நடைமுறையில் இருக்கும் உலக வரைபடங்கள் தவறாக இருப்பதின் காரணம் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்!Sponsoredன்று நாம் நினைத்த இடத்துக்கு விமானம் மூலமாக மிக எளிதில் சென்றுவிடலாம். ஆனால், சென்ற நூற்றாண்டுக்கு முன்புவரை கடல்வழிப் பயணம் மட்டும்தான். திசைதெரியாத கடல்வழிப் பயணம் என்பது அவ்வளவு சுலபமானது அல்ல... கொடூர முறை மரணத்தை நுனி நாக்கால் சுவைப்பதற்குச் சமம். கடல்வழிப் பயணத்தில் நாடுகளைக் கண்டுபிடித்து, வெற்றிபெற்ற வெகு சிலரை மட்டுமே வரலாறு பதிவு செய்துவைத்திருக்கிறது. ஆனால், அதே கடல் பயணத்தில் புதிய நிலப்பகுதிகளைக் கண்டுபிடிக்கப்போன பல்லாயிரக்கணக்கானவர்கள் என்ன ஆனார்கள் என்று யாருக்குமே தெரியாது. புதிய நிலப் பகுதிகளைத் தேடிய கடல்வழிப் பயணத்தில், அனைவருக்கும் இருந்த சிக்கல்களைக் கலைந்தவர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 'ஜெரார்டஸ் மெர்கட்டர் (Gerardus Mercator)' என்றே சொல்லலாம். அவர் அப்படி என்ன செய்தார் என்று தெரிந்துகொள்வதற்கு முன் இன்றைய தினத்தில் அதாவது, 1594-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் நாள் மெர்கட்டரின் நினைவு நாள் என்பதையும் அறிந்துகொள்வோம்.

Sponsored


நீங்கள் அடிக்கடி கூகுள் மேப் அல்லது உலக வரைபடம் பார்க்கும் பழக்கம் உள்ளவரா? இல்லையென்றாலும் பரவாயில்லை. இப்போது உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட். உங்கள் பிரௌசரில் கூகுள் மேப்பை ஓப்பன் செய்துகொள்ளுங்கள் அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் உலக வரைபடத்தை எடுத்துக்கொள்ளுங்கள். தற்போது உங்கள் பார்வைக்குப் பெரிய பரப்பளவுகளைக் கொண்ட ஐந்து நாடுகளையும், மூன்று கண்டங்களையும் சொல்லுங்கள். அதிகப் பரப்பளவு கொண்ட நாடுகளில் முதல் இடத்தில் ரஷ்யா, இரண்டாவது கனடா, மூன்றாவது கிரீன்லாந்து, நான்காவது அமெரிக்கா மற்றும் ஐந்தாவது இடத்தில் சீனா என்று வகைப்படுத்தி இருப்பீர்கள். அதுபோல கண்டங்கள் என்று எடுத்துக்கொண்டால், பரப்பளவில் முதல் இடத்தில் அன்டார்டிக்கா, இரண்டாவது இடத்தில் ஆசியா மற்றும் மூன்றாவது இடத்தில் வட அமெரிக்கா என்று வகைப்படுத்தியிருப்போம். நாம் வகைப்படுத்தி இருப்பதை யாராவது தவறு என்று சொன்னால், நாம் ஏற்றுக்கொள்வோமா? நிச்சயம் இல்லை... 'கூகுள் பொய் சொல்லாது... கூகுள் மேப் இப்படித்தான் இருக்கிறது' என்று அவர்களைத் துவம்சம் செய்துவிடுவோம். உண்மையில், 'கூகுள்' பொய் சொல்லாது. ஆனால், 'கூகுள் மேப்' பொய் சொல்லும். என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? 

Sponsored


கூகுள் மேப் அல்லது வீட்டில் இருக்கும் உலக வரைபடத்தைப் பார்த்து கணித்துவைத்துள்ள பெரிய நாடுகள் மற்றும் கண்டங்களின் வரிசைகள் உண்மையில் தவறானவையே. மேப்பில் சற்று உற்றுக் கவனியுங்கள். உலக வரைபடத்திலேயே அதிகப் பரப்பளவைக் கொண்டது அன்டார்டிக்காதான். கிரீன்லாந்து மற்றும் கனடா போன்ற நாடுகள் ஆப்பிரிக்கா கண்டம் அளவுக்குப் பெரியதாக இருக்கும். அதுபோல ரஷ்யா என்ற நாடு, தென் அமெரிக்கா என்ற கண்டத்தைவிட பல மடங்கு பெரிதாக இருக்கும். இங்கிலாந்தும், மடகாஸ்கரும் ஒரே அளவில் இருப்பதுபோல இருக்கும். இதேபோன்றுதான் அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, நார்வே, ஸ்வீடன், ஃபின்லாந்து போன்ற நாடுகளின் அளவும். இவை அனைத்தின் பரப்பளவுமே மேப்பில் தவறாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 

உண்மையில், கிரீன்லாந்தை (2.166 million km²) விட ஆப்பிரிக்கா கண்டம் (30.37 million km²)14 மடங்கு பெரியது. கனடாவை (9.98 million km²) விட ஆப்பிரிக்கா கண்டம் மூன்று மடங்கு பெரியது. அதேபோல ரஷ்யா (17.1 million km²) என்ற நாடு, ஒப்பீட்டளவில் தென் அமெரிக்கா கண்டத்துக்கு (17.8 million km²) இணையானது. துல்லியமாகச் சொல்லப்போனால் தென் அமெரிக்காவைவிட ரஷ்யா பரப்பளவில் சற்றுச் சிறியது. இங்கிலாந்து (2,42,495 km²),நார்வே (3,85,203 km²), ஃபின்லாந்து (3,38,424 km²), ஸ்வீடன் (4,47,435 km²) போன்ற நாடுகள் மடகாஸ்கரை (5,87,041 km²) விட மிகச்சிறியவை. பிரேசில் (8.516 million km²) என்ற நாட்டுக்குள், அமெரிக்காவின் அலாஸ்கா (1.718 million km²) என்ற மாகாணத்தைப்போல் சுமார் ஆறு மாகாணங்களை வைத்துவிடலாம். அனைத்தையும்விட வரைபடத்தையே பரப்பளவில் தனதாக்கிக் கொண்டிருக்கும் அன்டார்டிக்கா கண்டம் (14 million km²) படத்தில் இருப்பதில் ஐந்தில் ஒருபங்குதான் உண்மையான பரப்பளவு. அதாவது, அன்டார்டிக்காவானது ரஷ்யா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவைவிட அளவில் சிறியது. இன்னும் சொல்லப்போனால் அன்டார்டிக்காவைவிட ஆப்பிரிக்கா இரண்டு மடங்கு பெரியது. ஆசியா மூன்று மடங்கு பெரியது. 

கிரீன்லாந்து பிரச்னை (greenland problem) என்று கூகுளில் தட்டுங்கள்... இங்கே கொடுக்கப்பட்டிருப்பவை சில உதாரணங்கள் மட்டுமே... புரியவில்லையா? இப்போது உங்கள் கூகுள் மேப்பை (Atlas or Flat), பூமி உருண்டையாக (Glope or Sphere) மாற்றுங்கள். மேற்சொன்ன நாடுகளின் துல்லியமான வித்தியாசங்களைப் பாருங்கள். உலக வரைபடம் அல்லது கூகுள் மேப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் நாடுகளின் அளவுகள் தவறானவை என்று இப்போது புரிகிறதா? உலக உருண்டைக்குள் நாடுகளின் பரப்பளவு பற்றிய சரியான அளவும், உலக வரைபடத்துக்குள் மட்டும் அவற்றைப் பற்றிய தவறான அளவுகளும் எதற்காகக் கொடுக்கப்பட வேண்டும்.

இப்போது ஜெரார்டஸ் மெர்கட்டர் பற்றியும், நடைமுறையில் இருக்கும் தவறான உலக வரைபடம் எப்படித் தோன்றியது என்பது பற்றியும் தெரிந்துகொள்வோம்... கி.பி. 1453-ம் ஆண்டு ஓட்டோமான் துருக்கியர்கள், கான்ஸ்டாண்டி நோபிளைக் கைப்பற்றினர். இதனால் ஆசிய நாடுகளுடனான ஐரோப்பிய வணிகம் துருக்கியர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. ஆசிய நாடுகளுடனான, ஐரோப்பிய வணிகவழித்தடமான தரைவழித்தடம் தடைப்பட்டது. அதனால் கடல்மார்க்கமாகத்தான் ஆசிய நாடுகளைச் சென்றடைய வேண்டும் என்ற நிலை உருவானது. அந்தக் காலகட்டத்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற புவியியல் அளவீட்டு நிபுணரான ஜெரார்டஸ் மெர்கட்டர்க்கு, உலக நாடுகள் அளவுகள் குறித்த வரைபடம் வரையும் பொறுப்பு வழங்கப்பட்டது. அதனால் உலக உருண்டையில் குறுக்கும்நெடுக்குமாகப் பல கோடுகள் வரையப்பட்டன. உருண்டையின் முப்பரிமாணத்தில் உள்ள ஒரு நேர்க்கோட்டைத் தட்டையாக, இருபரிமாணமாக மாற்றும்போது வளைந்த கோடாக மாறியது. இதனால் நிலநடுக்கோட்டுக்கு அருகில் சிறிய அளவிலான கட்டங்களாகவும், நிலநடுக்கோட்டுக்குத் தொலைவில் செல்லச்செல்ல பெரிய கட்டங்களாகவும் மாறின. இதை மையமாகவைத்து 1569-ம் ஆண்டு மெர்கட்டர் உலக வரைபடத்தை வரைந்தார். இப்படி உருவாக்கப்பட்ட வரைபடத்தில் நாடுகளின் பரப்பளவு துருவங்களை நோக்கிச் செல்லச்செல்ல பரப்பளவு பெரிதாக இருந்தது. இந்த வரைபடம் நாடுகளின் திசையைச் சரியாகக் காட்டியது. ஆனால், நாடுகளின் பரப்பளவு பலியாகிவிட்டது. 

இதற்கு ஓர் அறிவியல் காரணமும் வெகுவாகச் சொல்லப்பட்டு வருகிறது. ஒரு சமதள பரப்பின் வளைவு (Flat curvature) பூஜ்ஜியம். ஓர் உருண்டையின் வளைவு (Sphere curvature) பாசிட்டிவ் (positive). ஓர் உருண்டையைச் சரியான சமதளமாக மாற்ற முடியாது. அதுபோல ஒரு சமதளத்தை நம்மால் சரியான உருண்டையாக மாற்ற முடியாது. அறிவியல் வளர்ச்சி கண்ட இந்தக் காலத்தில் மட்டுமல்லாமல் எப்போதுமே அறிவியல் விதி இதுதான். இந்த நிலையே மெர்கட்டர் வரைந்த வரைபடத்திலும் ஏற்பட்டது. 

மெர்கட்டர்க்கு முன்னும்பின்னும் பலரால் உலக வரைபடங்கள் வரையப்பட்டிருந்தாலும், நாடுகளின் திசையை அறிய மெர்கட்டர் வரைபடமே சிறந்தது என அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இந்த வரைபடம்தான் 'மெர்கட்டர் வரைபடம்' (Mercator Map) என தற்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த வரைபடம் மூலம் திசைகளை மட்டுமே அறியமுடியும். நாடுகளின் உண்மையான பரப்பளவு மற்றும் இயற்கை அமைப்பைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால், எப்போதும் உலக உருண்டையைப் பார்த்து தெரிந்துகொள்வதே நல்லது.

 Trending Articles

Sponsored