"ஜீப் மேல சிறுத்தை... துரத்திய யானை... ஆப்பிரிக்காவில் 'திக் திக்' தருணங்கள்!" போட்டோகிராபர் உஷாSponsored
 

  20 ஆண்டுகளுக்கு முன்பு. ஒரு சிறுமியாக கோயம்புத்தூர் மருதமலை மலையடிவாரப் பகுதியில் இயற்கைக் காட்சிகளைக் கண்களால் சிறைபிடித்தவர், உஷா. இன்றோ, ஆப்பிரிக்கக் காடுகளில் வனவிலங்குகளை கேமராவால் வலைக்கும் வைல்டுலைஃப் போட்டோகிராபர். இவரின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் வனவிலங்குகளை அட்டகாசமாகக் காட்சிப்படுத்துகின்றன. தற்போது, கென்யாவில் வசித்துவரும் உஷா, வீடியோ காலில் உற்சாகமாகப் பேசுகிறார். 

Sponsored


"சின்ன வயசுல மருதமலை மலையடிவாரப் பகுதியில் வசித்ததால், இயற்கை என்னோடு கலந்து இருந்துச்சு. சார்டர்ட் அக்கவுன்டன்ட் வொர்க்கில் இருந்தபோதும் பல சுற்றுலா தளங்களுக்குப் போய், என்னுடைய பேசிக் மாடல் கேமராவில் போட்டோஸ் எடுப்பேன். 2006-ம் வருஷம் கல்யாணமாச்சு. பின்னர் கணவருடன் கென்யா தலைநகர் நைரோபியில் செட்டில்ட் ஆனேன். ஒருமுறை 'மசாய் மாரா' வனவிலங்கு சரணாலயத்துக்குக் கணவருடன் போனேன். அங்கே எக்கச்சக்க விலங்குகளைப் பார்த்ததும் அளவில்லா மகிழ்ச்சி.

Sponsored


தொடர்ந்து, பல சரணாலயங்களுக்கும் போய் என் பேசிக் மாடல் கேமராவிலேயே போட்டோஸ் எடுத்து, எனக்கே எனக்காக ரசிப்பேன். பையன் ஷாஸ்வத் ஹரிஷ் பிறந்தப்போ, சி.ஏ., வேலையிலிருந்து பிரேக் எடுத்தேன். அப்போ, போட்டோகிராபி ஃபீல்டில் அதிக ஆர்வம் உண்டாச்சு. அவ்வளவுதான்... முந்தைய வேலையை விட்டுட்டேன். முழுநேர வைல்டு லைஃப் போட்டோகிராபர் ஆகிட்டேன்" என்று சிரிக்கிறார் உஷா.  

''ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல சரணாலயங்களுக்குக் குழுவாகவும் தனியாகவும் பயணம் செய்றேன். கடந்த நாலு வருஷத்தில் 50-க்கும் மேற்பட்ட சரணாலயங்களைப் பார்த்துட்டேன். வனவிலங்குகளின் இயல்பான, மூர்க்கமான, மகிழ்ச்சியான பல வித்தியாச தருணங்களை போட்டோ எடுக்கிறதே அலாதியானது. காலையில் 6 - 10 மணிவரை மற்றும் ஈவ்னிங் டைம்களில் விலங்குகள் உற்சாக மனநிலையில் இருக்கும். போட்டோஸ் எடுக்க அது சிறந்த நேரம். வெயில் நேரங்களில் மிருகங்கள் ஓய்வெடுக்க ஆரம்பிக்கும். அப்போ, போட்டோஸ் எடுக்கிறது சவாலானதுதான். 

சிங்கம், புலி, சிறுத்தை போன்றவை இரையை வேட்டையாடிச் சாப்பிடும் ஆக்‌ஷன் காட்சிகளைப் பல மணி நேரம் காத்திருந்து புகைப்படம் எடுப்பேன். அந்தச் சவால், செம த்ரில்லிங்கா இருக்கும். நான் உட்கார்ந்திருக்கும் சஃபாரி ஜீப் மேலேயே சிறுத்தை நிற்கும் 'திக் திக்' நிமிடங்கள், துரத்தும் யானையிடமிருந்து தப்பிச்சது உள்ளிட்ட நிறைய சவால்களை எதிர்கொண்டிருக்கிறேன். என் அனுபவத்தில் சரணாலயங்களில் வசிக்கும் பெரும்பாலான விலங்குகளையும் பார்த்திருக்கேன். ஆனாலும், ஒவ்வொரு ஃபாரஸ்ட் ட்ரிப்புமே புது அனுபவத்தையும் உற்சாகத்தையும் கொடுக்குது. ஒவ்வொரு முறையும் அந்த விலங்குகளை வித்தியாசமான ரூபத்தில் பார்க்கிறேன்" என்கிற உஷா, 'ஈஸ்ட் ஆப்பிரிக்கன் வைல்டு லைஃப் போட்டோகிராபர் ஆஃப் 2016' மற்றும் 'ஷூட் தி ஃப்ரேம் இன்டர்நேஷனல் போட்டோகிராபி' விருதுகளை வென்றுள்ளார். 

"எனக்கு எல்லா வகையான வனவிலங்குகளையும் பிடிக்கும். ஆனாலும், கொரில்லா மற்றும் வரிக்குதிரைகள் என் ஆல்டைம் ஃபேவரைட். உலகத்தில் 900 கொரில்லாக்கள் மட்டுமே இருக்கு. அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களில் இதுவும் ஒன்று. கிழக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தின் உகாண்டா, ருவாண்டா, காங்கோ நாடுகளில் மட்டுமே வசிக்கின்றன. மற்ற வனப்பகுதிக்குப் போகிற மாதிரி, இங்கெயெல்லாம் ஜீப்ல போகமுடியாது. கரடுமுரடான பாதையில் நடந்துதான் போகணும். கொரில்லாவும் நாமும் ஹை டு ஹை பார்க்கவே கூடாது. அது, கோபத்துடன் நம் பக்கத்தில் நெருங்கி வந்துட்டால், அசையாமல் நிற்கணும். எதுவும் செய்யாமல் போயிடும். அதிகக் கோபமான தருணங்களில் நம்மைத் தாக்கவும் செய்யும். 

வைல்டு லைஃப் போட்டோகிராபி பயணத்தில் சஃபாரி ஜீப்பைவிட்டு யாரும் இறங்கக் கூடாது என்பது ரூல்ஸ். அடர்ந்த காடுகளில் இரவு சமயங்களில் தங்கமுடியாது. மீண்டும் வெளிப்பகுதிக்கு வந்து தங்கிட்டு, அடுத்த நாள் காலையில் காட்டுக்குள்ளே போவோம். விலங்குகளின் பார்வையில், மனிதர்களும் ஒரு விலங்குதான். காட்டு விலங்குகள் எப்போதும் மூர்க்கத்தனமானது. ஆனால், மனித மிருகத்தால் அவற்றுக்கு ஆபத்தும் தொந்தரவும் ஏற்படாத வரையில் அவற்றால் எந்தத் தொந்தரவும் வராது. 'விலங்குகளோடு செல்ஃபி எடுத்துக்கிறேன்'னு பலரும் தொந்தரவு செய்யும்போதும், உணவு கிடைக்காமல் அல்லது தனிப்பட்ட காரணங்களால் கோபமாக இருக்கும்போதும் மட்டுமே அவை நம்மைத் தாக்கும்" என்கிற உஷாவின் குரலில் நேசம் பிரகாசிக்கிறது. 

"இதுவரை பல நாடுகளின் வனவிலங்கு சரணாலயங்களுக்குப் போயிருக்கேன். இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா (உத்தரகாண்ட்), ரந்தம்பூர் தேசியப் பூங்கா (ராஜஸ்தான்), கபினி தேசியப் பூங்கா ஆகியவற்றுக்குப் போயிருக்கேன். வருஷத்துக்கு ஓரிருமுறை இந்தியா வருவேன். அப்போவெல்லாம் தவறாமல் ஒரு வனவிலங்கு சரணாலயத்துக்கு விசிட் அடிச்சுடுவேன். என் கணவரும் பையனும் கொடுக்கும் சப்போர்ட்டில்தான் வைல்டு லைஃப் போட்டோகிராபியில் சிறப்பா செயல்பட முடியுது. 

ஆரம்பத்தில், 'பொண்ணா ஃபாரஸ்டுக்கு போறது சவாலானது. இதெல்லாம் வேண்டாம்'னு பெற்றோர் சொன்னாங்க. அவங்களுக்கு நம்பிக்கை கொடுத்துட்டு என் பயணத்தைத் தொடங்கினேன். சில ஃபாரஸ்ட் பயணத்துக்குப் பிறகு, பெற்றோருக்கு பயம் நீங்கிடுச்சு. என் ட்ரிப் பற்றியும், அங்கே நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகள் பற்றியும் ஆர்வமாகக் கேட்பாங்க. பரபரவென ஓடும் வாழ்க்கைப் பயணத்தில் பல விஷயங்களைத் தொலைக்கிறோம். அதிலிருந்து விடுபட ரொம்ப செலவழிக்க வேண்டாம். 

எல்லோரும் தங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு வனவிலங்கு சரணாலயத்துக்குக் குடும்பத்துடன் போய்ட்டு வந்தாலே போதும். மனதுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். இந்த உலகம் விலங்குகளுக்கும் சேர்த்துத்தான் என்ற உண்மையும் புரியும். என் ஆசையெல்லாம் ஒண்ணுதான். உலகில் எக்கச்சக்க வனவிலங்குகள் இருக்கு. அவற்றில் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் பார்த்து ரசிச்சுடணும். விதவிதமான போட்டோஸ் எடுக்கணும்" என்கிறார் உஷா பரவசத்துடன். 

உஷாவின் விரிவான பேட்டி மற்றும் அவர் எடுத்த அட்டகாசமான புகைப்படங்களை நாளை வெளியாகும் 'அவள் விகடன்' இதழில் காணலாம். Trending Articles

Sponsored