூடும் அவையில் அவர் தந்தை கேப்ரியலும் பங்கேற்றார். அவைக்கும் அவருக்கும் சில கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. அவை மொத்தமும் ஒன்றுகூடி, முகபேவின் குடும்பத்தை ஊரைவிட்டுத் தள்ளிவைத்துவிட்டது.

Sponsored


Sponsored


1934-ம் ஆண்டில் தனது இரு சகோதரர்களையும் வியாதியால் இழந்தார் முகபே. வறுமையின் பிடியில் வதங்கத் தொடங்கியது முகபேவின் குடும்பம். அதன் பிறகு `புலவாயோ' என்ற ஊருக்கு வேலை தேடி கிளம்பினார் கேப்ரியல். குடும்பத்தின் மீது அக்கறை காட்டாத முகபேவின் தந்தை, அங்கு வேறொரு பெண்மீது காதல்வயப்பட்டார். இவ்வாறு குடும்பத்தில் நிகழ்ந்த சில கோர நிகழ்வுகள், முகபேவை உருக்குலைத்தன. இருப்பினும் படிப்பில் கவனம் செலுத்தி, தன் அம்மாவின் அரவணைப்பில் நன்றாகப் படிக்கத் தொடங்கினார் முகபே.

முகபேவின் அரசியல் என்ட்ரி :

அதற்குப் பிறகு படிப்படியாக அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கிய முகபே, தான் இருக்கும் நாடான ஆப்பிரிக்காவில் நடக்கும் அரசியல் மாற்றங்களில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். படிப்பை முடித்த பிறகு, தெற்கோத்சியாவில் உள்ள ஓர் இயக்கத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1957-ம் ஆண்டில் நிறுவப்பட்ட அந்த இயக்கம், ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் புரட்சி செய்ததால், 1959-ம் ஆண்டில் தடைவிதிக்கப்பட்டு இழுத்து மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து 1960-ம் ஆண்டில் முகபேவின் நண்பர் டகவிராவும் இவரும் சேர்ந்து `தேசிய ஜனநாயகக் கட்சி' என்று தனி இயக்கம் தொடங்கினார். அதற்கும் இடையூறு வந்தது. அந்த இயக்கத்தின் இரு முக்கியப் புள்ளிகளைச் சிறையிட்டது ஆங்கிலேய அரசு. அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் முகபேவின் தலைமையில் 7,000 பேர் கொண்ட கூட்டம், அதிபரின் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. போலீஸின் தடியடியையும் மீறி ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது. முதல் நாள் 7,000-மாக இருந்த கூட்டம், அடுத்த நாள் 40,000-மாக வலுத்தது. முகபேவின் அரசியல் பாதைக்கு முக்கியமான அங்கமாக அந்த ஆர்ப்பாட்டம் அமைந்தது.

இந்த நேரத்தில்தான் ஆங்கிலேயரின் பிடியில் இருந்த ரெகோத்சியாவை மீட்டெடுக்கும் போராட்டம் தீவிரமடைந்தது. ரெகோத்சியா நாடானது, வடக்கு ரெக்தோசியா, தெற்கு ரெகோத்சியா என இரு பிரிவுகளாகப் பிரிந்தது. தெற்கு ரெத்கோத்சியாவை பிரிட்டிஷ் ஆள, வடக்கு தெர்கோத்சியாவை பிரிட்டிஷுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. இதில் பெரும்பான்மையாக கறுப்பர்கள் தெற்கில் இருந்ததால், ஆங்கிலேயருக்கு எதிரான குரல் ஓங்கத் தொடங்கியது. இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் முகபே. இருப்பினும், அவரை ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டிய ஆங்கிலேய அரசு, அவர்மீது `தேசத் துரோக வழக்கு' போட்டு அவரைச் சிறையிலிட்டது. அதைத் தொடர்ந்து பல போராட்டங்களில் முன்னே நின்று, பல நல்ல மாற்றங்களைக்கொண்டு வெற்றியும் பெற்றார் முகபே. பலமுறை கைதாகியும் தலைமறைவாக வாழ்ந்தும் தன் வாழ்நாளை கழித்தார். கைதானால் தலைவராக்கும் பழக்கம், ஜிம்பாப்வே நாட்டிலும் இருந்தது. அதுவே 1987-ம் ஆண்டில் அவரை அதிபராக்கி அழகுபார்த்தது.

பொருளாதார வீழ்ச்சியும் அதற்கான காரணமும் :

`ரெகோத்சியா' என்கிற பெயர் `ஜிம்பாப்வே' என்று மாற்றப்பட்டது. மாறியது பெயர் மட்டுமல்ல, ஜிம்பாப்வே நாட்டு மக்களின் தலைவிதியும்தான். வேலியில் சென்ற ஓணானை வேட்டியில் விட்ட கதையாக மாறியது அந்நாட்டு மக்களின் நிலைப்பாடு. ஆம், அவர் தலைமையேற்ற கொஞ்ச நாளிலேயே ஆரம்பித்துவிட்டது பொருளாதார வீழ்ச்சி. நினைத்துகூடப் பார்க்க முடியாத சில கோரச் சம்பவங்கள், அந்நாட்டு மக்களுக்கு நிகழத் தொடங்கின. ஜிம்பாப்வேவில் பிறந்த சிறுவனுக்கு, ஒரு கடலைமிட்டாய் வாங்கித் தின்ன வேண்டும் என்ற ஆசை வந்தால், அவன் ஒரு மூட்டை பணத்தோடுதான் கடைக்குச் செல்ல வேண்டும். அந்த அளவுக்குப் பணவீக்கமும் பொருளாதார சிக்கல்களும் அந்நாட்டு மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கின.

இதுவரை ஜிம்பாப்வே நாட்டை கிரிக்கெட்டில் மட்டும்தான் பார்த்திருப்போம். `ஜெயித்த பணத்தை என்ன செய்வார்கள்' என்ற கேள்வி என்றாவது நம்மிடையே எழுந்திருக்குமா. தான் சம்பாதித்த ஒட்டுமொத்த பணமும் வெறும் காகிதமாக மட்டுமே பயன்படுத்திவந்தனர். குளிர்காலத்தில் விறகுக்குப் பதிலாக, ரூபாய் கட்டுகளை எரித்து குளிர்காய்வதில் ஆரம்பித்து, மலம் கழித்துவிட்டு கைகளைத் துடைத்துக்கொள்ளவும் அதே நோட்டுகளைப் பயன்படுத்தினர். காரணம், அதற்கு செலவாகும் அந்தக் காசைவிட, வாங்கும் டிஷ்யூ பேப்பரின் விலை அதிகம்.

அதிகபட்சத் தொகையாக இந்திய நாட்டில் 2,000 ரூபாய் புழக்கத்தில் உள்ளது. ஜிம்பாப்வே நாட்டில், நூறு டிரில்லியன் டாலர் நோட்டுகளைக்கூட காண முடியும். கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறதா. ஆம், பொருளாதார சிக்கல்களைக் கட்டுக்குள் கொண்டுவர, ட்ரில்லியன் டாலர் நோட்டுகளை அச்சிடத் தொடங்கினார் முகபே. மனிதர்களைவிட அதிகமாக அங்கு நோட்டுகளை மட்டுமே காண முடியும். வாங்கும் பொருள்களுக்கு எடை போட்டு பணம் வாங்கும் வழிமுறையை அங்கு பின்பற்றிவந்தார்கள். கொடுக்கும் பணத்தை எண்ணத் தொடங்கினால் ஒரு நாளை தாண்டும்.

வறுமையும் வேலையின்மையும் அந்நாட்டு மக்களைச் சோதித்தன. 1980-ம் ஆண்டு வரை, அந்நாட்டு பணத்தின் மதிப்பு அமெரிக்கா டாலரைவிட அதிகமாக இருந்தது. வறுமையின் பிடி அவர்களையும் இறுக்க, என்ன காரணம். முகபே என்கிற தனி மனிதனின் சட்டதிட்டமும் பொருளாதார கொள்கைகளும்தான், முக்கியமாக அவரின் இனவெறி என்றுகூட சொல்லலாம். பல்வேறு அரசியல் சூட்சுமங்களைக் கற்ற முகபேவை, அவருக்குள் இருந்த இனவெறி அவரை ஆட்டிப்படைத்தது. தன் இனத்தவர்கள் தவிர மற்றவர்களிடமிருக்கும் நிலங்களை அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்ற திட்டம், அந்நாட்டு மக்களை உலுக்கியது. லட்சக்கணக்கான மக்கள், உலகின் பல்வேறு நாடுகளுக்குக் குடியேறினர். வெறும் நிலங்கள், விவசாயக் கரங்களின்றி வாடி வதங்கத் தொடங்கின. வறுமையும் நோயும் அங்குள்ள மக்களைத் தொற்ற, ஆயிரக்கணக்கான உயிர்களை அது காவு வாங்கியது. கையில் கோடிக்கணக்கான மதிப்பில் பணம் இருந்தும் பிச்சைக்காரனாகவே வாழ்ந்த வரலாறு ஜிம்பாப்வே நாட்டுக்கு உள்ளது. வெளிநாட்டிலிருந்து வாங்கும் கடன்தொகைகளை நூதனமாகச் செலவிடும் எண்ணத்தில், ஒட்டுமொத்தப் பணத்தையும் ராணுவத்தில் கொட்டித் தீர்த்தார் முகபே. பத்திரிகையாளர்கள், முகபேவிடம் பொருளாதார வீழ்ச்சி குறித்து எழுப்பும் கேள்விகளுக்கும், `தண்ணீர் இல்லை, மழை இல்லை, விவசாயம் இல்லை...' எனப் பல்வேறு காரணங்களை அடுக்கினார்.

நிலை மாறியது :

பொறுமைகாத்த மக்கள், ஒருகட்டத்தில் பொங்கி எழத் தொடங்கினர். முகபேவை எதிர்த்து நாட்டின் பல இடங்களில் புரட்சி வெடித்தது. `அரசியல் வாழ்க்கைக்கு முடிவு வந்துவிடுமோ!' என்று எண்ணிய முகபே, அமெரிக்க டாலர்களைப் புழக்கத்தில் கொண்டுவந்தார். முந்தைய காலகட்டத்தை ஒப்பிடுகையில், வறுமை கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. இருப்பினும் மக்களுக்கு முகபே மீதான கோபம் குறையவில்லை. மக்களின் எதிர்குரல் நாட்டில் ஆங்காங்கே ஒலித்துக்கொண்டேதான் இருந்தது. இனவெறி அவரை ஆட்டிவைத்ததுபோல், அரசியல் ஆசையும் அவரைப் பற்றிக்கொண்டது. 93 வயதை எட்டிய முகபே, ஏறத்தாழ 37 ஆண்டுகளாக அந்த நாட்டை ஆண்டிருக்கிறார்.

அரசியலில் அடுத்ததாக எடுக்கப்போகும் முடிவு, மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது, தன் மனைவி கிரேஸ் முகபேவை துணை அதிபராக்கிவிட வேண்டும் என்பதுதான். இதற்கு முன் இருந்த துணை அதிபரின் பெயர் எம்மர்சன் நாங்காக்வா. ஜிம்பாப்வேவில் நடந்த பல நல்ல பொருளாதார மாற்றங்களுக்கும், முகபே 37 வருடங்கள் அதிபராக நிலைத்ததற்கும் இவர்தான் முக்கியக் காரணம். இவ்வளவு செய்தும் முகபே தன் மனைவியை துணை அதிபராக்கப்போவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத எம்மர்சன், ராணுவத்தை முகபேவுக்கு எதிராகத் திருப்பிவிட்டார். மக்களுக்கும் முகபேவின் ஆட்சியில் திருப்தியில்லாததால், அதை வரவேற்றனர். அவரை வீட்டோடு சிறையிட்டு, அவர் பதவி விலக வேண்டும் என்று மக்களும் கோரிக்கைவைத்தனர்.

சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முகபே, ``கட்சி நடைமுறைகள் சில உள்ளன. அது முடிந்த பிறகு, மீண்டும் அதிபராகத் தொடர்வேன். ராணுவம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையில் சாதக பாதகங்கள் இருந்தாலும், அவர்களின் எண்ணத்துக்கு நான் மதிப்பளிக்கிறேன். நாம் இப்போதிருக்கும் பிரச்னைகளைச் சரிசெய்ய வேண்டும்'' என்று கூறி மேலும் கிலியைக் கிளப்பியுள்ளார். இதனால் ஜிம்பாப்வே மக்களின் நிலை இன்னும் மோசமாகத்தான் உள்ளது. இதுதான் ஜிம்பாப்வே நாட்டின் இன்றைய நிலைப்பாடு.Trending Articles

Sponsored