ஒரே வாரத்தில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு... பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாமா?!Sponsoredபட்ஜெட் தாக்கல் செய்த நாளிலிருந்து கடந்த ஏழு நாள்களாக பங்குச் சந்தை பெரும் சரிவைச் சந்தித்துவருகிறது. நேற்று, இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, ஜப்பான், சிங்கப்பூர் உள்பட உலக அளவிலான நாடுகளின் பங்குச்சந்தைகளும் சரிவைச் சந்தித்தன. 

``அமெரிக்கச் சந்தைகளின் வீழ்ச்சி, ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் எதிரொலித்தது'' என்கின்றனர் நிபுணர்கள். கடந்த ஆறு நாள்களில் இந்திய பங்குச்சந்தை சரிவால் முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. பங்குச்சந்தை, கடந்த இரண்டு வருடங்களாக ஏற்றம் கண்டு வந்தது. ஜனவரி மாதத்தின் இறுதியில் மும்பை பங்குச்சந்தை 36,000 புள்ளிகளுடன் வர்த்தகமானது. இதனால், பெரும்பாலானோர் பங்கு முதலீட்டிலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிலும் ஆர்வம் செலுத்த ஆரம்பித்தனர். 

Sponsored


இந்நிலையில் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், `நீண்டகால முதலீட்டாளர்கள், பங்குச்சந்தை முதலீட்டில் ஒரு லட்சம் ரூபாய்க்குமேல் லாபம் பெற்றால், அதில் 10 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும்' என அறிவிக்கப்பட்டதால், சந்தை சரிவைச் சந்திக்க ஆரம்பித்தது. முதல் நாளில் மும்பை பங்குச்சந்தை 1,274 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையில் 390 புள்ளிகளும் குறைந்தன. இதனால், ஒரு நாளிலேயே பங்குச்சந்தையில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள் 5.40 லட்சம் கோடி ரூபாய் இழந்தனர். இரண்டாவது நாளில் மும்பை பங்குச்சந்தை 561 புள்ளிகளும் தேசியப் பங்குச்சந்தையில் 168 புள்ளிகளும் குறைந்தன. இதன்மூலம் 2.70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்த வகையில் தொடர் சரிவால் ஒரே வாரத்தில் 10 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பைச் சந்தித்துள்ளனர் பங்கு வர்த்தகத்தினர். 

Sponsored


கடந்த ஒரு வாரத்தில் மும்பை பங்குச்சந்தை 36,000 புள்ளிகளிலிருந்து 34,000 புள்ளிகளாக இறங்கியுள்ளது. ஜனவரி 25-ம் தேதி முடிவில்  1,55,000 கோடி ரூபாய் மதிப்பில் இருந்தது. இது பிப்ரவரி 6-ம் தேதி வர்த்தக முடிவில் 1,45,000 கோடி ரூபாயாக மாறியிருக்கிறது. 

பங்குச்சந்தை சரிவைச் சந்திப்பது குறித்து நிதித்துறைச் செயலர் ஹஷ்முக் ஆதித்யா, ``உலகச் சந்தைகளின் வீழ்ச்சியால் இந்தியச் சந்தை வீழ்ச்சியடைந்துவருகிறது. நிதிநிலையில் அறிவிக்கப்பட்ட நீண்டகால மூலதன வரிக்கும் இந்தியப் பங்குச்சந்தை சரிவுக்கும் சம்பந்தமில்லை. தற்போது அந்நிய முதலீடு அதிகரித்துவருகிறது. மாத வருமானத்துக்கு வரி செலுத்துவதுபோல், பங்கு வருமானத்துக்கும் வரி செலுத்தவேண்டியது அவசியம். வரி செலுத்துவோரிடம் பாரபட்சம் காட்டக் கூடாது என்ற வகையில் நிதி அமைச்சர் நீண்டகால மூலதன வரியை அறிமுகப்படுத்தியுள்ளார்" என்றார். 

அமெரிக்காவின் மத்திய வங்கியின் தலைவராக ஜெரோம் பாவெல் பதவியேற்ற முதல் நாளிலேயே அமெரிக்கப் பங்குச்சந்தை சரிவைச் சந்தித்திருக்கிறது. இதற்குக் காரணம், ``அமெரிக்க மத்திய வங்கி, குறுகியகால கடனுக்கான வட்டிவிகிதத்தை உயர்த்த வாய்ப்பு இருப்பதாக செய்தி பரவியதுதான்'' என்றனர்  நிபுணர்கள்.

அமெரிக்காவில் கடந்த ஆறு வருடங்களாக பங்குச்சந்தை சரிவைச் சந்திக்காமல், நேர்முகத்திலேயே இருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதாரம் மேம்பட்டுவருகிறது. தொழில் துறையைத் தவிர இதர துறைகளிலும் வேலைவாய்ப்புகள் அதிகரித்துவருகின்றன. இந்த நிலையில் குறுகியகால கடனுக்கான வட்டிவிகிதத்தை மாற்றியமைக்க மத்திய வங்கி முடிவெடுத்துள்ளது. இதனால் அமெரிக்காவின் பங்கு முதலீட்டாளர்கள் சந்தையிலிருந்து பணத்தை எடுக்க முனைந்ததால், சந்தை சரிவைச் சந்தித்துள்ளது. சொத்துமதிப்பில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி அமேசான் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரு நாளில் 50 டாலர் அளவுக்குக் குறைந்துள்ளது. மேலும், அமெரிக்கச் சந்தை சரிவால் இந்தியப் பங்குச்சந்தையில் ஐடி நிறுவனங்களின் பங்கு விலைகள் குறைந்திருக்கின்றன. 

இந்த வீழ்ச்சி குறித்து, பங்குச்சந்தை நிபுணர்களிடம் பேசியபோது ``கடந்த ஆண்டில் தேசியப் பங்குச்சந்தை 36 சதவிகிதம் வளர்ச்சி கண்டிருக்கிறது. ஆகையால், இன்னும் கொஞ்சம் புள்ளிகள் குறையவும் வாய்ப்பு இருக்கிறது. தற்போது பங்குச்சந்தை குறைந்ததை நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்பவர்கள் வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, நல்ல நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்ய வேண்டும்" என்று ஆலோசனை வழங்கினர்.Trending Articles

Sponsored