“இந்தியால ஜெயிலெல்லாம் நல்லா இல்லை!” - ‘அடேங்கப்பா’ காரணம் சொல்லும் மல்லையாSponsoredஎஸ்.பி.ஐ மற்றும் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் கடனாகப் பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாயை தொழில் அதிபர் விஜய் மல்லையா திருப்பிச் செலுத்தவில்லை. இதுகுறித்து, விஜய் மல்லையா  மற்றும் அவரது நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே கடந்த ஆண்டு மார்ச் மாதம் விஜய் மல்லையா, இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றார். லண்டலில் தங்கியுள்ள அவர், அதன் பின்னர் இந்தியா திரும்பவில்லை. எனவே, அவரை நாடு கடத்தி தங்களிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்திடம் மத்திய அரசு கோரிக்கைவைத்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விஜய் மல்லையாவை இங்கிலாந்து நாடு கைதுசெய்தது. உடனே, விஜய் மல்லையா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

வங்கிகளிடமிருந்து விஜய் மல்லையா வாங்கிய கடனில் 6,000 கோடி ரூபாயை அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், அயர்லாந்து உள்பட 7 நாடுகளில் உள்ள போலி நிறுவனங்களில் அவர் முதலீடு செய்திருப்பதை சி.பி.ஐ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தச் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை குறித்து அனைத்து ஆதாரங்களையும் சி.பி.ஐ அதிகாரிகள் சேகரித்துள்ளனர். அந்தத் தகவல்களை இங்கிலாந்து அரசுக்கும் தெரியப்படுத்தி உள்ளனர். எனவே, விஜய் மல்லையா நாடு கடத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் இந்தியத் தரப்பு எடுத்துச்சொல்லியிருக்கிறது. இப்போது கிடைத்துள்ள ஆவணங்கள் விஜய் மல்லையாவை நாடுகடத்த மிகவும் உதவியாக இருக்கும் என்று சி.பி.ஐ அதிகாரிகள் சொல்கிறார்கள். 

Sponsored


இந்நிலையில், விஜய் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் நேற்று, மாஜிஸ்திரேட் இம்மா அர்புத்நாட் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் மல்லையா மோசடிகளை ஆதாரத்துடன் எடுத்துவைத்தார் இந்திய வழக்கறிஞர். மேலும், அவர் தனது வாதத்தின் போது, ''இந்தியாவுக்கு மல்லையாவை அனுப்பிவைத்தால், மும்பை ஆர்தர் போர்டு சிறையில் அடைப்போம்'' என்று உறுதியளித்தார். அப்போது குறுக்கிட்ட விஜய் மல்லையா தரப்பு வழக்கறிஞர், ''இந்தியச் சிறைகள் மனிதர்களை அடைக்கவே தகுதி இல்லாதவை. பராமரிப்பு சரியில்லை. சிறையில்  அடைத்தால் மல்லையா உயிருக்கு ஆபத்து ஏற்படும். இந்தியச் சிறைகளில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன'' என்று கூறினார். 

Sponsored


மேலும், மல்லையா வழக்கறிஞர் வாதத்தின்போது, “ ‘இந்தியச் சிறைகள் படுமோசம். கொல்கத்தா அலிப்பூர் சிறை, சென்னை புழல் சிறை உள்ளிட்ட சிறைகள் முறையான பராமரிப்பு இல்லாமல் இருக்கின்றன. சுத்தம் - சுகாதாரம் இல்லாமல் இருக்கும் அந்தச் சிறைச்சாலைகளில் கைதிகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. கழிவறைகளைப் பயன்படுத்தவே முடியாத நிலை உள்ளது. கரப்பான் பூச்சிகள் வசிக்கும் இடமாக இருக்கிறது. அங்கு மனிதர்கள் இருக்கவே முடியாது' என்று இந்தியச் சிறைகள் குறித்து ஸ்காட்லாந்து சிறை அதிகாரி ஆலம் மிட்சல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதை இந்த மாஜிஸ்திரேட் கோர்ட் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே, விஜய் மல்லையாவை நாடு கடத்தக் கூடாது; இது அரசியல் காழ்ப்புஉணர்ச்சியால் தொடரப்பட்ட வழக்கு. இது பழிவாங்கும் உள்நோக்கம் கொண்டது'' என்று வாதாடினார். இந்தியத் தரப்பு வழக்கறிஞர், ''இந்தியச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுத்துவருகிறோம். எங்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. விஜய் மல்லையாவைக் கவனமுடன் பார்த்துக்கொள்வோம்'' என்று பதில் சொன்னார். 

இருதரப்பு விவாதத்தையும் கேட்ட மாஜிஸ்திரேட் இம்மா அர்புத்நாட்,  இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், விஜய் மல்லையாவின் 10,000 கோடி ரூபாய் சொத்துகளை உடனடியாக முடக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். விஜய் மல்லையாவின் செலவுக்கு மட்டும் ஒவ்வொரு வாரமும் 4 லட்சத்து 30 ஆயிரம் வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.Trending Articles

Sponsored