கனவு காண்... ஊழலை ஒழி... மக்களிடம் செல்! - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் (தொடர்-3)Sponsoredஇந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

“எது நமக்குத் தேவையோ அதைத்தான் நாம் செய்ய வேண்டும். தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும். லட்சக்கணக்கான ஊழல் அதிகாரிகளை நாம் தண்டிக்காமல் போனால் 130 கோடி சீன மக்களை நாம் தண்டித்தவர்களாகி விடுவோம்" - ஐந்தாண்டுகளுக்கு முன் சீன அதிபராக பதவியேற்றவுடன் ஊழலுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றிய ஜின்பிங் சொன்னது இது.

Sponsored


அரசு மட்டத்தில் மேலிருந்து கீழ் வரை புரையோடிப்போய் இருந்த ஊழலைக் கண்டு அதிர்ந்த ஜின்பிங், கட்சியிலும் ஆட்சியிலும் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரையில் மேற்கொண்ட ஊழலுக்கு எதிரான பிரசாரம் மற்றும் நடவடிக்கைகள் கட்சியிலும் மக்களிடத்திலும் மிகுந்த வரவேற்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதில் பல்வேறு ஊழல் தலைவர்கள் சிக்கி நடவடிக்கைகளுக்கு உள்ளாகினர். தொழில்துறை, ஊடகத் துறை, ராணுவம் மற்றும் ரகசிய சேவைத் துறைகளில் புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு பல்வேறு ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. 2014 -ம் ஆண்டில் மட்டும் 70,000 க்கும் அதிகமான அதிகாரிகள் ஊழல் தடுப்பு ஏஜென்சியின் நடவடிக்கைக்கு உள்ளாகினர். 2015 ல் இந்த எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரித்தது. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான ஊழல் அதிகாரிகள் தண்டிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அடியாழம் வரை ஊடுருவியுள்ள ஊழலால் கட்சிக்கும் தேசத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜின்பிங் கருதியதாலேயே ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் மிகக்கடுமை காட்டினார்.

Sponsored


ஜின்பிங்கின் கனவு

முன்னதாக தாம் அதிபராக பதவியேற்றதுமே ஒரு பெரிய வாக்குறுதியை நாட்டு மக்களுக்கு அளித்தார் ஜின்பிங்." சீன அதிகாரத்துக்குப் புத்துயிர் அளித்து, தேசத்துக்குப் புத்துணர்ச்சி அளிக்க தொடர்ந்து போராடப்போகிறேன். இந்த மாபெரும் பொறுப்பு சீன மக்களின் நலனுக்காவே" எனக்கூறி, அது தொடர்பான தனது 'சீனக் கனவை' வெளியிட்டார்.

வலுவான தலைமையுடன் வரலாற்று சிறப்புமிக்க உயரத்தைத் தொடவேண்டும் என்பதுதான் ஜின்பிங்கின் குறிக்கோளாக இருந்தது. அதற்கேற்ப ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததும் ஜின்பிங் கடைப்பிடித்தக் கொள்கைகள் சீனாவை பல்வேறு வகைகளில் மாற்றியது. இதில் குறிப்பிடத்தக்க தனித்துவமான ஒன்றைக் குறிப்பிட வேண்டுமெனில் அது சீன அரசியல் அமைப்புக்குள் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தைக் குவித்ததுதான். ராணுவ மத்திய ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட அரசின் முதல் மூன்று உயரதிகாரத்தின் தலைமைப்பதவிகளை சீன அதிபர் வைத்திருப்பது அந்த நாட்டின் மரபு. இவை தவிர்த்து, நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பான பிரச்னைகளை தலைமையேற்று கையாள்வதற்காக, 2013 மற்றும் 2014 -ம் ஆண்டுகளில் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு கமிட்டிகளுக்கு, அதுவரை தலைவர்களாக இருந்தவர்களை அப்பதவியிலிருந்து அகற்றிவிட்டு, ஜின்பிங்கே தலைவராக அமர்ந்துகொண்டார்.

இது ஒருபுறமிருக்க, அதிகாரக் குவிப்பின் மேலும் ஒரு அம்சமாக சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கட்சியின் சித்தாந்தத்தை வலுவாக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டார். கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம், புதுமையான சிந்தனையுடன் கூடிய மார்க்சிஸ்ட் கொள்கைகளைப் பேச்சிலும் நடவடிக்கைகளிலும் பின்பற்றுமாறு பலமுறை வலியுறுத்தினார். மேலும், கம்யூனிஸ சித்தாந்தங்களிலும், சோஷியலிசத்துடன் கூடிய சீன குணாதிசயங்களிலும் ஆழமான நம்பிக்கை வைக்குமாறும் ஜின்பிங் அவர்களைக் கேட்டுக்கொண்டார். அரசு தரப்பிலும் கல்வி நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் மேற்கத்திய சித்தாந்தத்துக்குப் பதிலாக சீன அதாவது, மார்க்ஸிய சித்தாந்தங்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக அவற்றின் மீதான தனது பிடியை ஜின்பிங் தலைமையிலான அரசு இறுக்கியது.

சீறிப்பாய்ந்த சீர்திருத்த நடவடிக்கைகள்

மேலும், அரசின் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் ஆலோசனைக் குழுவில் சீனாவின் குணாதிசயங்களுடன் கூடிய புதிய வகையிலான சிந்தனையாளர்கள் குழுவை 2015, ஜனவரியில் அமைத்தார் ஜின்பிங். அதே மாதத்திலேயே, மேற்கத்திய பண்புகளை ஊக்குவிக்கும் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை விமர்சிக்கும் பாடப்புத்தகங்களுக்கு சீனாவின் கல்வி அமைச்சர் தடைவிதித்தார்.

அதுமட்டுமல்லாமல், சீன கம்யூனிஸ்ட் கட்சி வகுத்தளித்த அரசியல் கோட்பாடுகளை சீன சிவில் சமூகத்தில் வலுப்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதனால் சிவில் சமூகத்தின் பல மட்டங்களில் அரசின் தணிக்கை நடவடிக்கைகள் அதிகரித்தன. ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள் மீதான அரசின் கட்டுப்பாடுகள் கடுமையாகின. சுருக்கமாக சொல்வதானால் சீன சிவில் சமூகத்தின் பல்வேறு அம்சங்களில் அரசின் பிடி இறுகின. ஜின்பிங்கின் இந்த சீன கம்யூனிஸ சித்தாந்தம் மற்றும் தேசியவாதம் ஆகிய இரண்டுமே 2012-ல் அவர் கொண்டிருந்த 'சீனாவின் கனவு' தொடர்பான விஷயங்களே.

ஜின்பிங்கின் இந்த ''சீன கனவு" மக்களைக் கவர்ந்து அவர்களிடையே நம்பிக்கையை விதைத்தது. கடந்த பல தசாப்தங்களாக ஏற்பட்ட வேகமான வளர்ச்சி சீனாவில் மிகப்பெரிய பிரச்னைகளை உருவாக்கியிருந்தது. பகுத்தறிவற்ற பொருளாதார கட்டமைப்பு, சமூக சமத்துவத்தில் காணப்பட்ட மிகப்பெரிய இடைவெளி, குறைந்துபோன சமூக நீதி, சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு போன்ற சவால்களை ஜின்பிங் எதிர்கொள்ள வேண்டியதிருந்தது. இந்த சவால்களையெல்லாம் எதிர்கொள்ள ஒரே வழி வேகமான சீர்திருத்தங்கள்தான் என ஜின்பிங் நம்பினார். சிறப்பான பொருளாதார செயல்பாடுதான் ஒரு நல்ல நிர்வாகத்துக்கான முக்கிய அளவுகோல் என்பதால், வளர்ச்சியைத் தக்கவைப்பதே ஜின்பிங்கின் முன்னுரிமையாக இருந்தது.

ஜின்பிங்கின் மிக முக்கியமான சீர்திருத்தம் என்பது அரசாங்கத்தையும் சந்தையையும் மறுவரையறை செய்வதாக இருந்தது. இது திட்டமிட்ட பொருளாதாரத்திலிருந்து விலகிச்செல்லும் ஒரு முக்கியமான முடிவாக இருந்தது. சீர்திருத்தம்மீது முழுக்கவனத்தையும் செலுத்துவது என்பது வளங்கள் ஒதுக்கீட்டில் சந்தை சக்திகளை முக்கிய பங்காற்ற அனுமதிக்கும் செயலாகவே இருந்தது. இதுஒருபுறமிருக்க ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கும் விதமாக வறுமையை ஒழிப்பதற்கு ஜின்பிங் முன்னுரிமை அளித்தார். இது தொடர்பான பணிகளில் உண்மையாக உழைக்குமாறு அரசு நிர்வாகிகளை வலியுறுத்தி வந்த ஜின்பிங், இது விஷயத்தில் மக்களின் நம்பிக்கையைப் பெற சாமான்ய மக்களிடம் செல்லுமாறும் அவர்களை அறிவுறுத்தினார்.

மக்கள் நாயகன்

இவ்வாறு மக்கள் நலன் சார்ந்து ஜின்பிங் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் சீன மக்களிடம் வெகுவாக வரவேற்பை பெற்று, அவரை ஒரு மக்கள் நாயகனாக்கின.

வேலையிலிருந்து ஓய்வுபெற்று பென்ஷனில் காலத்தைக் கழித்துக்கொண்டிருப்பவர்கள் கூட ஜின்பிங் ஆட்சியை வெகுவாகப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் அவர்களது பென்சன் தொகை மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. சாங்கிங் என்ற பகுதியைச் சேர்ந்த டாங் என்ற 61 வயது நபர் 2013-ம் ஆண்டு வேலையிலிருந்து ஓய்வு பெறும்போது அவரது மாத ஓய்வூதியம் 1000 யுவானாக இருந்த நிலையில், தற்போது அது மூன்று மடங்கு உயர்த்தப்பட்டு, 3,000 யுவானாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

“நான் கடந்த சில தினங்களாக ஜப்பானில் இருந்தேன். அதற்குச் சில நாள்களுக்கு முன்னர் ஷாங்காய் நகரில் இருந்தேன். கடந்த காலங்களில் இதையெல்லாம் நான் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது" என்று தனது ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்பட்டதால் தம்மால் வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்று வர முடிந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் டாங், " ஜின்பிங் தொடர்ந்து இவ்வாறு செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்" என்கிறார்.

டாங்கைப்போன்றுதான் சீனர்கள் பலரும் ஜின்பிங்கின் ஆட்சியையும் அவரது கொள்கைகளையும் குறிப்பாக, ஊழலுக்கு எதிரான அவரது நடவடிக்கைகளை வெகுவாகப் புகழ்கின்றனர்.

ஜின்பிங்கின் ஆட்சியில் பொது நிர்வாகம் மிகத் திறமையுடன் நிர்வகிக்கப்படுவதாக பாராட்டுகிறார் சுற்றுலா ஏற்பாட்டாளரான லீ லாங். "கடந்த காலங்களில் அரசு அதிகாரிகளில் பலர் மக்களுக்குச் சேவையாற்றுவதைக் காட்டிலும் அதிகமான நேரம் செல்போனில் விளையாண்டு கொண்டிருப்பார்கள் அல்லது புகைப்பிடிக்கச் சென்று நேரத்தைக் கழிப்பார்கள். ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை. எல்லாமே மாறிவிட்டது" என்கிறார் லீ.

தைவான், தென் சீன கடல் விவகாரங்கள், வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி ஜின்பிங் வெளியிட்ட தொலைநோக்குத் திட்டங்கள் சீனர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக கூறும் லீ, " சீனா குறித்த ஜின்பிங்கின் கனவு, இதுவரை அவர் செய்து காட்டியுள்ள சாதனைகள் போன்றவை என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, இனிமேல் சீனாவால் முடியாதது எதுவுமே இல்லை என்ற எண்ணத்தை என்னுள் ஏற்படுத்தியுள்ளது" என்றும் கூறுகிறார்.

லீயைப் போன்றே மா ஷி என்ற 32 வயதாகும் திட்ட அதிகாரி, " தொழில்நுட்பவியலில் ஜின்பிங் அரசு காட்டி வரும் அக்கறை காரணமாக பணமில்லா பரிவர்த்தனைகள் போன்ற நவீன டெக்னாலஜிகளைப் பயன்படுத்துவதில் சீனா உலக அரங்கில் முன்னோக்கிச் செல்கிறது " என்று பாராட்டுத் தெரிவிக்கிறார்.

"அதிபர் ஜின்பிங் இந்த தேசத்தை மேலும் அதிகமான ஸ்திரத்தன்மையுடன் கூடிய நாடாக மாற்றியுள்ளார். கடந்த ஐந்தாண்டுகளில் எங்களது வாழ்க்கைத்தரம் பெருமளவு மேம்பட்டுள்ளது" என்கிறார் பெய்ஜிங் நகரைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவர்.

"நான் ஹாங்ஷாவூ பகுதியைச் சேர்ந்தவன். ஜின்பிங் ஆட்சிக்கு வந்தபிறகு அரசின் கொள்கைகளில் மேற்கொண்ட மாற்றங்களால் ஜேக் மா, அலிபாபா மற்றும் தாபோ போன்ற இணையதள வர்த்தக நிறுவனங்கள் சீன மக்களின் வாழ்க்கையையே மாற்றி அவர்களுக்கு நிறைய செளகரியங்களை ஏற்படுத்தித் தந்துள்ளன. இந்த நிறுவனங்களின் வளர்ச்சியை சாத்தியமாக்கியது அவற்றுக்கு ஆதரவாக அமைந்த அரசின் கொள்கைகள்தான்" என்கிறார் தனியார் நிறுவனமொன்றின் தலைமை நிர்வாக அதிகாரியான 38 வயதான ஷாங் ஹூ.

காத்திருக்கும் சவால்கள்...

இவ்வாறு அரசு நிர்வாகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், தான் செயல்படுத்த நினைத்த முக்கிய சீர்திருத்தங்களை ஜின்பிங் வெற்றிகரமாக செயல்படுத்தத் தொடங்கியுள்ள போதிலும், அவரது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புகளும் எழாமல் இல்லை. குறிப்பாக அதிகார குவிப்பு, ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் சட்டவிதிகளை மீறி பயன்படுத்தப்படும் அதிகாரம், பேச்சு சுதந்திரம், கருத்துரிமை இல்லாதது போன்றவற்றுக்கு எதிராக ஜின்பிங்குக்கு உள்நாட்டில் எதிர்ப்பு என்றால், 'பாகிஸ்தானை தனது காலனி நாடாக ஆக்கிவிடுமோ சீனா?' என்று பாகிஸ்தானியர்கள் அச்சம் தெரிவிக்கிற சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டம், ஐரோப்பா, ஆசியா என இரண்டு கண்டங்களின் ஒட்டுமொத்த நுகர்வோர் சந்தையையும் தனது டிராகன் கரங்களுக்குள் கொண்டுவரும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ‘ஒரு சூழல் - ஒரு பாதை’ திட்டத்தைச் செயல்படுத்த சீனா திட்டமிடுவது, உலக அரங்கில் அமெரிக்க அதிபரைவிட தம்மைச் செல்வாக்கு மிக்க நபர் என்ற பிம்பத்தை உருவாக்க திட்டமிடுவது, எல்லையில் அவ்வப்போது இந்தியாவைச் சீண்டுவது போன்றவையெல்லாம் உலக அரங்கில் ஜின்பிங்குக்கு எதிர்ப்புகளையும் சவால்களை ஏற்படுத்தியுள்ளன. அவற்றையும் வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.


சீனாவைச் சிதறடித்த ஓபியம் போர்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் சீன பேரரசுக்கும் பிரிட்டனுக்கும் இடையே நடந்த ஓபியம் போருக்கு (1839–42) நவீன சீன வரலாற்றில் முக்கிய இடம் உண்டு. உலகின் பல நாடுகள் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த சமயம் அது.

இந்த நிலையில் தங்கள் தேவைக்காக தேயிலை, பட்டு, பீங்கான் பாத்திரங்கள் போன்ற பொருள்களை சீனாவிலிருந்து ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்தன. அதேசமயம், தன்னிறைவாக இருந்ததால் ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை சீனா இறக்குமதி செய்யவில்லை. இதனால், சீனா பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டது.

இதைக்கண்டு பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்கள் பொறுமினர். இதையடுத்து, தந்திரமான ஒரு யோசனையை பிரிட்டன் கையாண்டது. அதாவது, சீனாவில் போதைப்பொருளை விற்பதன் மூலம், இளைஞர்களை பாழாக்கி பொருளாதாரத்தைக் கைப்பற்றலாம் என்பது பிரிட்டனின் திட்டம்.

பிரிட்டனின் திட்டத்துக்குத் தோதாக அதுநாள் வரைக்கும் ஓபியத்தை (அபின்) சில நோய்களைக் குணப்படுத்துவதற்காக மட்டுமே பயன்படுத்தி வந்த சீன மக்கள், போதைக்காக பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் அனைத்து தரப்பு மக்களும், குறிப்பாக சீன இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானதால், சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, சீனாவில் போதைப் பொருளை இறக்குமதி செய்தது. இதனால் பிரிட்டனின் வியாபாரம் அமோகமாக நடந்தது. இந்த நிலையில் போதைப்பொருள் பழக்கத்தால், சீனாவில் பல சீர்கேடுகள் தலைதூக்கின. இதனால் அதிர்ச்சியடைந்த கிங் சீனப்பேரரசு (Qing Dynasty), இங்கிலாந்தின் போதைப்பொருள் இறக்குமதியைத் தடை செய்தது. எனினும், அரசின் தடையை மீறி, சீனக் கடைத்தெருக்களில், அபின் மலிவாக கிடைத்தது. சீனாவின் மக்கள் வாழ்க்கையும், பொருளாதாரமும் சின்னாபின்னமாகி, எதிர்காலமே கேள்விக்குறியானது.

இதையடுத்து, மன்னர் டாவோகுவாங் (Daoguang) போதைப்பொருளைப் புகைப்போருக்கும், விற்பனை செய்வோருக்கும் எதிராக, கடும் நடவடிக்கைகள் எடுத்தார். தடையை மீறிய பிரிட்டன் வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டு, சிறைக்குள் தள்ளப்பட்டனர். அபின் ஏற்றி வந்த கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த பிரிட்டன் அரசு, கிழக்கத்தியக் கம்பெனி படைகள் மூலம், சீனாவின் மீது போர் தொடுத்தது.

முதலாம் ஓபியம் போர் 1839 - 1842 - ம் ஆண்டு வரை நடந்தது. இந்தப்போர் முதலாம் ஆங்கிலோ – சீனப் போர் என்றும் அழைக்கப்பட்டது. இந்தப் போரில், பிரிட்டன் வெற்றி பெற்றது. பிரிட்டனின் வெற்றியால், சீனாவில் எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் தாராளமாகக் கிடைக்க, மக்கள் மயக்கத்திலேயே உருண்டு எழுந்தனர்.

இரண்டாம் அபின் போர் 1856 - 1860- ம் ஆண்டு வரை நடந்தது. இதிலும் பிரிட்டன் வெற்றி பெற்றது. வேறு வழியில்லாமல், பிரிட்டனுடன் சமாதான உடன்படிக்கைகளை செய்துகொள்ளும் நிலைக்கு சீனாவின் கிங் பேரரசு தள்ளப்பட்டது.

பிரிட்டன் படைகள் கவுலூன் தீபகற்பம் மற்றும் கல்லுடைப்பான் தீவு வரையிலான நிலப்பரப்பை கைப்பற்றிக்கொண்டன. ஹாங்காங் தீவும் பிரிட்டன் படைவசம் சென்றது. ஹாங்காங், பிரிட்டனின் ஒரு குடியேற்ற நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. சீனாவால் எரிக்கப்பட்ட அபினுக்கு சீனாவிடமிருந்து நஷ்ட ஈடும் பெறப்பட்டது.

இந்தப் போர்களில், சீனாவுக்கு ஏற்பட்ட தோல்வியும், பிரிட்டனுக்கு சாதகமாக செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும், கிங் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணமாகின. கூடவே வலிமையான சீன நாகரிகம் சிதையத் தொடங்கி, அரச வம்சத்துக்கு எதிராக, பொதுமக்கள் கிளர்ச்சி செய்வதற்கு இந்தப் போர்கள் முக்கிய காரணங்களாக அமைந்தன.

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Sponsored