பாலே டான்ஸர், ராணுவ அதிகாரி, தொலைக்காட்சி தொகுப்பாளினி... சீனாவின் ஓப்ரா வின்ஃப்ரே இவர்!Sponsored
PC: Faguowenhua.com

சைனீஸ் டேட்டிங்’ (Chinese Dating) என்கிற அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சி, சீனாவில் மிகவும் பிரபலம். பெற்றோர்கள் தங்கள் மகன்களுடன் அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குச் சில பெண்களை அறிமுகப்படுத்துவார்கள். தனக்கு ஏற்ற பெண்ணை ஒருவர் தேர்ந்தெடுப்பார். அதுபற்றி பெற்றோர் என்ன நினைக்கிறார்கள் என்று கருத்து கேட்கப்படும். 

'இந்தப் பெண் மிகவும் வயதானவள்போல தெரிகிறார்', 'அந்தப் பெண் எங்கள் குடும்பத்துக்குப் பொருளாதார ரீதியில் உதவவேண்டும்', 'மற்ற இனத்துப் பெண்கள் எங்கள் குடும்பத்துக்கு ஒத்துவராது' - இப்படிப் பல ஆணாதிக்க மற்றும் பிற்போக்கான கருத்துகளை வெளிப்படையாகக் கூறுவார்கள். இதுதான் நிகழ்ச்சியின் கான்செப்ட். இந்த நிகழ்ச்சிக்கு சீனாவில் எதிர்ப்புகளும் ஆதரவுகளுமாக உள்ளன. இந்த நிகழ்ச்சியின் பெண் தொகுப்பாளராக வருபவர், அத்தனையையும் தாங்கி நிறுத்துகிறார். 

Sponsored


'இவ்வளவு பிற்போக்குத்தனமாக நிகழ்ச்சி நடத்துகிறீர்களே' என்ற விமர்சனத்துக்கு, “இன்னும் இந்தச் சீன சமூகத்தில் இவ்வளவு பிற்போக்குத்தனங்கள் இருக்கின்றன. அதைத்தான் நான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறேன். இங்கே ஒருவர் ஒரு பெண்ணை விரும்பலாம். ஆனால், திருமணம் என வரும்போது, அந்த ஆணின் பெற்றோர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். நம் சமூகத்தில் நிலவும் அடக்குமுறைகளையே நிகழ்ச்சியில் காட்டுகிறேன்” என்று அதிரடியாக விளக்கம் கூறுகிறார். அவருக்கு சீனாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள். இது, அவரின் தெளிவான பேச்சுக்கும் மொழிநடைக்கும் மட்டும் சேர்ந்த கூட்டமல்ல; அவரின் வாழ்க்கையும் சாகசம் நிறைந்தது. 

Sponsored


1967-ம் ஆண்டு, சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஷின்யங் என்ற இடத்தில் ஆணாகப் பிறந்தவர், ஜின் ஸிங் (Jin Xing). நான்கு வயதிலேயே தனக்குள் மாற்றம் நிகழ்வதை உணர்கிறார். ஆணின் இயல்பிலிருந்து மாறுபட்ட உணர்வுகள். அதனைச் சரியாக வெளியில் சொல்லத் தெரியவில்லை. பாலே நடனத்தில் அங்கே அவரை மிஞ்ச ஆளில்லை. அந்தக் காலத்தில், சீன ராணுவத்தில் பாலே நடனம் மற்றும் அக்ரோபாடிஸ் (Acrobatics) மிகமுக்கியப் பயிற்சியாகக் கருதப்பட்டது. அதனால் பாலே நடனத்தில் ஆர்வம்கொண்ட ஜின்னை, சீன ராணுவப் பயிற்சியில் ஒன்பது வயதில் சேர்த்துவிட்டார்கள். அங்கே கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. கூடவே குழந்தைகள் மீதான வன்முறையும் நடந்தேறியது. சரியாக நடனம் ஆடாவிட்டால், பலத்த அடி கிடைக்கும். 

ஆனால், ஜின் ஸிங் பாலே நடனத்தில் திறமை பெற்றிருந்ததால், சீனா முழுவதும் பிரபலமானார். ரஷியன் பாலே, சீன ஒபேரா, நடனம் மற்றும் அக்ரோபடிக்ஸ் நேர்த்தியாகச் செய்தார். அதேசமயம், ஒரு ராணுவ வீரராக, துப்பாக்கிகள் கையாளவும் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தவும் கற்றிருந்தார். இப்படி 10 ஆண்டுகள் ராணுவப் பயிற்சியில் ஜின்னின் வாழ்க்கை கடந்தது. அவரின் திறமைக்கு ராணுவத்தில் பதவி உயர்வும் கிடைத்தது. ஆனால், ஜின்னின் கவனம் முழுவதும் கலை சார்ந்த தேடலில் இருந்தது.

இந்த நடனத்தை மேலும் முறைப்படி பயில்வதற்காக, நியூயார்க்கில் உதவித்தொகை கிடைக்கும் என்று தெரியவர, அதற்கான முயற்சியில் இறங்கினார். அதற்கு முட்டுக்கட்டையாக நின்றார், அவருக்குப் பாலியல் தொல்லை அளித்த ராணுவ மேலதிகாரி. ஜின்னை ஓரினச் சேர்க்கையாளர் என்று நினைத்து, அவருக்குத் தொல்லைகள் கொடுத்தார். ராணுவப் பயிற்சியிலிருந்தும் விடுவிக்க மறுத்தார். 'தான் ஓரினச் சேர்க்கையாளரல்ல; மீறி தவறாக நடந்தால் மேலிடத்தில் புகார் அளிப்பேன்' என்று ஜின் மிரட்டியதும், அந்த ராணுவ பயிற்சி முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டார். 

சீனாவில் ஜின் ஸிங் ஒரு பிரபலம்; சிறந்த நடனக் கலைஞர். ஆனால், நியூயார்க் நகரம்

அவரை சராசரி மனிதராகவே கருதியது. இது அவருக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது. காலையில் நடனப் பள்ளி, இரவில் பணத்துக்காக வேலை. ஜின்னுக்கு மிகவும் சவாலான நாள்கள் அவை. இந்தத் தனிமையும் தன்னம்பிக்கையும்தான் ஜின் ஸிங்கின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாகியது. அப்போதுதான், தன்னைப் பற்றியும், தன் அடையாளத்தைப் பற்றியும் அதிகமாகச் சிந்தித்தார் ஜின். 

இதுபற்றி ஒரு பேட்டியில் கூறுகையில், “நியூயார்க் நகர வாழ்க்கையில்தான், நான் யார் என்பதை தேடத் தொடங்கினேன். நான் எப்போதுமே ஒரு பெண்ணாக உணர்த்திருக்கிறேன். ஆனால், அதனை வெளிக்காட்டவில்லை. ஒருவேளை நான் ஓரினச் சேர்க்கையாளரோ என்றும் நினைத்ததுண்டு. அப்படிப்பட்ட நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள். ஆனால், நான் அப்படியல்ல என்பதை உணர்ந்தேன். நான் ஒரு பெண். நான் முழுவதும் பெண்ணாகவே மாற விரும்பினேன். உடல் ரீதியாகப் பெண்ணாக மாறவேண்டும் என்று முடிவெடுக்கவே ஒன்பது வருடங்கள் யோசித்தேன். ஆனால், நான் எடுத்தது மிகச் சரியான முடிவு'' என்கிறார். 

PC: hollywoodreporter.com

அமெரிக்காவில் நடந்த பல பிரபல நடன நிகழ்ச்சியில் பங்கேற்று, விருதுகளைக் குவித்தார். ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று, சிறிது காலம் பணியாற்றினார். சீனாவில் ஒரு நடனப் பள்ளி அமைத்தார். 1995-ம் ஆண்டு, அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறத் தயாரானார். 'அது உங்களுக்கு அவ்வளவு சுலபமல்ல. சிகிச்சைக்குப் பிறகு நடக்க முடியாமலும் போகலாம்' என்று மருத்துவர்கள் சந்தேகமாகச் சொன்னார்கள். 

16 மணி நேர அறுவை சிகிச்சை. “நான் எப்போதும் பெண்ணாக மாறவே விரும்பினேன். அதற்காகக் கால்களை இழக்கவேண்டும் என்று நினைத்ததில்லை. தற்கொலை செய்துகொள்ளலாமா என்றுகூட நினைத்தேன். ஆனால், எனக்கு எப்போதும் நல்ல உடல்பலம் இருந்தது. அதுதான் என்னை இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீட்டது” என்று தன் வலிமிகு தருணங்களை விவரிக்கிறார் ஜின் லிங். 

தொடர்ந்து செய்த உடற்பயிற்சிகளால் ஒரு வருடம் கழித்து, மீண்டும் மேடை ஏறினார். அதுவரை, ஒரு ஆண் நடனக் கலைஞனாக பிரபலமாகியிருந்தவரை, பெண் கலைஞராக மக்கள் கொண்டாட ஆரம்பித்தனர். மனம் நெகிழ்ந்தார் ஜின். தன் வாழ்வுக்கு அர்த்தம் சேர்க்க, மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். 2005-ம் ஆண்டு, ஜெர்மன் தொழிலதிபரான ஹின்ஸ்-கிர்ட் ஒடிமன் (Heinz-Gerd Oidtmann) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 

சீனத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சிக்கு, நடுவராகப் போட்டியாளர்களைக் கடுமையாக விமர்சனம் செய்வார் ஜின். ‘விஷம்கொண்ட நாக்கு’ என்று சீன மக்கள் அவரை விமர்சித்தார்கள். “ஒருவர் ஒரு கலையை முறையாக வெளிப்படுத்தாவிட்டால், அப்படி விமர்சனம் செய்வதில் தவறில்லை” என்று கூறுவார் ஜின். தன் கணவருடன் ஒரு நடனப் போட்டியில் கலந்துகொண்ட ஜின், அவர் சரியாக ஆடவில்லை என்று மேடையில் விமர்சித்தது சீனா முழுவதும் வைரலானது. 

கடந்த இரண்டு வருடங்களாக, ’The JinXing Show' என்ற இவரின் நிகழ்ச்சிக்கு சீனாவில் பல கோடி ரசிகர்கள். இவரைச் சீனாவின் ஓப்ரா வின்ஃப்ரே என்றே அழைக்கின்றனர். அதற்கு அவர், “எப்போதாவது நான் ஓப்ராவைச் சந்தித்துப் பேசுவேன். ஆனால், என்னை எந்தவொரு வரையறைக்குள்ளும் சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை. என் உலகம் மிகப்பெரியது” எனக் கம்பீரமா கூறுகிறார் ஜின் ஸிங்.Trending Articles

Sponsored