“இனப்போரில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகள்!” - மீண்டும் ஓர் ஆவணம்Sponsoredலிங்கப் போரில் வெற்றிபெற்ற பேரரசன் அசோகன், தன் போர் நியாயமானது இல்லை என்று உணர ஒரு பௌத்தத் துறவி தேவையாக இருந்தார். ஆம்! 'போர் அறமற்றது' என்று அசோகனே உணர்ந்தான். ஒவ்வொரு போரும் ரத்த ஆற்றில் முடிவுற்ற பின்னரே, அது நியாயமற்றது என்று உணரப்படுகிறது. பௌத்த சமயம் பெரும்பான்மையாகப் பின்பற்றப்படுகிற இலங்கையில், 2009-ல் நிகழ்ந்த இன எதிர்ப்புப் போரும் கிட்டத்தட்ட அப்படியே. போரின் ரணங்களுக்குக் களிம்பாக அவ்வப்போது அது தொடர்பான ஆவணங்கள் இலக்கியமாகவும், உண்மைக் கதைகளாகவும், எதிர்ப்புக் குரலாகவும் தொடர்ந்து வெளிப்பட்டு வந்தன. ஆனால், அத்தனை குரல்களுக்கும் பெரிதாக எந்தவொரு எதிர்வினையும் இன்றுவரை இல்லையென்றே சொல்லலாம். அப்படியான குரல் மக்களைக் கொன்றுகுவித்த சிங்களத் தரப்பிலிருந்தே வெளிப்படும்போது, அது சற்று வலுவானதாகவே அமைந்துவிடுகிறது. ஈழம் தொடர்பாக இதுவரையிலும் வந்த படைப்புகள், பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து மட்டுமே வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் இலங்கை மக்கள் தரப்பிடமிருந்தே ஒரு சாட்சியம் வெளியாகியுள்ளது. இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து, ஆஸ்திரேலியாவில் வசித்துவரும் மருத்துவர் பிரையன் சேனவிரத்னே எழுதி வெளியிட்டுள்ள 'Sri lanka Sexual Violence of tamils by armed forces' என்ற புத்தகம் அந்த வகையிலானதாகும்.

இத்தனைக்கும் இனப்படுகொலை நிகழ்ந்த 2009-க்கு, நான்கு ஆண்டுகள் முன்னரே பிரையன், இந்தப் புத்தகத்தை எழுதத் தொடங்கிவிட்டார். அப்போது மஹிந்த ராஜபக்சே, அவரது உடன்பிறப்பு கோத்தபய ராஜபக்சே மற்றும் அவர்களின் எண்ணற்ற உறவினர்கள் இலங்கையை ஆட்சிசெய்து கொண்டிருந்தனர். 'எந்நேரமும் அங்கே பெரும் போர் ஒன்று உருவாகலாம்' என்று அப்போதைய சூழல் குறித்து எச்சரிக்கும் வகையில் இந்தப் புத்தகம் இருந்தது. ஆனால், புத்தகம் வெளியிடப்பட இருந்த 2015-ம் ஆண்டு அங்கே ராஜபக்சேவுக்கு எதிராக சிறிசேன போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதனால் அங்கே சூழல் மாறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இனப்படுகொலையின் தாக்கமும், நீட்சியும் அப்படியே எஞ்சியிருந்தது. கடந்த பத்து வருட காலத்தில் அங்கே ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், பல்வேறு மனித உரிமை ஆணையத் தரப்புகளை உள்ளே நுழையவிடாமல் இலங்கை அரசு தடுத்தது மற்றும் இலங்கைத் தரப்பிலிருந்து வந்த தகவல்களை ஊர்ஜிதப்படுத்த முடியாதது போன்ற சிக்கல்களால் இந்தப் புத்தகத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. தாமதமாக வந்தாலும் அப்டேட்டாக வந்திருப்பது, அதன் தனித்துவம் எனலாம். 

Sponsored


“மனித உரிமைக் கண்காணிப்பகம் உள்ளிட்டவை ஏற்கெனவே வெளியிட்ட ஆய்வறிக்கைகள், போர் என்ற பெயரில் அங்கே நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்துப் பேசியிருக்கும் சூழலில் மீண்டும் ஓர் ஆய்வறிக்கை எதற்கு? என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆய்வறிக்கைகள் வெறும் தரவுகளை மட்டுமே தருகின்றன; ஆனால், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் பிரச்னைகளின் முழு சாராம்சம் குறித்து அவை பேசவில்லை. அதனாலேயே இந்தப் புத்தகமும் முக்கியமாகிறது" என்கிறார் அதன் ஆசிரியர் பிரையன். 

Sponsored


இலங்கையின் வரலாறு, அங்கே நிலவும் பண்பாடு, கலாசாரம், அங்கு வாழும் தமிழர்களின் வாழ்வியல் மற்றும் பண்பாடு என அனைத்தும் ஆராய்ந்து அலசிவிட்டு, அதன் பிறகாக அங்கே போருக்கு முன்னும், பின்னுமான சமயங்களில் நிலவிய பாலியல் வன்கொடுமைகள் குறித்து தன் புத்தகத்தில் எடுத்துரைத்திருக்கிறார் பிரையன். தன்னை ஒரு சோசலிச ஜனநாயகக் குடியரசாக நிறுவிக்கொள்ளும் இலங்கை அரசு, 2009-ம் ஆண்டு நடைபெற்ற போருக்குப் பின்னர் மேற்கொண்டிருக்க வேண்டிய ஆய்வினை தனியொரு மனிதராக இவர்மேற்கொண்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

புத்தகம் இப்படியாகத் தொடங்குகிறது, "இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வசித்த தமிழர்கள் என்ற ஒரே குற்றத்திற்காக மட்டுமே பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டும், வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டும் சித்ரவதை செய்யப்பட்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்கள் அனைவருக்கும் இந்தப் புத்தகம் சமர்ப்பணம். அவர்கள் தற்போது அதே வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் போரின் எச்சமாகவும், ஆஸ்திரேலியத் தடுப்பு முகாம்களில் அகதிகளாகவும், திடீரெனக் காணாமல் போகக் கூடிய அத்தனை சாத்தியக்கூறுகளுடனும் உள்ள இலங்கையின் மையத்திலும், இறந்துபோய் இந்தியப் பெருங்கடலின் அடிஆழத்திலும் தற்போது இருக்கிறார்கள்."

2015-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் வெளியிடப்பட்டு, தற்போது இங்கே 'போதி வனம்' பதிப்பில் மீள் வெளியீடு செய்யப்பட்டிருக்கிறது இப்புத்தகம். இலங்கை இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்த முதன்மையான ஆவணங்களில் ஒன்றாக இந்தப் புத்தகம் நிச்சயம் இருக்கும்.Trending Articles

Sponsored