‘பிரிக்ஸ்’ பல்கலைக்கழக`டாப்-20' பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி! #IITSponsoredபிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளின் கூட்டமைப்பே `பிரிக்ஸ் (BRICS)' என்று அழைக்கப்படும். பிரிக்ஸ் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை, இங்கிலாந்தைச் சேர்ந்த `Quacquarelli Symonds' என்ற நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஐ.ஐ.டி-கள் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. சென்னை ஐ.ஐ.டி (IIT), டாப்-20 பட்டியலில் 18-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

டாப்-10 வரிசையில் மும்பை ஐ.ஐ.டி 9-வது இடத்தையும், பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் 10-வது இடத்தையும் பிடித்திருக்கின்றன. டாப்-20 வரிசையில் டெல்லி ஐ.ஐ.டி 15-வது இடத்தையும், சென்னை ஐ.ஐ.டி 18-வது இடத்தையும் பிடித்திருக்கின்றன. சீனாவைச் சேர்ந்த சிங்குவா பல்கலைக்கழகம், பீகிங் யூனிவர்சிட்டி, ஃபுடான் பல்கலைக்கழகம் மற்றும் சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவை முதல் நான்கு இடங்களில் உள்ளன.

Sponsored


சீனாவுக்கு அடுத்து, இந்தியப் பல்கலைக்கழகங்கள்தான் அதிகளவில் இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன. கல்வி நிறுவனத்தின் மதிப்பு, ஆசிரியர்களின் மதிப்பு, மாணவர்கள் - ஆசிரியர்கள் விகிதாசாரம், முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை, ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தரம் என, பத்து தரக்குறியீடுகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசைப் பட்டியலைத் தயாரித்திருக்கிறார்கள்.

Sponsored


பிரிக்ஸ் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும்போது தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் இந்தியப் பல்கலைக்கழகங்களில் அதிக விகிதாசாரத்தில் இருப்பது தெரியவருகிறது. டாப்-100 பட்டியலில் இடம்பிடித்த அனைத்து இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர்களின் தகுதிக்கான மதிப்பெண்ணை முழுமையாகப் (100-க்கு 100 மதிப்பெண்) பெற்றிருக்கிறார்கள். இதைப்போலவே, ஆராய்ச்சித் தகுதி நிலையில் இந்திய அறிவியல் கழகம், மும்பை ஐ.ஐ.டி மற்றும் டெல்லி ஐ.ஐ.டி அதிக மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது. 

350 பல்கலைக்கழகங்கள் பங்கேற்ற பிரிக்ஸ் நாடுகளுக்கான தரவரிசையில், இந்தியாவிலிருந்து 79 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றன. இதில் ஏழு கல்வி நிறுவனங்கள் டாப்-50 பட்டியலிலும், இந்தியாவைச் சேர்ந்த 14 பல்கலைக்கழகங்கள்  டாப்-100  பட்டியலிலும் இடம்பிடித்திருக்கின்றன. 

ஐ.ஐ.டி கான்பூர் 21-வது இடத்தையும், கரக்பூர் ஐ.ஐ.டி 24-வது இடத்தையும், டெல்லி பல்கலைக்கழகம் 41-வது இடத்தையும், ஐ.ஐ.டி ரூர்க்கி 51-வது இடத்தையும், கெளஹாத்தி ஐ.ஐ.டி 52-வது இடத்தையும், கொல்கத்தா பல்கலைக்கழகம் 64-வது இடத்தையும், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் 74-வது இடத்தையும், மும்பை பல்கலைக்கழகம் 82-வது இடத்தையும் பெற்றிருக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த அண்ணா பல்கலைக்கழகம் 85-வது இடத்தையும், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 105-வது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்தியாவில் உள்ள தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களான பிட்ஸ் பிலானி (109), தாப்பர் யூனிவர்சிட்டி (139), அமிர்தா பல்கலைக்கழகம் (140), புனேவில் உள்ள சிம்பியோசிஸ் (144), வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (201-250), சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் (251-300), தஞ்சையில் உள்ள சாஸ்திரா (251-300) போன்ற பல்கலைகளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 

தர வரிசையில் இடம்பிடித்திருப்பது குறித்துப் பேசிய பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் வேட் சிங் செளகான் ``இந்தியப் பல்கலைக்கழகங்கள் சிறப்புடனும் தரத்துடனும் செயல்பட்டுவருகின்றன. இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருப்பதன் மூலம் இந்தியாவில் கல்வியின் தரம் மேம்பட்டிருப்பதை அறிய முடிகிறது.

உலக அளவில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் இந்தியப் பல்கலைக்கழகங்கள் போட்டிபோடும் வகையில் பல்கலைக்கழக மானியக் குழு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளையும் விதிமுறைகளையும் வகுத்து வருகின்றன. 

தற்போது வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் 350 பல்கலைக்கழகங்களில் 65 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்திருக்கின்றன. இனிவரும் காலங்களில் இந்த எண்ணிக்கை உயர்ந்து, 150 பல்கலைக்கழகங்கள் இடம்பிடிக்க வேண்டும்" என்றார். 

மத்திய அரசின் மனிதவளத் துறை, இந்திய அளவில் பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலைத் தயாரித்துவருகிறது. அடுத்த ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் இடம்பெற டிசம்பர் 8-ம் தேதிக்குள் கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது மனிதவளத் துறை.Trending Articles

Sponsored