கர்த்தரை மற... கம்யூனிஸத்தைத் துதி! - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் (தொடர்-4)Sponsoredஇந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

சீனாவின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள வறிய கிராமம் அது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் வாழும் இந்தக் கிராமத்தில் அரசு சார்பில் நிவாரணங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்ய  அரசு அதிகாரிகள் குழு ஒன்று அங்கு வந்தது. வந்தவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தார்கள். பல இடங்களில் இயேசு கிறிஸ்துவின் உருவப்படங்கள் அந்த ஏழைகளை நோக்கி, “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்று சொல்வதுபோல் நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்தன. தங்களின் வறுமைக்கு இயேசு ஏதாவது வழிகாட்டுவார் என்ற நம்பிக்கையுடன் நாட்களை நகர்த்திக் கொண்டிருப்பவர்களிடம் வந்த அரசு அதிகாரிகள், “உங்களது கஷ்டங்கள் தீர வேண்டுமானால் இனிமேல் நீங்கள் கர்த்தரை நம்பாதீர்கள்; அதற்குப் பதிலாக கம்யூனிஸ்ட் கட்சி மீதும் அதிபர் ஜின்பிங் மீதும் நம்பிக்கைக் கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்துவதோடு மட்டுமல்லாது, வீடுகளிலும் வீதிகளிலும் இயேசு கிறிஸ்துவின் உருவப்படங்களுக்குப் பதிலாக ஜின்பிங்கின் படங்களை வைக்குமாறு வலியுறுத்துகின்றனர். 

Sponsored


வேறு வழியில்லாமல் அவர்களும் அதற்கு ஒப்புக்கொள்கின்றனர். இது, ஜின்பிங் தலைமையிலான அரசு மேற்கொள்ளும் பல்வேறு அடக்குமுறை நடவடிக்கைகளில் ஒன்று. 

Sponsored


'உலக வல்லரசு' என்ற ஒற்றை இலக்குடன் சீனாவை முன்னேற்றத் துடிக்கும் அந்த நாட்டு அதிபர் ஜின்பிங் தலைமையிலான அரசு,  நிர்வாகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், தான் நினைத்த முக்கிய சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயல்படுத்தத் தொடங்கியுள்ள போதிலும்,  அதிகார குவிப்பு, ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் காணப்படும் சட்டவிதி  மீறல்கள், பேச்சு சுதந்திரம், கருத்துரிமை இல்லாதது போன்ற அம்சங்களோடு மனித உரிமைகள் நசுக்கப்படுவது, சிவில் சமூகத்தின் மீது காட்டப்படும் கெடுபிடிகள், தொழிலாளர் உரிமைகள் நசுக்கப்படுவது, ஊடக சுதந்திரமின்மை, தேசியவாதம் போன்றவை காரணமாக இந்த ஆட்சியில் சீன மக்கள் மிகவும் அடக்குமுறைக்கு ஆளாகிவிட்டதாக கொதிக்கின்றனர் சீன மனித உரிமை ஆர்வலர்கள். குறிப்பாக, கிறிஸ்துவ சிறுபான்மை சமூகத்தினரின் நிலை பரிதாபமாக உள்ளது. 

கர்த்தரின் மீது கொண்டுள்ள இவர்களது விசுவாசத்தை அப்படியே கம்யூனிஸ்ட் கட்சி மீது திருப்ப வேண்டும் என்று கங்ஙணம் கட்டிக்கொண்டு பல்வேறு அரசு குழுக்கள் களத்தில் இறக்கிவிடப்படப்பட்டுள்ளன.  ஹுவாங்ஜின்பு என்ற நகரப்பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு அருகிலுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனைக்காக வருவார்கள். அவர்கள் ஒவ்வொரு குடும்பத்தினரையும் சந்தித்து, வறுமை ஒழிப்புக்காக ஜின்பிங் அரசு வகுத்துள்ள கொள்கைகளையும் திட்டங்களையும் எடுத்துச் சொல்லி, அவை எவ்வாறு அவர்களது வறுமையைப் போக்க உள்ளது என்று அவர்களை வஞ்சனையில்லாமல் கற்பனைக் கனவுகளில் மிதக்க வைத்து,  மெள்ள மெள்ள அவர்களது மனதைக் கரைக்கின்றனர் அக்குழுவினர். அதே சமயம் அவர்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் பொருள்கள் தொடர்பான பிரச்னைகளையும் தீர்க்கிறார்கள். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் இறுதியில், அவர்களது மத நம்பிக்கையை  மெள்ள மெள்ள கம்யூனிஸ்ட் கட்சி மீது திருப்பச் செய்வதில் அரசு அதிகாரிகள் வெற்றிபெறத் தொடங்குகின்றனர். 

கர்த்தரை மற... கம்யூனிஸத்தைத் துதி! 

சீனாவில் மாவோக்குப் பின்னர், அவரைப்போன்றே வலிமைமிக்கத் தலைவராக உருவெடுத்துள்ள ஜின்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி, வருகிற 2020-ம் ஆண்டுக்குள் நாட்டிலிருந்து வறுமையை முற்றிலும் ஒழிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அறிவித்து,  அதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு சீனாவில் கடந்த பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு எந்தவித பலனையும் அளிக்கவில்லை; அவர்கள் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ள நிலையில், இந்த வறுமை ஒழிப்பு நடவடிக்கை மூலம் அவர்களை தங்கள் பக்கம் ஒருங்கிணைக்க முடியும் என கணக்குப் போடுகிறது கம்யூனிஸ்ட் கட்சி.

அதன் காரணமாகவே வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் உள்ளூர் அரசு நிர்வாகங்கள் இரண்டு மடங்கு முயற்சிகளை மேற்கொள்கிறது. வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளினால் பயன்பெறும் அந்தக் கிராமப்புற கிறிஸ்தவ பயனாளிகளிடம், அவர்களது இல்லங்களில் உள்ள இயேசு கிறிஸ்துவின் உருவப்படங்கள், சிலுவைகள், நற்செய்தி வாசகங்கள் போன்றவற்றை அகற்றிவிட்டு, அவற்றுக்குப் பதிலாக - மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் மாவோ காலத்தில் சீனர்களின் இல்லங்களில் அவரது உருவப்படங்கள் நீக்கமற இடம்பெற்றிருந்ததுபோன்று - அதிபர் ஜின்பிங்கின் உருவப்படங்களை வைக்குமாறு அறிவுறுத்துகின்றனர். "கர்த்தரை மற... கம்யூனிஸத்தைத் துதி!" என்பது புதிய வேதவாக்காக சொல்லப்படுகிறது.

இதன்மூலம் நாத்திக கட்சியான கம்யூனிஸ்ட், கிறிஸ்தவத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட கிராமப்புற ஏழை மக்களிடமும், வளர்ச்சியடைந்த நகர்ப்புற மக்களிடமும் கம்யூனிஸத்தைப் பரவலாக்குவதில் கடும் முயற்சிகளை மேற்கொள்கிறது. இத்தகைய தொடர் பிரசாரங்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக ஆயிரக்கணக்கான கிராம மக்கள், தங்களது வீடுகளில் இடம்பெற்றிருந்த மத வாசகங்கள், ஓவியங்களை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக அதிபர் ஜின்பிங்கின் உருவப்படத்தை மாட்டத் தொடங்கி உள்ளனர். 

இவை ஒருபுறமிருக்க, அரசின் ஜெகஜ்ஜால பிரசாரங்களுக்கெல்லாம் மயங்காமல் அல்லது மிரட்டல்களுக்கு அடிபணியாமல், கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் தொடர்ந்து தேவாலயங்களுக்கு வந்துகொண்டுதான் உள்ளனர். அதேப்போன்று ஆங்காங்கே கிறிஸ்தவ பாதிரிமார்களின் வீடுகளிலும் பிரார்த்தனைகளும் பைபிள் உபதேசங்களும் தொடரத்தான் செய்கின்றன. 

தேவாலயங்களுக்கு கெடுபிடி

இதனால் தேவாலயங்களையும், வீடுகளில் பிரசங்கங்கள் செய்வோரையும் குறிவைத்து அரசின் கண்காணிப்பு நடவடிக்கைகளும் கெடுபிடிகளும் தீவிரமாகி உள்ளன. இதிலிருந்து தப்புவதற்காக "வீடுகளில்" நடத்தப்படும் பிரசங்கக் கூட்டம் அதிகம் பேரைக் கொண்டிராமல் நான்கைந்து பேர்களைக் கொண்ட சிறிய குழுக்களாக மாற்றி நடத்தப்படுகின்றன. 

தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் ஷுஹாய் பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான எனோச். வாரா வாரம் தேவாலயத்துக்குச் செல்லும் வழக்கமுடையவர். வீட்டிலும் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். வீட்டுச் சுவரில் பெயர்ப் பலகையோடு, சிலுவைச் சின்னமும் பதிக்கப்பட்டிருக்கும். வீட்டு வரவேற்பறையில், வருபவர்கள் அமர இருக்கைகள் வரிசையாக போடப்பட்டிருக்கும். தற்போது அரசின் கெடுபிடிகள் காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் தேவாலயத்துக்குச் செல்வதை நிறுத்திவிட்டார் எனோச். ஆனால் வீட்டில் மட்டும் பிரார்த்தனைக் கூட்டத்தைத் தொடர்கிறார். அதுவும் எப்படி? வீட்டுச் சுவரில் பதிக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையையும் சிலுவைச் சின்னத்தையும் அகற்றிவிட்டு. 

மேலும், வீட்டு வரவேற்பறையில் வரிசையாக போடப்பட்டிருந்த இருக்கைகளுக்குப் பதிலாக இரண்டு மூன்று சோபாக்கள் வட்ட வரிசையில் போடப்பட்டுள்ளன. அவற்றில் அமர்ந்துதான் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெறுகிறது. ஆனால் வெளியிலிருந்து பார்க்கும்போது ஏதோ உறவினர்களோ அல்லது நண்பர்களோ அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கும் தோற்றத்தைக் கொடுக்கும். “இவையெல்லாம் அரசுக்கு உளவு சொல்லும் உளவாளிகளிடமிருந்தும் போலீஸிடமிருந்தும் தப்புவதற்காகத்தான்" என்கிறார் எனோச். 

சீனாவில் தற்போது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. இத்தனை கெடுபிடிகளுக்கு மத்தியிலும் "வீட்டுத் தேவாலயங்களின்" எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மத பழக்கவழக்கங்களை பின்பற்றுவதில் அரசு தரப்பில் விதிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகளும், தேவாலயங்களைக் கட்டாயப்படுத்தி மூடச் செய்வதும் சிறுபான்மையினரிடத்தில் மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கூட்டமாக கூடுவதற்குக் கூட காட்டப்படும் கெடுபிடிகள் அவர்களிடையே அடக்குமுறையாக பார்க்கப்படுகின்றன. 

“மத விவகாரங்கள் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் அமல்படுத்தப்பட்ட புதிய ஒழுங்குமுறை விதிகள், கட்டுப்பாடுகள், விதி மீறல்களுக்கு விதிக்கப்படும் கடுமையான தண்டனை போன்றவை ஆங்காங்கே எஞ்சியிருக்கும் தேவாலயங்களுக்குப் பெரும் நெருக்கடிகளைக் கொடுத்துள்ளதால், அவையும் காலப்போக்கில் மூடப்பட்டுவிடும் என நான் அச்சப்படுகிறேன்” என்று கூறுகிறார் எனோச் மேலும். கணினி தொழில்நுட்ப வல்லுனரான இவர், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர்தான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்.

கிறிஸ்தவத்தின் புராட்டஸ்டன்ட் அமைப்பு சீனாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் மத அமைப்புகளில் ஒன்றாக உள்ளது. சீன மக்களில் சுமார் 9 கோடி முதல் 11 கோடிப் பேர் இந்த மத அமைப்பை பின்பற்றுபவர்களாக உள்ளனர் என்றும், இவர்களில் 3 கோடிப் பேர் மட்டும் அரசின் அதிகாரபூர்வ தேவாலயங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் என்றும், மற்றவர்கள் தொழிற்சாலை கட்டடங்களிலும் வீட்டின் வரவேற்பறைகளிலும் செயல்படும் விதிமுறைகளை மீறி பதிவு செய்யப்படாத தேவாலயங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் என்றும் கூறுகிறார் பல்கலைக்கழகம் ஒன்றின் பேராசிரியரான யாங் ஃபெங்காங். 

மத நிகழ்ச்சிகளுக்கு மறுப்பு! 

“இதுவரைக்கும் குடும்பத்தினர் ஒன்றுகூடல் பாணியில் நடத்தப்பட்டு வந்த பிரார்த்தனைக் கூடங்கள் அரசால் சகித்துக்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால், மத விவகாரங்கள் தொடர்பான ஒழுங்கு முறை விதிகளில் கடந்த பிப்ரவரி மாதம் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் அமலுக்கு வந்துவிட்டதால் நிலைமை முன்போல் இனி இருக்காது" என்கிறார் யாங். 

உதாரணத்துக்கு, அரசின் ஒப்புதலைப் பெறாமல் மத நிகழ்ச்சிகளை நடத்துபவர்களுக்கான அபராதம் ஒரு லட்சம் யுவானிலிருந்து மூன்று லட்சம் யுவானாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய விதிமுறைகளின்படி அங்கீகாரம் பெறாத மத குழுக்கள் நன்கொடைகள் பெறுவதும், இணைய தளம் மூலமாக மதத் தகவல்களை அளிப்பது அல்லது அவர்களது மத நம்பிக்கைகள் தொடர்பான பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளன.

“இந்த அபராதங்கள் நிச்சயமாக ஏராளமான தேவாலயங்களின் செயல்பாடுகளை முடக்கிவிடுவதோடு,  லட்சக்கணக்கான கிறிஸ்தவர்களின்  மனதில் மிகுந்த வேதனையை ஏற்படுத்திவிடும்” என்கிறார் மேரிலாண்டில் உள்ள லயோலா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கேர்ஸ்டென் வேலா. 

தேவாலயங்களுக்கு எதிராக அரசு தரப்பு மேற்கொண்ட வழக்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் 2012 முதல் 2016-ம் ஆண்டு வரை பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டுகிறது அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு சீனாவில் இயங்கும் கிறிஸ்தவ உதவிக்குழு ஒன்று. 2015-ல் 500-க்கும் அதிகமான தேவாலய தலைவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அதுவே 2016 -ல் 600-க்கும் அதிகமாக சென்றதாகவும், பல தேவாலயங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அங்கிருந்த சிலுவைச் சின்னங்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதாகவும் அந்தக் குழு மேலும் கூறியுள்ளது. 

கம்யூனிஸத்தை நம்புவோர் ரட்சிக்கப்படுவார்கள்! 

இந்த நிலையில் தங்களது நடவடிக்கைகளை நியாப்படுத்தும் சீன அரசு அதிகாரிகள், “பல ஏழைக்குடும்பங்கள் ஏழ்மை நிலைக்குச் சென்றதற்கு அந்த குடும்ப உறுப்பினர்களிடையே காணப்படும் உடல் நலக்குறைவுதான் காரணம். அதற்காக உரிய சிகிச்சை எடுக்காமல் இயேசு கிறிஸ்து தங்களது நோயைக் குணப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இதனால்தான் நாங்கள் அவர்களைச் சந்தித்து நோய் என்பது உடல் சார்ந்தது என்றும், அதற்கு சிகிச்சை எடுத்தால்தான் குணமாகும் என்றும் அறிவுறுத்தி, அவர்களுக்கு உண்மையிலேயே உதவக்கூடியவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினரும், அதிபர் ஜின்பிங்கும்தான் என்றும் புரிய வைக்கிறோம்" என்கிறார்கள். 

ஹுவாங்ஜின்பு மாகாணத்தின் வறுமை ஒழிப்பு நடவடிக்கைக்கான பொறுப்பாளரான கி யான், " பெரும்பாலான கிராமப்புற மக்கள் அப்பாவிகளாக உள்ளனர். 'கடவுள்தான் தங்களது மீட்பர்' என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால் எங்களது தொண்டர்கள் அவர்களிடம் சென்று யதார்த்தத்தை எடுத்துரைத்து விளக்கிய பின்னர், அவர்கள் தங்களது தவறுகளை உணர்ந்துகொண்டனர். இனிமேல் உதவி தேவையென்றால் இயேசு கிறிஸ்துவுக்குப் பதிலாக கம்யூனிஸ்ட் கட்சியை நம்ப வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். அரசு தரப்பில் அதிபர் ஜின்பிங்கின் உருவப்படங்கள் ஆயிரக்கணக்கில் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் அதைத் தங்களது வீட்டுச் சுவர்களில் தொங்கவிட்டுள்ளனர்" என்று கூறுகிறார்.

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அவர் இவ்வாறு கூறுகிறபோதிலும் அண்டை நகரமான யுகான் என்ற நகரைச் சேர்ந்த லியூ என்பவர் கூறுவது வேறு விதமாக உள்ளது. "கிறிஸ்தவர்கள் யாருக்கும் இயேசுவின் படங்களை அகற்றுவதில் விருப்பமே இல்லை.  அவர்கள் மதத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கையும் கொண்டுள்ளனர். ஆனால் வேறு வழியில்லை. அரசு அதிகாரிகள் சொல்கிறபடி கேட்காவிட்டால், வறுமை ஒழிப்பு நிவாரண உதவி எங்களுக்கு கிடைக்காது" என்கிறார் லியூ. 

ஆனால் இதனை மறுக்கும் கி யான், "அவர்களை வீட்டின் மையப்பகுதியில் உள்ள மதம் சம்பந்தமான படங்களைத்தான் அகற்றுமாறு சொல்கிறோம். வீட்டின் மற்ற அறைகளில் அவற்றை வைத்துக்கொள்ள தடையேதும் இல்லை. அதில் நாங்கள் தலையிட மாட்டோம். நாங்கள் அவர்களிடம் எதிர்பார்ப்பது கட்சி அவர்களுக்கு அளிக்கும் உதவியையும் தயவையும் மறந்துவிடக் கூடாது என்பதைத்தான். அவர்களது மத நம்பிக்கையின் மீது பற்று வைக்க அவர்களுக்கு இன்னமும் சுதந்திரம் உள்ளது; கூடவே எங்கள் கட்சி மீதும் நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என்பதைத்தான்" என்கிறார்.  

ஒன்றின் மீதான நம்பிக்கையும் பற்றும் இயல்பாக வரவேண்டுமேயொழிய கட்டாயப்படுத்தி வரவழைப்பது, சீனாவை உலகின் வல்லரசாக்கும் கனவுக்குப் பெருமை சேர்க்குமா என்பதை ஜின்பிங்தான் சொல்ல வேண்டும். 

                                                                                              தொடரும்...

-------------------------------------------

சீனாவில் புத்த மதம் பரவியது எப்படி? 

உலகின் மூன்று பெரிய மதங்களில் புத்தமதமும் ஒன்று. புத்தரின் போதனைகளின் அடிப்படையில்தான் புத்தமதம் தோன்றியது. புத்தமதம் இந்தியாவில் தோன்றினாலும் படிப்படியாக இலங்கை, திபெத், சீனா, ஜப்பான், கொரியா போன்ற ஆசியாவின் பிற நாடுகளில் பரவியது. 

முதலாம் மற்றும் இரண்டாம் நூற்றாண்டு காலகட்டங்களில்தான் பட்டுப் பாதை வழியாக  இந்த மதம் சீனாவுக்கு முதலில் வந்தது. பல்வேறு வணிகப்பொருட்களுடன் இந்தியாவிலிருந்து பட்டுப் பாதை வழியாக வந்த வணிகர்களுடன் பயணித்த புத்த துறவிகள், தாங்கள் வந்த வழியெங்கும் புத்தமதத்தைப் பரப்பியபடி வந்தனர். அந்த வகையில் மத்தியக் கிழக்கு, இந்தியா, மத்திய ஆசியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையே வர்த்தக போக்குவரத்துக்கும், கலாசார பரிவர்த்தனைக்கும் பட்டுப்பாதை முக்கியப் பங்காற்றியது. இதன் விளைவாக, பிற்பாடு வந்த காலக்கட்டங்களில் சீனர்களின் வாழ்க்கை, கலாசாரம் போன்றவற்றில் புத்தமதம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

கன்ஃபூசியனிஸம் சீனாவில் ஆதிக்கம் செலுத்திய கொள்கை. புத்தயிஸத்துக்கும் கன்ஃபூசியனிஸத்துக்கும் இடையே நிலவிய முரண்பாடுகளால் புத்தமதம் சீனாவில் பரவுவதில் ஏராளமான தடைகளைச் சந்திக்க வேண்டியதிருந்தது. இதனிடையே சீனாவின் மற்றொரு பெரிய மதமாக விளங்கிய டாவோயிஸம், புத்தயிஸத்திலிருந்து சில வேறுபாடுகளைக் கொண்டிருந்தது. டாவோயிஸம் இயற்கையுடன் இணக்கமாக இருக்க வலியுறுத்திய அதேசமயம், புத்தயிஸம் மனிதனின் உள்மன கட்டுப்பாட்டை வலியுறுத்தியது. 

இத்தகைய நிலையில், சீன சூழலுக்கு ஏற்ப தாக்குப்பிடிக்க ஏதுவாக, முன்னோர் வழிபாடு மற்றும் சீனாவின் படிநிலை அமைப்புகளை கடைப்பிடிப்பதன் வாயிலாக புத்தயிஸம் சீன வாழ்க்கை வழிமுறைகளைத் தழுவிக்கொண்டது. இதன்மூலம் புத்தமதம் சீன கலை, கலாச்சார சிந்தனைகளை படிப்படியாக ஏற்றுக்கொண்டு நாடு முழுவதும் பரவியது. 

இன்னொரு வரலாற்றுத் தகவலும் உண்டு. ஹன் வம்சம் சீனாவில் ஆட்சி புரிந்த காலத்தில் ஹான் பேரரசர் மிங்கின் கனவில் புத்தர் தோன்றினார். அதற்கு அடுத்த தினமே பேரரசர் மிங், தன் அதிகாரிகளை அழைத்து தனது கனவில் தோன்றிய உருவம் என்ன என்பதையும், அது எதற்காக தோன்றியது என்பதையும் அறிய மேற்கு பகுதிக்கு, அதாவது பட்டுப்பாதை பகுதிக்குச் சென்று பார்வையிட்டு வருமாறு உத்தரவு பிறப்பித்தார். அதனை ஏற்று அதிகாரிகளும் அங்கு சென்று பார்த்தபோது இரண்டு புத்தத் துறவிகள் இரண்டு வெள்ளைக் குதிரைகளில் வந்துகொண்டிருந்தார்கள். மேலும், அந்த புத்தத் துறவிகளிடம் புத்தரின் உருவப்படங்கள் இருந்ததோடு, குதிரைகளும் புத்தரின் தத்துவங்களால் நிரம்பி வழிந்தன. இதனையடுத்து அந்த புத்த துறவிகளை வணங்கி வழிபட்ட அதிகாரிகள், அவர்களை தங்களுடன் வருமாறு கூறி, சீனாவின் தலைநகருக்கு அழைத்துச் சென்று பேரரசர் மிங் முன் கொண்டுவந்து நிறுத்தினர். 

அவர்களிடம் இருந்த புத்தரின் உருவப்படங்களைப் பார்த்த பேரரசர் மிங், தான் கனவில் கண்டது அந்த உருவத்தைத்தான் என்று உணர்ந்து கொண்டாராம். இதனையடுத்து அவர் அந்த துறவிகளிடம் புத்தரின் தத்துவங்களையும் போதனைகளையும் சீன மொழியில் மொழிபெயர்த்துத் தருமாறு கேட்டுக்கொண்டார். மேலும் அவர்கள் அந்தப் பணிகளை செய்யும்போது தங்குவதற்காக புத்தர் கோயில் ஒன்றையும் கட்டினார். அந்தக் கோயில் பின்னர், (புத்தரின் போதனைகளைச் சுமந்துவந்த இரண்டு வெள்ளைக் குதிரைகளையும் கவுரவிக்கும் விதமாக) வெள்ளை குதிரைக்  கோயில்  என்று அழைக்கப்பட்டது. 

அதற்குப் பின்னர் இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஹன் வம்சம் சிதைந்துபோன நிலையிலும், புத்தமதம் மீதான ஆர்வம் சீனாவில் தொடர்ந்தது. பல்வேறு புத்தத் துறவிகளாலும் மேதைகளாலும் புத்தரின் போதனைகள் சீன மொழியில் தொடர்ந்து மொழிபெயர்க்கப்பட்டன. இதனாலேயே புத்தமதம் சீனாவில் தொடர்ந்து பரவி, இன்றளவும் நீடிக்கிறது. 

---------------------------------Trending Articles

Sponsored