‘எங்கிட்ட மோதாதே..!’ ‘ட்விட்டர் கிங்’ ட்ரம்ப் Vs வடகொரியா கிம்Sponsored2017 -ம் ஆண்டின் ‘ட்விட்டர் கிங்’ விருது கொடுக்கவேண்டுமெனில், அதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான் மிகப் பொருத்தமானவர்! அமெரிக்க அதிபரான முதல் தன்னிடம் சிக்கியவர்களோடு மோதிக்கொண்டிருக்கிறார். அவரது ட்விட்டர் பரபரப்புகளைச் சற்றே புரட்டிப் பார்ப்போமே..!

ட்ரம்பின் ட்விட்டர் சண்டைகளில் மிகவும் காமெடியான சண்டை, கடந்த ஆண்டு அமேசான் நிறுவனத்துடனான சண்டைதான். அமேசான் நிறுவனத்தின் ஆன்லைன் விற்பனையால், ஒழுங்காக வரி செலுத்தும் அமெரிக்கச் சில்லறை விற்பனையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும், வேலைவாய்ப்பை ஒழித்துக்கட்டுவதாகவும் அமேசான் மீது கடுமையாகக் குற்றம்சாட்டினார் ட்ரம்ப். அவரது ட்வீட் வந்த சில மணி நேரத்தில் அமேசானின் விற்பனை பெரும் சரிவைக் கண்டது. ட்ரம்புக்குக் கொஞ்சமும் சளைக்காத அமேசான் நிறுவனம், ட்ரம்பின் ட்வீட்களில் பிரச்னைக்குரிய 10 ட்வீட்களை டாய்லெட் பேப்பரில் பிரின்ட் செய்து, நூதனமுறையில் பதிலடி கொடுத்தது. இதன்மூலம் ட்ரம்பின் ட்வீட்டுகள் இதற்குத்தான் லாயக்கு எனச் சொல்லாமல் சொன்னது. டாய்லெட் பேப்பர்கள் வெளியான சில மணி நேரத்தில் பரபரப்பாக விற்பனையானதால், கூடுதலாக தயாரித்துத்தள்ளினார்கள்.

Sponsored


அமெரிக்காவில் நடைபெற்ற தேசியக் கால்பந்து லீக் ஆட்டத்தின்போது ஒலிக்கவிடப்பட்ட தேசியகீதத்துக்கு மரியாதை தரவில்லை எனக் கூறி, கால்பந்தாட்ட வீரர்களுக்கு எதிராகக் கடுமையான ட்வீட்டைப் பதிவுசெய்தார். ‘தேசியகீதத்துக்கு மரியாதை தராதவர்களைச் சுட்டுத்தள்ள உத்தரவிடுவேன்' என ஆக்ரோஷமாகக் குறிப்பிட்டார்.

Sponsored


கடந்த ஆகஸ்ட் மாதம், ‘தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் உதவி செய்வதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என ட்ரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.

சமீபத்தில், ‘கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு 2.1 லட்சம் கோடி ரூபாய் வரை உதவி செய்துள்ளது. இதற்கு கைம்மாறாக பாகிஸ்தான் பொய், வஞ்சகத்தைத்தான் திருப்பித்தந்துள்ளது. பாகிஸ்தான், எப்போதுமே தீவிரவாதிகளுக்குச் சொர்க்கபூமியாகத் திகழ்கிறது. பாகிஸ்தானுக்கு எங்கள் நாட்டில் உள்ள தலைவர்களைப் பார்த்தால் முட்டாள்கள்போலத் தெரிகிறதா?’ எனக் கடுமையாக ஒரு ட்வீட்டைப் பதிவுசெய்து, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சிவைத்தியம் செய்தார்.

உடனே பாகிஸ்தான், தன் நாட்டின் அமெரிக்கத் தூதரிடம் கண்டனத்தைப் பதிவுசெய்தது. ‘ட்ரம்பின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது’ என பாகிஸ்தான் வெளியுறவுத் துறைச் செயலாளர் தெரிவித்ததோடு, இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறும் கோரிக்கைவிடுத்துள்ளார். இதாவது திடீர் மோதல்தான். ஆனால் வடகொரியாவுடனான மோதல் தொடர்கதையாகி, தற்போது உச்சத்தைத் தொட்டிருப்பதுதான் வேதனை.

வடகொரிய அரசு, ‘என் வழி... தனி வழி’ என்பதுபோல், யார் குறித்தும் கவலைப்படாமல் தொடர்ச்சியாக அணு ஆயுதச் சோதனைகளை நடத்திவந்தது. ட்ரம்ப் அமெரிக்க அதிபரானதும் வடகொரியா மீது தனி கவனம் செலுத்தினார். தென் கொரியாவின் ஆதரவோடு எல்லையில் தனது போர்க்கப்பல்களைக் கொண்டுவந்து நிறுத்தியது அமெரிக்கா. உடனே ‘அமெரிக்க அரசின் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம்’ என்று வட கொரியா எச்சரித்தது.

இந்தச் சூழலில் கடந்த 2016, ஜூலை மாதத்தில் ட்ரம்ப் தனது ட்வீட்டில், வடகொரியாவுக்கு எதிராக அணு ஆயுதப்போர் நடத்தப்போவதாக பதிலடி கொடுத்தார். இவரது திடீர் அறிவிப்புக்கு, அமெரிக்க ராணுவத்தின் தரப்பிலேயே எதிர்ப்புக் கிளம்பியது. தங்களிடம் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் அறிவித்ததாக ராணுவத் தளபதி கோபித்துக்கொண்டார். ஆனால், அவரது ட்வீட்டை வடகொரியா ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

ட்ரம்ப் விடுவதாகயில்லை. ஆகஸ்ட் மாதத்தில் வடகொரியாவுக்கு மீண்டும் எச்சரிக்கைவிடுத்தார். யாருமே எதிர்பாராதவிதமாக ஜப்பானுக்கு அருகில் அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவின் மீது வடகொரியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அந்த ஏவுகணையானது ஜப்பானின் வான் பகுதி வழியே திடீரென கடந்து சென்றதைப் பார்த்த ஜப்பானியர்கள், பீதியிலும் போர்ப்பதற்றத்திலும் உறைந்தனர். உலக நாடுகள் அனைத்தும் அதைக் கண்டித்தன. ஐ.நா சபையும் தன் பங்குக்கு வடகொரியாவைக் கண்டித்தது.

இப்படியே தொடர்ந்து முட்டிமோதிக்கொண்டிருந்த நிலையில், ‘அமெரிக்காவை அழிக்கக்கூடிய அணு ஏவுகணையின் பட்டன், எந்த நேரமும் அழுத்துவதற்காக எனது மேஜையில்தான் காத்திருக்கிறது’ என வடகொரியாவின் கிம் பரபரப்பாக அறிக்கைவிட்டார். அதைப் பொருட்படுத்தாமல், ‘என்னிடமும் ஒரு பட்டன் உள்ளது. அது அவருடைய ஏவுகணையைவிட அளவில் பெரிதாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருக்கும் என்பதை அவரிடம் சொல்லுங்கள்’ என ட்ரம்ப் ட்வீட்டியிருக்கிறார். ஆக, இந்த இரண்டு கைப்புள்ளைகளின் சின்னப்புள்ளத்தனமான விளையாட்டை மொத்த உலகமும் வேடிக்கைபார்க்கும் சூழல் நிலவுகிறது. இவர்களின் ட்விட்டர் போர் விளையாட்டு, வினையாகக் கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!

நம்ம ஊர்லதான் அரசியல் மோசம்னா, உலக அரசியல் அதைவிட மோசமா இருக்கே பாஸ்!Trending Articles

Sponsored