ஜின்பிங்கை செதுக்கிய கலாசார புரட்சி!- ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் ( தொடர் -2 )Sponsored
ன்னும் 30 ஆண்டுகளில் சீனாவை உலகின் வல்லரசாக்கிவிடும் நோக்கில், சீன கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஆட்சியிலும் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்துள்ள அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங்கின் தந்தையும் ஓர் அரசியல்வாதிதான் என்பதால், அரசியல் என்பது அவரது ரத்தத்தில் ஊறிய அம்சமாகவே மாறிவிட்டது. ஆனாலும், 1968 ல் நிகழ்ந்த சீன கலாசார புரட்சியைத் தொடர்ந்து ஜின்பிங்கிற்கு ஏற்பட்ட அனுபவமே அவரை எதிர்காலத்தில் ஒரு மாபெரும் அரசியல் தலைவராக உருவாகும் அளவுக்குச் செதுக்கியது. 

தந்தை ஷி ஷோங்குன் மற்றும் தாயார் குய் ஷிங்ன் - க்கு 1953, ஜூன் மாதம் 15-ம் தேதியில் பிறந்த ஜின்பிங், இளமைப்பருவம் சாதாரணமாகத்தான் கடந்தது. அதுவும் தந்தை செல்வாக்குப் பெற்ற ஓர் அரசியல்வாதி, மாகாண ஆளுநர் என்று பதவி வகித்த நிலையில் ஜின்பிங்குக்கு, வசதியான நகர்ப்புற வாழ்க்கை அமைந்தது. ஆனால், அது அதிக நாள்கள் நீடிக்கவில்லை. 15 வயதிலேயே கிராமப்புறத்தில் ஒரு விவசாயக் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் என்று சொன்னால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?. ஆனால் உண்மை அதுதான். 

Sponsored


ஜின்பிங்கின் தந்தை ஆட்சி அதிகாரத்தில் பதவி வகித்தபோதிலும், அவர் கட்சி மற்றும் ஆட்சியின் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் விமர்சிக்கத் தயங்கியதே இல்லை. குறிப்பாக 1966 - 76 வரை சீனாவில் நிகழ்ந்த கலாசார புரட்சியின்போதும், அதற்கு முன்னரும் அரசின் செயல்பாடுகளை மிகக்கடுமையாக விமர்சித்த ஷி ஷோங்குன், கட்சியிலிருந்து வெளியேறினார். இதனையடுத்து அவர் சிறையிலடைக்கப்பட்ட நிலையில், ஜின் பிங்கின் குடும்பம் மிகவும் அவமதிப்புக்குள்ளாகி சிதறடிக்கப்பட்டது. அவரது சகோதரிகளில் ஒருவர் மரணமடைந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றுகூட கூறப்பட்டது. இந்தக் களேபரங்களால் அதுநாள் வரை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் சென்றுகொண்டிருந்த ஜின்பிங்கின் இளைமைப்பருவம் சூறாவளியைச் சந்தித்தது. 

Sponsored


ஜின்பிங்கைச் செதுக்கிய கலாசார புரட்சி

இந்த நிலையில், 1968-ம் ஆண்டு சீன கலாசார புரட்சிக்கு வித்திட்ட மா சேதுங், நாட்டின் இளைஞர்கள் நகர்ப்புறங்களிலிருந்து கிராமப்புறங்களுக்குச் சென்று வாழவேண்டும் என்றும், அங்கு வாழ்ந்து வரும் விவசாய மக்களின் கஷ்டங்களை அருகிலிருந்து பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதனால் ஆயிரக்கணக்கான இளம்வயதினரின் பள்ளிப்படிப்புக்குத் தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, அவர்கள் கிராமப்புறங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்படித்தான் ஜின்பிங்கும் அவரது தந்தையால் ஷான்க்ஸி மாகாணத்துக்கு 1969 - ம் ஆண்டு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கே அவர், சுமார் ஆறாண்டுகள் விவசாயக் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்தார். இரவுத் தூக்கத்துக்குக் கயிற்று கட்டில் கூட கிடையாது. அங்குள்ள குகை ஒன்றில் செங்கற்களால் அமைக்கப்பட்ட மேடை போன்ற ஒன்றைத்தான் கட்டிலாக பாவித்து, பூச்சிக்கடியிலும் கொசுக்கடியிலும் தூங்கி எழுந்தார். 

இதுகுறித்து அந்தக் காலகட்டத்தில் ஜின்பிங்குடன் குகையில் தங்கியிருந்த அவரது கூட்டாளி லூ ஹவுஷெங் குறிப்பிடுகையில், " அந்த நேரத்தில் எங்களுக்குச் சாப்பிட கிடைத்ததெல்லாம் கஞ்சியும், மூலிகைகளும், ஆவியில் வேகவைக்கப்பட்ட ரொட்டியும்தான். உங்களுக்குப் பசியாக இருக்கிறது என்றால் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதைப்பற்றியெல்லாம் கவலைப்படக் கூடாது. வயிறு நிரம்புகிறதா என்றுமட்டும்தான் பார்க்க வேண்டும்.

மனம் கவர்ந்த மா சேதுங், மார்க்ஸ் தத்துவங்கள்

அத்தகைய சிரமமான சூழலுக்கு மத்தியிலும் ஜின்பிங், அந்தக் குகையில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் பெரும் வேட்கையுடன் புத்தகங்களையும் செய்தித் தாள்களையும் வாசித்துக்கொண்டிருப்பார். கூடவே அவரது விரலிடுக்கில் விடாமல் சிகரெட் புகைந்துகொண்டிருக்கும். ஒரு செயின் ஸ்மோக்கர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அவர் சிகரெட்டுகளை ஊதித்தள்ளிக்கொண்டிருப்பார். அதே சமயம், தான் படிக்கும் புத்தகம், பத்திரிகைகளில் மா சேதுங் சொன்னதாக வந்திருக்கும் முக்கியமான அவரது மேற்கோள்களையும், அவர் ஆற்றும் பணிகள் குறித்தும் எங்களுக்குச் சத்தமாக வாசித்துக் காண்பிப்பார். மார்க்ஸ் தத்துவக் கொள்கைகளைக் கற்பதில் அவர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். 

மிகவும் சீரியஸான ஆள் ஜின்பிங்; ஹ்யூமர் சென்ஸெல்லாம் கிடையாது. நாங்கள் சக தோழர்களுடன் 'சீட்டு' விளையாடுவோம், அரட்டையடிப்போம், விளையாடுவதற்கு எங்கள் வயதையொத்த பையன்களைத் தேடிச் செல்வோம். கூடவே 'கேர்ள் ஃபிரெண்ட்' கிடைக்காதா என்றும் தேடுவோம். ஆனால், இவை எதிலும் அவர் ஆர்வம் காட்டமாட்டார்" என்று ஜின்பிங்கின் இளம் வயது ஃப்ளாஷ்பேக்கைச் சொல்கிறார். 

இனிமையைத் தொலைத்த இளம்வயது

ஜின்பிங் இளம் வயதுக்கே உரிய கேளிக்கைகளில் வேண்டுமானால் ஆர்வம் காட்டாமல் இருந்திருக்கலாம். ஆனால், அதற்குப் பதிலாக 18 வயதிலேயே தனது அரசியல் வாழ்க்கைக்குத் தயாராகி விட்டார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இளையோர் அணியில் சேர்ந்த அவர், கட்சியின் அதிகாரபூர்வ உறுப்பினராக பல முறை முயற்சி மேற்கொண்டார். ஆனால், அவரது தந்தையின் கடந்த கால அரசியல் செயல்பாடு, அவர் சிறையில் அடைக்கப்பட்டது போன்ற காரணங்களினால் அவரது உறுப்பினர் விண்ணப்பம் பலமுறை நிராகரிக்கப்பட்டது. இருப்பினும் ஜின்பிங்கின் விடாமுயற்சி காரணமாக அவரது 21-வது வயதில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ உறுப்பினராக வெற்றிகரமாகச் சேர்ந்தார்.  

விவசாயக் கூலித் தொழிலாளியாக வேலைபார்க்க 1969-ம் ஆண்டு கிராமத்துக்கு அனுப்பப்பட்ட ஜின்பிங், அங்கு சுமார் ஆறாண்டு காலம் அந்த வேலையை மிகுந்த அக்கறையுடனும் ஆர்வத்துடனும் செய்தார். அந்தக் காலகட்டத்தில் சீன கிராமப்புற வாழ்க்கை என்பது மிகவும் கடினமான ஒன்று. மின்சாரமோ, மோட்டார் வாகனமோ, எந்திரக் கருவிகளோ கிடையாது. ஆனாலும் அந்தச் சூழ்நிலையில், அந்தப் பருவத்திலேயே அணைகள் கட்டவும் சாலைகளைச் செப்பனிடவும் கற்றுக்கொண்டார் ஜின்பிங். கூடவே உள்ளூர் விவசாயிகளுடன் நெருங்கிப் பழகி, அவர்களுடன் நல்லுறவை வளர்த்துக்கொண்டார். இவையெல்லாம்தான் ஜின்பிங்கை பின்னாளில் ஒரு வலிமை மிக்க தலைவராக உருவாகவும், கட்சியில் உயர்ந்த பதவிகளை எட்டுவதற்கும் உதவியது எனலாம். 

இதுபற்றி ஜின்பிங் பின்னர் குறிப்பிட்டபோது, " சிறுவயதில் அந்த விவசாயிகளிடம் நான் கற்றுக்கொண்ட யோசனைகளும், பண்புகளும், விவசாய கிராமத்தின் குகைகளில் நான் வாழ்ந்த வாழ்க்கையும்தான் இன்றைய என் வளர்ச்சிக்குக் காரணம். நான் எப்போதுமே இந்த மஞ்சள் தேசத்தின் ( மஞ்சள் நதி) மகனாக இருப்பேன். நான் எனது இதயத்தை 'லியான்ஜியாஹி'யிலேயே  ( ஜின் விவசாயக் கூலியாக வேலைபார்த்த கிராமம்) விட்டுவிட்டேன். அதுதான் என்னை உருவாக்கியது.எனது 15 வயதில் நான் அந்தக் கிராமத்துக்கு வந்தபோது நான் மிகவும் குழப்பமும் கவலையும் அடைந்திருந்தேன். ஆனால் 22 -வது வயதில் நான் அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறியபோது எனது வாழ்க்கை லட்சியங்கள் மிகவும் உறுதியுடன் இருந்தன. எனது மனது முழுவதும் தன்னம்பிக்கை நிரம்பியிருந்தது" எனத் தெரிவித்திருந்தார். அந்த அளவுக்கு அந்தக் கிராமப்புற விவசாயி கூலி வாழ்க்கை அவரைச் செம்மைப்படுத்தியிருந்தது. அநேகமாக உலக அளவில் இன்று தலைமை அதிகாரப் பதவியில் இருக்கும் தலைவர்கள் யாரும் ஜின்பிங்கின் இந்த சிறுவயது வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்களா என்பது சந்தேகமே.

ஆறாண்டு கால கிராமப்புற வாழ்க்கையை முடித்துக்கொண்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ உறுப்பினராக நகரத்துக்குத் திரும்பிய ஜின்பிங்குக்கு, கட்சியின் கிளைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்தச் சமயத்தில் ஜின்பிங்கின் தந்தை மரணமடைந்த நிலையில், தனது 22-வது வயதில் பெய்ஜிங்கில் உள்ள புகழ்பெற்ற ஸின்ஹுவா பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினீயரிங் பட்டப்படிப்பில் சேர்ந்தார். 1979-ம் ஆண்டில் அந்தப் படிப்பை முடித்த பின்னர், அப்போதைய சீன துணை அதிபர் ஜெங் பியாவூக்குக் காரியதரிசியாகப் பணியாற்றினார். 

தலைமைப் பதவியை நோக்கி...

அப்போதிருந்து ஜின்பிங்கின் அரசியல் கிராப் கிடுகிடுவென ஏறத்தொடங்கியது. இதற்கிடையே 'மனிதப்பண்புகள் மற்றும் சமூக விஞ்ஞானம்' என்ற துறையில் முதுகலை பட்டப்படிப்பைப் பயின்று, சட்டப்படிப்பும் பயின்ற ஜின்பிங், எண்ணற்ற ஆராய்ச்சி கட்டுரைகளையும் எழுதினார். 1979 - 1982-ம் ஆண்டு காலகட்டத்தில் சீனத் துணை பிரதமராக பதவி வகித்ததன் மூலம் ராணுவத்தின் மத்திய கட்டளையதிகாரம் கொண்டவராக, ராணுவத்தைக் கையாளும் அதிமுக்கிய அனுபவத்தைப் பெற்றார். இந்தக் காலகட்டத்தில்தான், பிரிட்டனுக்கான சீனத் தூதரக அதிகாரியின் மகளான கீ லிங்லிங்கை திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையிலும் அடியெடுத்து வைத்தார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கை அதிக காலம் நீடிக்கவில்லை. ஒரு சில ஆண்டுகளிலேயே விவாகரத்தில் முடிந்தது. 

அதனைத் தொடர்ந்து 1983 - 2007 வரை நான்கு மாகாணங்களில் அடுத்தடுத்து ஆளுநராகப் பதவி வகித்தார். இந்தப் பதவி காலத்தில்  ஊழலுக்கு எதிராக புதிய பிரசாரம் மேற்கொள்ளுதல், வியாபார பொருளாதார மீள்உருவாக்கம், ஆட்சிக்கான ஒரு திறந்த அணுகுமுறை போன்றவற்றை உள்ளடக்கி, சீனாவின் புதிய கொள்கை (neologism) அல்லது சீனாவின் கனவு (Chinese Dream) என்ற கொள்கையின் கீழான புதிய சீன தேசத்தை உருவாக்கும் லட்சியத்தை அப்போதே தனக்குள் உருவாக்கிக்கொண்டார். அமெரிக்காவுக்கும் ஒருமுறை சென்று திரும்பிய ஜின்பிங், அங்கு விவசாயம் மற்றும் சுற்றுலா குறித்த பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொண்டு திரும்பினார். ( இதற்கிடையே 1987 ல் நாட்டுப்புறப் பாடகியான பெங் லியுயானைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜி மிங்ஷே என்ற மகளும் உள்ளார்.) 

இந்த நிலையில் 2007-ம் ஆண்டு சீனாவில் வெடித்த ஓய்வூதிய ஊழல் விவகாரம், சீன கம்யூனிஸ்ட் கட்சியில் பெரும் கலகத்தை ஏற்படுத்திய நிலையில்,  கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஜின்பிங் அறிவிக்கப்பட்டார். இது ஜின்பிங்கின் அரசியல் வாழ்க்கையில் அவரை மேலும் ஒருபடி உயர்த்தியது. பின்னர் அதே ஆண்டிலேயே கட்சியின் மைய அதிகாரக் குழுவான பொலிட் பீரோ நிலைக்குழுவின் ஒன்பது உறுப்பினர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்போதைய அதிபர் ஹூ ஜின்டாவோவுக்குப் பின்னர் கட்சியின் பொதுச் செயலாளராக வரக்கூடியவர்களாக யூகிக்கப்பட்ட நபர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்டார். இந்த நிலையில், 2008 ல் சீன துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 2008 ல் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது. இந்தப் பதவி காலத்தில் ஜின்பிங், சீனாவுக்கான அயலுறவுகளை மேம்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தினார். அதனைத் தொடர்ந்து 2010 ல் மத்திய ராணுவ கமிஷனின் துணைத் தலைவர் என்ற அதிகாரமிக்கப் பதவியில் அமர்த்தப்பட்டார். அதன்பின்னர் 2012 ல் கட்சியின் பொலிட் பீரோ நிலைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஹூ ஜின்டோவுக்குப் பின்னர் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு வந்தார். அதனைத் தொடர்ந்து 2013 மார்ச் 13 ல் சீன அதிபராக பதவியேற்று, உலகின் கவனத்தை சீனாவின் பக்கம் திருப்பத் தொடங்கினார் ஜின்பிங்...

ஜின்பிங் ஆட்சிக் காலத்தில் சீனா விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது எப்படி என்பதை 3-வது அத்தியாயத்தில் பார்க்கலாம்...

===========================================================================================================================

ஆதி சீனாவும் அதன் முதல் தேர்தலும்...

உலகிலேயே மிகப்பெரிய நாடான சீனா, பழைமை வாய்ந்த நாகரிகத்துக்குச் சொந்தமானது. அதன் வரலாறு இந்தியாவைப் போலவே ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்டது. இந்தியாவில் அசோக மன்னரின் ஆட்சி தோன்றுவதற்கு பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு சின்வம்சம் சீனாவில் ஆட்சிக்கு வந்தது. இந்த 'சின்' என்பதிலிருந்துதான் சீனா என்ற பெயரே உருவானது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். அதற்கடுத்து வந்த ஹான் வம்சத்தினர் நானூறு ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அப்போதுதான் புத்த மதம் சீனாவிற்கு வந்தது. அந்தக் காலத்தில்தான் மர எழுத்து கட்டைகளைக் கொண்டு அச்சுக்கலை முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ஹான் வம்ச காலத்தில்தான் அரசாங்கப் பணிகளுக்குப் பணியாளர்களைத் தேர்வு முறையில் தேர்ந்தெடுப்பது அறிமுகப்படுத்தப்பட்டது. 

ஹான் வம்ச வீழ்ச்சிக்குப் பிறகு மூன்று ராஜ்ஜியங்களாகப் பிளவுபட்ட சீனா, ஏழாம் நூற்றாண்டில் டாங் வம்சத்தின் ஆட்சியில் ஒன்றிணைக்கப்பட்டது. இது சீனாவின் பொற்காலம் என்று குறிக்கப்படுகிறது. கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டிலேயே உலகிலேயே மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை சீனா எட்டியிருந்தது.

வேட்டையாடுதலையும் காடுகளில் கிடைத்த காய் கனிகளைச் சேகரித்து உண்பதையுமே பிரதானமாகக் கொண்டு வாழ்ந்த ஆதி சீனர்கள், இப்பொழுதும் சீனாவின் பிரதான உணவாகத் திகழும் அரிசிக்கான நெற் பயிரை கி.மு. 5000-ம் ஆண்டு வாக்கிலேயே பயிரிடத் தொடங்கிவிட்டனர். தெற்கு சீனாவில் நெல் பயிரிடப்பட்டதென்றால், தெற்கு சீனப் பகுதிகளில் சிறுதானியங்கள் பயிரிடப்பட்டன. கூடவே நாய்களும் பன்றிகளும் வீட்டு விலங்குகளாக வளர்க்கப்பட்டன. கி.மு. 3000 -ம் ஆண்டு வாக்கில் தெற்கு சீனப் பகுதிகளில் ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்புகள் தொடங்கின. அதன் பின்னர் கி.மு. 3000 - கி.மு. 2,300 க்கும் இடைப்பட்ட காலத்தில்தான் சீனாவில் குதிரைகள் அறிமுகமாகின. 

சீனப் பெருநிலப்பரப்பில் சீனக் குடியரசின் ஆட்சியானது சிற்றரசு ஆட்சி, மற்றும் ஜப்பானிய ஆக்கிரமிப்பு சீன உள்நாட்டு யுத்தம் போன்றவற்றைக் கண்டு இன்றை அபிவிருத்திகளைப் பெற்றுள்ளது. சீன உள்நாட்டு யுத்தம் 1950 இல் முடிவடையும் போது சீன கம்யூனிசக் கட்சி சீனப் பெருநிலப்பரப்பின் பெரும் பிரதேசத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. 1928 முதல் சீனக் குடியரசானது சீனத் தேசியக் கட்சியால் சர்வாதிகார முறையில் ஆளப்பட்டது. 1950 மற்றும் 1960 இல் இந்தக் கட்சி ஊழல்களைக் குறைத்து பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தது. இதன் காரணமாக நாட்டில் யுத்த அபாயமும் குழப்பநிலையும் தொடர்ந்த போதும் பொருளாதாரம் மிக வளர்ச்சி கண்டது. 1980 மற்றும் 1990 இல் சீனக் குடியரசான ஜனநாயக முறைக்கு மாறுவதற்கான தொடர்ந்த ஈடுபாடு காரணமாக அரசியல் புது வடிவைக் கண்டது.

இதன் படி 1996 ல் சீன அரசு முதலாவது ஜனாதிபதி தேர்தலை நடத்தியது. இக்காலப்பகுதிக்கு முன்னர் வேறுபட்ட தேர்தல் முறைகள் இடம்பெற்ற போதும், குடியரசு சீனாவின் முதலாவது தேர்தல் 1996 ல் இடம்பெற்று அதன்பின்னர் பதவியேற்புகள் இடம்பெற்று சீன நாடு அபிவிருத்தி பாதையில் முன்னேற்றம் காணத்தொடங்கியது. 

(தொடரும்)
                                                தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்Trending Articles

Sponsored