“200 வருஷம் ஆரோக்கியமா இருப்பார் ட்ரம்ப்!” - அமெரிக்க அதிபரின் அடேங்கப்பா ஹெல்த் ரிப்போர்ட்Sponsoredசமீபத்தில் குஜராத் தேர்தலின் போது, மோடி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காளானை சாப்பிடுகிறார். உடலை பளபளப்பாக வைத்திருக்கத்தான் இதனை சாப்பிடுகிறார் என்று விமர்சிக்கப்பட்டார். அதற்கு முன் ஆசியாவுக்குப் பயணம் செய்த ட்ரம்பின் மெனுவும் சர்வதேச வைரலானது. இப்படி உலகத் தலைவர்களின் ஹெல்த் எப்போதுமே அதிகம் கவனிக்கப்படும் விஷயமாக இருந்து வருகிறது. இந்நிலையில் வெள்ளை மாளிகையின் அதிபர் ட்ரம்ப்புக்கான மருத்துவர் ஜாக்ஸன் ட்ரம்பின் உடல்நிலை குறித்த மொத்த அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். 

அவரது அறிக்கையின் படி “அதிபரின் உடல் உயரம் 6 அடி 3 இன்ச், 239 பவுண்ட்(108 கிலோகிராம்) இருக்கிறார். அவரது உடல் பிஎம்ஐ 29.9-ஆக இருக்கிறது. இது அமெரிக்காவின் சராசரி அளவை விட அதிகம் அதனால் உடல் பருமனான பிரிவில் அவரை வகைப்படுத்துகிறோம்” என்றார். 

Sponsored


‘பர்கர், கோக், சிக்கன் போன்றவற்றை அதிகமாக உட்கொள்கிறாரே அதற்கு நீங்கள் அறிவுரை கூறவில்லையா?’, என்ற கேள்விக்கு ஜாக்ஸன். ‘அவரது உடல் மிகவும் ஆரோக்கியமாக உள்ளது. அவர் கடந்த 20 வருடங்களாக ஆரோக்கியமாகத்தான் உள்ளார். ஏன் இன்னும் 200 வருடம் கூட ஆரோக்கியமாக இருப்பார் அதனால் இதுகுறித்து கவலை கொள்ள வேண்டாம்’ என்று பதிலளித்தார்.

Sponsored


உடல் பருமன் குறித்த கேள்விக்கு அதிபர் ட்ரம்ப்க்கு டயட் மற்றும் உடற்பயிற்சி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 6-8 கிலோ வரை அவரது உடல் எடையைக் குறைக்கும் திட்டமும் உள்ளது. இதில் ட்ரம்ப் பெரிதும் டயட்டை தான் விரும்புகிறார். உடற்பயிற்சியை விரும்பவில்லை, மற்றபடி இரத்த சர்க்கரை அளவு, சிறுநீர் பரிசோதனை எல்லாம் சீராக உள்ளது என்றார்.

உடல் குறித்த டெஸ்ட்டில் பாஸ் ஆனது மட்டுமில்லாமல் மிகவும் உடல் ஆரோக்கியமுள்ள அதிபராக இருக்கிறார் என்கிற நற்பெயரையும் ட்ரம்ப் பெற்றுள்ளார். அவரது ‘மன ஆரோக்கியம் குறித்த சோதனை நிகழ்த்தப்பட்டதா?’, என்று கேட்டதற்கு அவரது மன ஆரோக்கியம் குறித்த பரிசோதனை இந்த முறை பரிந்துரைக்கப்படவில்லை. இருந்தாலும் அவர் மன ஆரோக்கியத்தை அறியும் காக்னிடிவ் தேர்வில் 30க்கு 30 மதிப்பெண் பெற்றுள்ளார் அதனால் அவரது மனநிலை மிகவும் தெளிவாக இருப்பதாகக் கூறினார். 

அமெரிக்க அதிபர்களிலேயே இவர்தான் மிகவும் ஆரோக்கிய அதிபரா? என்ற கேள்விக்கு அதிபர் ட்ரம்ப்பை பரிசோதிப்பது மட்டும்தான் என் வேலை. மற்ற அதிபர்களோடு ஒப்பிடுவது அல்ல என்று ஜாக்ஸன் கூறியிருக்கிறார்.

இதுமட்டுமன்றி இந்த அறிக்கையில் ட்ரம்ப் ஒருநாளைக்கு 4 முதல் 5 மணி நேரம்தான் உறங்குகிறார். 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 7 மணிநேரம் உறங்க வேண்டும் ட்ரம்ப் அந்த நேரத்தை அதிகப்படுத்தினால் இன்னும் சிறப்பாகச் செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. 

வட கொரிய விவகாரம், பெண்கள் பிரச்னை எனப் பல விஷயங்களில் மனநிலை தவறியவராகவே ட்ரம்ப் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் தொடர்ச்சியாக, அமெரிக்காவில் வேற்று நாட்டவர் நுழையத் தடை, மெக்ஸிகோ சுவர் விவகாரம் என்று  அடுத்தடுத்து ட்ரம்ப் பிரச்னைகளைக் கிளப்பி வருவதால் அவர் ஆரோக்கியமான மனநிலையில் உள்ளார் என்பதை ஏற்க முடியாது என்கின்றனர் நெட்டிசன்கள். ட்ரம்ப் தனது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது போல அவரது நெகட்டிவ் செயல்பாடுகளில் கவனம் செலுத்தி குறைப்பாரா...? இல்லை நியூக்ளியர் பட்டனை அழுத்துவேன் என்று அடம்பிடிப்பாரா? என்பது ட்ரம்ப் கையில் மட்டுமே உள்ளது.Trending Articles

Sponsored