`தாமதமாகும் முன் எங்களைக் காப்பாற்றுங்கள்!’ - சிரியாவிலிருந்து ஒலிக்கும் 15 வயது சிறுவனின் குரல் (வீடியோ)



Sponsored



சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கிழக்கு கௌட்டா நகர்மீது அதிபர் பஷார் அல் ஆசாத் மற்றும் அவரது ஆதரவுப் படைகள் நடத்திவரும் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் ஒரு வார காலத்திற்குள் கொல்லப்பட்டுள்ளனர். 


சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராகக் கிளர்ச்சியாளர்கள் குழுவினர் பலர் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், ஐ.எஸ். அமைப்பும் வேரூன்றி இருப்பதால், மக்கள் பலமுனைத் தாக்குதலில் சிக்கித் தவித்து வருகின்றனர். சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை 4.5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளை விட்டு வெளியேறி, அகதிகளாக அண்டைநாடுகளில் குடியேறி உள்ளதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. 

Sponsored


Sponsored


இந்த நிலையில், கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கடைசி நகரான கிழக்கு கௌட்டா நகர்மீது கடந்த  ஞாயிற்றுக்கிழமை முதல் சிரியா அரசுப் படைகள் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஆதரவு நாடுகளின் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஐ.நாவின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்தப்பட்டு வரும் இந்தத் தாக்குதலில், குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். குளோரின் வாயு உபயோகப்படுத்தி ரசாயனத் தாக்குதலும் நடத்தப்பட்டு வருவதாக மனித  உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. 

இந்த நிலையில், தாக்குதல் நடந்துவரும் கிழக்கு கௌட்டா நகரில் இருந்து தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 15 வயது சிறுவன், ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார். வீடியோ மற்றும் புகைப்படம் எனத்  தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளை நேரடியாக அவர் பதிவு செய்துள்ளார். சிரியா மற்றும் ரஷ்யப் படைகளின் தொடர் தாக்குதலுக்குக் கிழக்கு கௌட்டா நகர் ஆளாகிவருவதாகவும், இதனால் மின்சாரம், உணவு என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல், பதுங்கு குழிகளுக்குள் வாழ்ந்து வருவதாகவும் முகமது நஜிம் என்ற அந்த சிறுவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பசியாலும், குண்டுவீச்சாலும்  கிழக்கு கௌட்டா மக்கள் பலியாகி வருவதாகவும், மிகவும் தாமதமாவதற்குள் தங்களைக் காப்பாற்றும்படியும் அவர் கோரிக்கை விடுத்து வருகிறார்.   


 



Trending Articles

Sponsored