ஆண், பெண் வேறுபாடின்றி வளர்ப்பதே பெண் குழந்தை தின உறுதி மொழியாகட்டும்! #NationalDayOfGirlChildren



ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 24-ம் தேதியை, தேசிய பெண் குழந்தைகள் நாளாக அனுசரிக்கிறது இந்திய அரசு. பெண் குழந்தைகள் சமூதாயத்தில் சந்திக்கும் பிரச்னைகளைப் போக்கும் விழிப்புஉணர்வு நாளாக இந்தத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

Sponsored


கல்வியில் சரியான அங்கீகாரமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, மருத்துவம் மற்றும் சுகாதாரமின்மை, கல்வி பயிலும் இடங்களில் பாதுகாப்பின்மை, குழந்தைத் திருமணம் எனப் பல பிரச்னைகளைப் பெண் குழந்தைகள் அன்றாட வாழ்வில் சந்தித்து வருகின்றனர். மனிதர்களின் வாழ்நாளில் குழந்தைப் பருவமே மிகவும் மகிழ்ச்சியானது என்பார்கள். ஆனால், நம் தேசத்தில் பெண் குழந்தைகள் இத்தனை இடையூறுகளையும் பிரச்னைகளையும் தாண்டியே பெரியவர்கள் ஆகிறார்கள்.

Sponsored


“ஒரு குழந்தை, ஓர் ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா.. இந்த உலகத்தையே மாற்ற முடியும்” என்று கூறியவர், மலாலா. பெண் குழந்தைகளுக்கான கல்வி மறுக்கப்பட்டு அடிமைப்படுத்தப்படுவதை எதிர்த்து குரல் எழுப்பியதற்காக, பதின்வயதிலேயே தன் உடலில் துப்பாக்கித் தோட்டாக்களைச் சுமந்தவர் மலாலா. நம் நாட்டிலேயே சுமார் 53.87% பெண் குழந்தைகள், கல்வியின்றி உள்ளனர் என்கிறது புள்ளிவிவரங்கள். அவர்களுக்காக நாம்தானே குரல் எழுப்ப வேண்டும்.

Sponsored


பெண் குழந்தைகளுக்கான மற்றுமொரு சமூக அநீதி, குழந்தைத் திருமணம். “அட, சமுதாயம் இவ்வளவு வளர்ந்த காலகட்டத்திலுமா குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன?'' எனக் கேட்டால், உங்களின் அறியாமையை நினைத்து வேதனைப்படவே முடியும். ஆம், நம் தேசத்தின் அனைத்து மாநிலங்களிலும் குழந்தைத் திருமணங்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. நம் தமிழகத்திலும் எத்தனையோ கிராமங்களில் குழந்தைத் திருமணம் சர்வ சாதாரணம். நகர்ப்புறங்களில் சரியான திருமண வயதை அடையாத பெண்களுக்குத் திருமணம் செய்துவைக்கின்றனர்.

இத்தகைய பிரச்னைகளிலிருந்து பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு அவர்களுக்கான சட்டரீதியிலான உரிமைகளை உணர்த்த வேண்டும். பெண் குழந்தைகளுக்கு அநீதி புரிவோருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். கிராமம், நகரம் என அனைத்துப் பகுதி பெண் குழந்தைகளும் பள்ளிக்குச் செல்வதை உறுதிபடுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. சரியான முறையில் கல்வி வழங்கப்பட்டாலே அவர்களுக்கான உரிமைகள் பறிக்கப்படுவதை புரிந்து, அவற்றை கேட்டுப் பெறுவார்கள்.

அன்னையர் தினம், பெண்கள் தினம் போன்றவற்றுக்கு வாழ்த்துத் தெரிவித்து கடந்துவிடுவதுபோல இந்த தினத்தையும் சாதாரணமாக நாம் கடந்துவிட முடியாது. 'நம் வீட்டு பெண் குழந்தைகளை அவர்களுக்கான உரிமகளை அளிப்பதை மட்டுமே பார்க்காமல், நம்மைச் சுற்றிலும் பார்ப்போம். கண்முன்னே எந்த ஒரு பெண் குழந்தைக்கு அநீதி நேர்ந்தாலும் எதிர்த்துக் குரல் எழுப்புவோம்' 'குழந்தை வளர்ப்பில் ஆண் பெண் பேதம் பார்க்காமல் சம உரிமை அளிப்போம்' என்று இந்த நாளில் உறுதி ஏற்போம். அந்த உறுதியைக் காப்போம். 

சிறு வயதிலேயே ஆண், பெண் பேதமின்றி குழந்தைகள் வளர்க்கப்படுவது மிக இயல்பான நடைமுறையாக நம் குடும்பங்களில் மாற வேண்டும். குறிப்பாக, வீட்டைப் பெருக்குவது, சமையல் செய்ய உதவுவது என வீட்டு வேலைகளைச் செய்வதற்கு ஆண் குழந்தைகளையும் பழக்குவது மிகவும் அவசியம். இதை வெறும் வேலைப் பகிர்வு என்பதாக மட்டும் பார்க்க வேண்டாம். பெண்களின் மனநிலையும் அவர்களின் உலகையும் அவர்கள் புரிந்துகொள்வதற்கு மிகவும் உதவும். இது அவர்கள் பெரியவர்களானது பெண்ணைச் சக மனிதராகப் பார்க்கும் கோணத்தைத் தரும்.  



Trending Articles

Sponsored