”இறப்பு வரை மனித உரிமைக்காகப் போராடியவர் அஸ்மா!” - கலங்கும் பாகிஸ்தான் மக்கள்



1983 - ம் ஆண்டு : சாஃபியா பீபீ என்ற பதின்மூன்று வயது விழிக்குறைபாடு உள்ள சிறுமி, பாகிஸ்தானில் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறாள். 

Sponsored


அவளைப் பணியமர்த்தியவர்களாலேயே நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடுமையால், அவள் கருவுற்றாள். நீதி என்பது யாருடைய பக்கம் நின்றிருக்க வேண்டும்?

Sponsored


ஆனால், அந்த இடத்தில் குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டது, சாஃபியா. ஜினா (zina) எனும் சட்டம், அவள் புறம்பான பாலியல் உறவில் ஈடுபட்டாள் என்று சாடியது. அக்காரணத்தால் அவளுக்குச் சவுக்கடி, மூன்றாண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் ஆகிவற்றை விதிக்கவேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அன்று தன்னுடைய பெண்கள் அமைப்பின் மூலமாக நீதியை நிலைநிறுத்தியவர் அஸ்மா ஜகாங்கீர். பாகிஸ்தான் நாட்டில் மனித உரிமைக்காகவும், பெண் விடுதலைக்காகவும் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்துவந்த பாகிஸ்தானின் தலைசிறந்த வழக்கறிஞர்களுள் ஒருவர். சிறைவாசம், வீட்டுச்சிறை என்று வாழ்க்கையில் போராட்டத்திலும், களப்பணியிலும் சமமாக நின்றவர். 2005 - ம் ஆண்டு உலக சமாதானத்துக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட நபர்களுள் ஒருவர்.

Sponsored


1980-களில், பாகிஸ்தானில் ஜியா உல் ஹக்கின் அதிகாரத்தின் கீழ் ராணுவ ஆட்சி நடைபெற்றது. மக்களாட்சியை முன்னிறுத்த வேண்டும் என்று நடைபெற்ற போராட்டத்தில் முக்கியப் பொறுப்பேற்று வழிநடத்தியவர் அஸ்மா. இதன் காரணமாக அவர் 1983 - ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 1986 ல் ஜெனீவா சென்ற அவர், சர்வதேச குழந்தைகள் காப்பகத்தின் துணைத்தலைவராகவும் செயல்பட்டார். 

இன்னும் பல நாடுகளில் மனித உரிமைச் சட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படாமல் இருக்கும்போது, 1987 - ம் ஆண்டு பாகிஸ்தானின் மனித உரிமை ஆணையத்தைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவராக இருந்தார். பாகிஸ்தான் எனும் நாடு உருவாக்கப்பட்டபின், சட்டம், மனித உரிமைகள், பாலினச் சமத்துவம் என்று அந்நாட்டின் கொள்கைகளுக்குப் பின் இருக்கும் நுட்பமான அரசியலைப் புரிந்துகொண்டால், இந்த மனித உரிமை ஆணையம் எத்தகைய முக்கியத்துவத்தைக் கொண்டது என்று நம்மால் புரிந்துகொள்ள இயலும்.

பாகிஸ்தானில் பெண்களின் எழுத்தறிவு விகிதம் என்பது 45 விழுக்காடு மட்டுமே. பெண்ணின் கல்வி என்பது அந்தப் பெண்ணுக்கு மட்டும் அல்லாமல், அவளின் சமுதாயத்துக்கே பலனளிக்கும் என்ற நம்பிக்கையில், அவர் பாகிஸ்தானில் பாலினச் சமத்துவத்துக்காகப் போராடினார். அதுமட்டுமல்லாமல், குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு, மரண தண்டனை எதிர்ப்பு ஆகியவற்றிலும் தீவிரக் களப்பணி செய்தார். மேலும், ஐக்கிய நாடுகளின் சபையில் நடைபெற்ற இது தொடர்பான பணிகளிலும் இவரது பங்கு கணிசமானதாக இருந்தது. 

அஸ்மா, தீவிரமாகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் காலத்தில்தான் பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. 2007 - ம் ஆண்டு மறு தேர்தலில், முஷாரப் தேர்ந்தெடுக்கப்படுவதில் குளறுபடி நடந்ததால், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. சர்ச்சைக்குரிய முறையில் அங்கு ஊடகம் தடை செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தில் ராணுவம் புகுந்து நீதிபதிகளைக் கைது செய்தது. இதன் காரணமாக, அஸ்மாவும் அப்போது 90 நாள்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். 

சிறைவாசம் என்பது சிறையிலோ, வீட்டிலோ... எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்துக்கொண்டே இருந்தார் அஸ்மா. மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு கருத்துகளையும் சட்டத் திருத்தங்களையும் பரிந்துரைத்துக்கொண்டிருந்த அவர், 2016 - ம் ஆண்டு நவம்பர் 1முதல் இம்மாதம் 11 - ம் தேதி அவர் தன்னுடைய 66 ம் வயதில் மாரடைப்பால் இயற்கை எய்துவதற்கு முன்பு வரை, ஐக்கிய நாட்டு சபைக்காக, ஈரான் நாட்டின் மனித உரிமைகள் குறித்த சிறப்புச் செயலாளராகப் பணியாற்றினார். 

இருள் கவிழ்ந்திருக்கும் ஒவ்வொரு சமூகத்துக்கும் நிச்சயம் ஒரு விடிவெள்ளி தோன்றி வெளிச்சம் பரப்பும். அஸ்மா பாகிஸ்தானின் விடிவெள்ளியாக இருந்தார். அவருடைய விழுதுகளாக இன்னும் பல பெண்கள் சமூக நீதிக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் போராடுவார்கள்! 

அவரது ஆன்மா அமைதி கொள்ளட்டும்!



Trending Articles

Sponsored