252 முறை பூமியை வலம் வந்த இந்தியப் பெண் கல்பனா சாவ்லா! #KalpanaChawlaMemoriesSponsoredசிலரின் பெயர்கள் நமக்கு உத்வேகத்தை அளிப்பதாக இருக்கும். அவற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெயர் கல்பனா சாவ்லா. திறமையும் இடைவிடா முயற்சியும் இருந்தால் எந்தவொரு விஷயத்தையும் சாதிக்க முடியும் என்பதை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியவர் கல்பனா சாவ்லா. குறிப்பாக, தன் மறைவுக்குப் பின்னும் உலகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளுக்கு, தன்னம்பிக்கை நட்சத்திரமாக இன்றும் விளங்கி வருகிறார். காலம் காலமாக கல்வி மறுக்கப்பட்ட பெண்களுக்கு மத்தியில் விண்ணைத் தொட்டு, பெண்களின் பயணத்துக்கு இருந்த தடைகளை உடைத்தெறிந்தவர். விண்ணை அளந்த கல்பனா சாவ்லா பற்றி சில விஷயங்களைப் பார்ப்போம். 

1962-ம் ஆண்டு இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் கர்னல் எனும் ஊரில் பிறந்தார். நமது நாட்டின் பெரும்பான்மையான குடும்பங்களைப் போலவே கல்பனாவின் குடும்பமும் பொருளாதார ரீதியாக நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்ததுதான். அந்த ஊரின் அரசுப் பள்ளியில் படித்தவர்தான் கல்பனா. படிப்பதில் மட்டுமல்ல, விளையாட்டிலும் அறிவியல் சோதனைகளிலும் தனித்த ஆர்வம் கொண்டவராகப் பள்ளியில் படிக்கும்போதே திகழ்ந்தார். அவர் கல்லூரியில் படிப்பதற்காகத் தேர்வுசெய்த துறையைப் பார்த்து அவரின் குடும்பமே ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தது. அவர் விரும்பியது வான்வெளியில் பொறியியல் (Engineering degree in Aeronautical Engineering) படிப்பு. பெண்கள் இந்தத் துறையில் தடம் பதிப்பது சாதாரண விஷயம் அல்லவே. ஆனால், கல்பனா தன் விருப்பத்தில் உறுதியாக இருந்தார். அந்தக் கல்லூரியில் இந்தத் துறையில் சேர்ந்த ஒரே பெண் கல்பனாதான். அதில் முதுநிலையும் முடித்து, முனைவர் பட்டத்தைப் பெற்றார். இந்தத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையும் அவருக்கே கிடைத்தது. அதற்காக அமெரிக்கா செல்வதற்கு, தந்தையுடன் பெரும் போராட்டத்தையே நடத்த வேண்டியிருந்தது. 

Sponsored


கல்பனாவின் பெரும் கனவு விண்வெளிப் பயணம்தான். அப்போது இந்தியாவிலிருந்து விண்வெளிப் பயணம் சென்றது ராகேஷ் ஷர்மா மட்டுமே. தானும் அவ்வாறு சென்றுவிட வேண்டும் என முனைப்போடு இயங்கினார்.  1988-ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வுக்கூடத்தின் ஆமஸ் மையத்தின் பணியில் தன்னை இணைத்துக்கொண்டார். அதே ஆண்டில்தான் பியரி ஹாரிஸனுக்கும் கல்பனாவுக்கும் திருமணம் நடந்தது. ஹாரிஸன் விமான தள ஓட்டப் பயிற்சியாளர். 1993-ம் ஆண்டு இவருக்கு மிக முக்கிய ஆண்டு. இந்த ஆண்டில்தான் விண்வெளி வீராங்கனைத் தேர்வில் நுழைந்தார். அவரின் கனவை நனவாக்கும் படிகளில் முக்கியமான ஒரு நிலை. 

Sponsored


கல்பனா சாவ்லா நினைவுகள்! #KalpanaChawlaMemories #VikatanPhotoCards

ஓய்வு நேரம் என்பதே ஒன்றில்லாமல் தன் முழு நேரத்தையும் ஆய்வுகளுக்கே அர்ப்பணித்தார். அப்போதையை விண்வெளி வீரர்களுக்கான தேர்வில் 2976 பேர் விண்ணப்பித்திருந்தனர். கடும்போட்டி நிறைந்த அந்தத் தேர்வில் வெற்றிப் பெற்றது ஒருவர் மட்டும்தான். அது கல்பனா சாவ்லாதான். இது அவருக்கும் மட்டும் அவர் பிறந்த நம் நாட்டுக்கும் பெருமை எனப் பத்திரிகைகள் புகழ்ந்தன. 

கல்பனா, சின்ன வயது முதலே கனவுகண்ட அந்த விண்வெளிப் பயணம் செய்யும் நாளும் வந்தது. 1997-ம் ஆண்டு நவம்பர் 19-ம் நாள். 10 மில்லியனுக்கு அதிகமான கிலோமீட்டர், 15 நாள்கள், 12 மணிநேரம் என இந்தப் பூமியை 252 முறைச் சுற்றினார்.  இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் பெரும் பெருமையைச் சேர்ந்த அற்புதமான செயல் அது. விண்வெளியில் பறந்த இந்தியாவின் முதல் பெண் எனும் பெருமையைச் சூடிக்கொண்டார். 'இந்தியப் பெண்கள் தங்களுடைய கனவுகளை அவர்கள் வாழும் சூழலைக் கடந்தும் விரிக்க வேண்டும்' என கல்பனா கூறுவார். அந்தக் கூற்றுக்குத் தானே முன்மாதிரியான சாதனையைச் செய்தார். 

கல்பனா சாவ்லாவை மீண்டும் விண்வெளிக்கு அனுப்பி வைக்க தேர்வானார். 2003-ம் ஆண்டு ஜனவரி 16-ம் நாளன்று தொடங்கிய பயணம் முற்றுப் பெறாமல், அவரைச் சுமந்து சென்ற கொலம்பியா விண்வெளி விமானம் வெடித்துச் சிதறியது. அவருடன் பயணித்த ஐந்து விண்வெளி வீரர்களோடு கல்பனாவும் இறந்தார்.

கல்பனா சாவ்லாவின் வெற்றியை நமது வெற்றியாகக் கொண்டாடிய மக்கள், அவரின் பிரிவை தன் வீட்டில் ஒருவர் இறந்ததாகக் கருதி துயரம் கொண்டனர். அவர் மறைந்துவிட்டாலும் உலகத்தில் வாழும் பெண்களுக்கு அவர் அளித்திருக்கும் தன்னம்பிக்கை சுடர் ஒருபோதும் அணையாது. அந்த ஒளியில் என்றென்றும் அவர் வாழ்ந்துகொண்டேயிருப்பார்.Trending Articles

Sponsored