75% பூச்சிகள்... 58% வன உயிரினங்களை நாம் தொலைத்திருக்கிறோம்... அதிர்ச்சி ஆராய்ச்சி முடிவுகள்!Sponsoredரவு நேரங்களில் மொபைல் அல்லது லேப்டாப் பயன்படுத்தும் போதோ, மின்சாரம் இல்லாத சமயத்தில் ஒற்றை மெழுகுவர்த்தி ஏற்றும் போதோ, அழையா விருந்தாளியாக நம் இல்லம் தேடி வருபவைதான் இந்தப் பூச்சிகள். கண்களின் அருகே பறந்து கோபமூட்டுவது, காதுகளில் ரீங்காரம் இட்டு எரிச்சல் கிளப்புவது பூச்சிகளின் அன்றாடச் செயல். உண்மையில் அவை தொல்லைதான் செய்கின்றன என்றாலும், உணவுச் சங்கிலியிலும், சூழலியல் அமைப்பிலும், மகரந்தச் சேர்க்கையிலும் பெரும்பங்கு வகிக்கின்றன. அவை இல்லாத உலகம் எந்த அளவிற்குப் பாதுகாப்பானதாக இருக்கும் என்பது கேள்விக்குறியே.

ஜெர்மனியைச் சேர்ந்த பூச்சி ஆராய்ச்சியாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். காரணம், பறக்கும் பூச்சிகளின் எண்ணிக்கை கடந்த 27 ஆண்டுகளில் 75 சதவீதம் குறைந்துள்ளது. ஏன் என்று இதுவரை தெரியவில்லை. PLOS ONE என்ற இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களின் நீண்டகால ஆய்வின் முடிவுகளை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ’பறக்கும் பூச்சிகளின் உயிரினத்தொகுதி’ குறித்து ஆராய்ந்த இதில், நாடு முழுவதும் 63 பாதுகாக்கப்பட்ட இடங்கள் கண்காணிக்கப்பட்டன. குன்றுகள், புல்வெளிகள், காடுகள், நிறுவப்பட்ட கூடாரங்கள் என மொத்தமாக 54 கிலோ எடை வரை பூச்சிகள் சேகரிக்கப்பட்டன. வருடந்தோறும் பறக்கும் பூச்சிகளின் எண்ணிக்கை குறையும் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால், அது இந்த அளவிற்கு அகலப் பாதாளம் வரை செல்லும் என அந்த ஆராய்ச்சியாளர்களே நினைத்து இருக்கவில்லை.

Sponsored


மீன்கள், நீர்நில உயிரினங்கள், பறவைகள், பாலூட்டிகளின் எண்ணிக்கை மற்றும் பல்லுயிர்கள் சேர்ந்து வசிக்கும் தன்மை குறித்துக் கணக்கிடும் முறையை லிவிங் பிளானட் இன்டெக்ஸ் (Living Planet Index) என்று அழைக்கிறார்கள். இதன் சமீபத்திய முடிவுகள் கூறும் அதிர்ச்சித் தகவல், 1970 மற்றும் 2012ம் வருடத்திற்குள் மட்டும் பூமியிலுள்ள வன உயிரினங்களின் எண்ணிக்கை 58% குறைந்துள்ளது என்பதே. முக்கியமாக, ஐரோப்பாவில் பட்டாம்பூச்சிகள், தேனீக்கள் மற்றும் ஈசல்கள் பெருமளவில் காணாமல் போயுள்ளன. வசந்தகாலம் மற்றும் இலையுதிர் காலத்தை விட வெயில் காலத்தில் பூச்சிகள் நிறையக் காணப்படும். 27 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கணக்கை அடிப்படையாக வைத்துக்கொண்டு அதை இந்த வருட எண்ணிக்கையுடன் பொருத்திப் பார்த்தால் 82 சதவீத பூச்சிகளைக் காணவில்லை என்று அதிர்ச்சியளிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இது வருடா வருடம் குறையும் எண்ணிக்கையை விட 7 சதவீதம் அதிகம் என்கின்றனர்.

Sponsored


தீமைகள்?

சரி, பூச்சியினங்கள் குறைவதால் அப்படி என்ன தீங்கு விளையப்போகிறது என்று கேட்கலாம். உலகின் 80 சதவீத செடிகள், தங்கள் இனப்பெருக்கத்திற்கு, அதாவது மகரந்தச் சேர்க்கைக்கு பூச்சிகளையே நம்பியுள்ளன. இதனால், இப்போது இல்லாவிட்டாலும், பூச்சிகள் குறைந்ததால், நமக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம். ஜெர்மன் பறவைகளுக்கு இப்போதே உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியில் இதுவரை அழிந்த பறவையினங்களில் 15 சதவீதம் கடந்த 12 வருடத்தில் காணாமல் போனவைதான்.

என்ன காரணம்?

மற்ற சூழலியல் பிரச்னைகள் போல புவி வெப்பமடைவதையோ, காடுகளை அழிப்பதையோ இதற்குக் காரணமாக அடுக்க முடியாது. காரணம் வெப்பம் அதிகமானால், பூச்சிகளின் எண்ணிக்கையும் அதிகமாகும். பூமி வெப்பமடைந்தால், உணவு கிடைக்காமல், மண்ணில் வாழ முடியாமல், பூச்சிகள் உணவைத்தேடி வெளியே வரும். நிறையப் பூச்சிகளை அவ்வப்போது வானில் காண முடியும். சொல்லிக்கொள்ளும் படி, இங்கே அப்படி எதுவும் நடந்துவிடவில்லை என்கின்றனர் ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள்.

இதற்கு நம்பத்தகுந்த காரணங்களாகக் கருதப்படுவது நாம் அதிகமாகப் பயன்படுத்த தொடங்கிய பூச்சிக் கொல்லி மருந்துகளும், செயற்கை உரங்களும், முறையற்ற வேளாண் நடவடிக்கைகளும்தான். இதை உறுதி செய்ய ஜெர்மன் நாட்டின் விவசாய நடவடிக்கைகள் குறித்து ஆராய வேண்டியது அவசியம் என்கின்றனர். ஆனால், இதைச் செய்ய ஜெர்மன் விவசாயிகள் அனுமதியளிக்காமல் தவிர்த்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் சாதாரணமானவை அல்ல, ஓர் எச்சரிக்கை மணி என்பதை உணர்த்த சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழலியலாளர் டேவ் கௌல்சன் இப்படிச் சொல்கிறார். “நீங்கள் ஜெர்மனி நாட்டில் வசிக்கும் பூச்சிகளை உண்ணும் பறவை இனம் என்று நினைத்துக்கொள்ளுங்கள். உங்கள் உணவில் தற்போது மூன்றில் இரண்டு பங்கு காணவில்லை. இது உங்களுக்கு எத்தகைய அதிர்ச்சியைக் கொடுக்கிறதோ, அந்த அளவிற்கு இது ஓர் அதிமுக்கியமான அதிர்ச்சித் தகவல்" என்கின்றார். இது ஜெர்மனியின் நிலை மட்டுமே. உலகம் முழுவதும் என்ன நிலை என்று இதுவரை தெரியவில்லை.Trending Articles

Sponsored