இலங்கை அரசை அசைத்த ஐநா மனித உரிமை ஆணையாளர் அறிக்கை சொல்வது என்ன?Sponsoredஇலங்கையில் அரசே நடத்திய போரை முடித்து ஒன்பது ஆண்டுகள் ஆகிய பின்னரும் அந்த நாட்டில் நல்லிணக்கத்துக்கான முன்னேற்றத்தில் திருப்தி இல்லை என ஐநா மனித உரிமைப் பேரவையில் அதன் ஆணையாளர் செயித் ராட் அல் உசைன் அறிக்கையை முன்வைத்துள்ளார். அதை எதிர்நோக்கும்வகையில், இலங்கை அரசு அவசரமாக நடவடிக்கையில்  இறங்கியுள்ளது. இது வெறும் கண் துடைப்பு என ஈழத்தமிழர் தரப்பில் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. 

முள்ளிவாய்க்காலில் முடித்துவைக்கப்பட்ட இலங்கை அரசின் இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது ஈழத்தமிழ் மக்களின் கோரிக்கை. சர்வதேசச் சமூகம் இதை ஏற்காமல் இருக்கும் நிலையில், 2015 செப்டம்பரில் நடந்த ஐநா மனித உரிமைப் பேரவையின் 30-வது கூட்டத்தொடரில், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புடைமை, மனித உரிமைகளை மேம்படுத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த இரண்டுஆண்டு காலத்துக்குள் இதைச் செய்துமுடிக்க வேண்டும் என இலங்கை அரசுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. 

Sponsored


அதை நிறைவேற்றுவதில் எந்தவித அக்கறையும் காட்டாத இனப்படுகொலைக் குற்றவாளியான மகிந்த ராஜபக்சே அரசு, அடுத்துவந்த தேர்தலில் தோற்றது. இலங்கை அரசின் புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேனா வந்தார். எதிர்க்கட்சியுடன் இணைந்து ’நல்லிணக்க’ அரசாங்கம் எனும் புதிய ஆட்சி வந்தபின்னர், மேலும் இரண்டு ஆண்டுகள் (2019வரை) அவகாசம் தந்து, 2017 மார்ச்சில் நடந்த 34-வது பேரவைக் கூட்டத்தொடரில் இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போதே ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் செயித் ராட் அல் உசைன்,  அமைதியை நோக்கி முன்னேறும் இடைக்கட்டத்தில் இலங்கை அரசுத் தரப்பானது மெதுவாக நகர்கிறது என்று விமர்சித்தார். 

Sponsored


அதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 26-ம் தேதி ஐநா மனித உரிமைப் பேரவையின் 37-வது கூட்டத்தொடர் தொடங்கியது. அதற்கு முன்னர், ஐநா மனித உரிமை உயர் ஆணையர் செயித் ராட் அல் உசைன், இலங்கை நிலவரம் பற்றிய தன்னுடைய மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டார். அதில் இலங்கை அரசின் சில நடவடிக்கைகளை வரவேற்றுள்ள அவர், தன் அதிருப்தியையும் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார். 

செயித் ராட் அல் உசைனின் அறிக்கையிலிருந்து...!

''அமைதியை நோக்கிய நிலைமாறு கால நீதிக்கான இலக்குகளை அடைய நீண்ட காலம் தேவைப்படும் என்றாலும், அதற்கான கட்டமைப்பு மற்றும் சட்டரீதியான பணிகளை இலங்கை அரசானது இரண்டரை ஆண்டுகளுக்குள் செய்திருக்க முடியும். இதனால் உருப்படியான பலன்கள் ஏற்படவில்லை. இதற்காகப் பல்வேறு பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டபோதும் ஆரம்பகால வரைவுக்கொள்கை நிலையிலேயே அவை கலைக்கப்பட்டுவிட்டன. அவற்றின் செயற்பாடுகள் பகிரங்கமாக வெளிப்படுத்தப்படவில்லை. புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவும் கடந்த ஆண்டில் ஒரே முறைதான் கூடியுள்ளது. மூத்த அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழு வழக்கமான கூட்டங்களை நடத்துவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

செயல்பாட்டை உள்ளடக்கிய நிலைமாறு காலகட்ட நீதிக்கான திடமும் பகிரங்கமாக முன்வைக்கப்படாமல் இருக்கிறது. அதனால் அதைப் பற்றி ஆலோசிக்கப்படவில்லை. நல்லிணக்க முறைகளைச் செயல்படுத்துவதற்கான ஆலோசனை அறிக்கையானது, அதாவது உயர் ஆணையரின் முந்தைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில சாதகமான அம்சங்களில் ஒன்று, அரசாங்கத்தாலோ நாடாளுமன்றத்தாலோ ஆய்வுக்கு உட்படுத்தப்படவோ ஒப்பேற்பு செய்யப்படவோ இல்லை. முக்கியமான கடப்பாடுகளைச் செய்துமுடிக்கும் இந்த அம்சமானது இன்னும் தொங்கலாகவே இருக்கிறது. 

காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம் அமைப்பது குறித்து 2016 ஆகஸ்ட்டில் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், தாமதமாகக் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி அரசிதழில் இது பற்றி அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் இதில் தொடர்ச்சியான முன்னேற்றம் வரவேற்கப்படக்கூடியது. ஏனெனில் நிலைமாறு காலகட்ட நீதி முயற்சியின் முதல்படி இது. ஜனவரி 15 நிலவரப்படி இதற்கான ஆணையர்களை நியமிக்கும்பணி நடந்துகொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 

காணாமற்போகச் செய்யப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு பற்றிய பன்னாட்டு உடன்படிக்கைக்கு 2016 மே 25-ல் இலங்கை அரசு ஒப்புதல் தெரிவித்தும், இன்னும் உள்நாட்டில் சட்டமாக்கவில்லை. கடந்த ஜூலை 5, செப்டம்பர் 21 ஆகிய இரு நாள்களிலும் நாடாளுமன்றத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டும், மேற்கொண்டும் இது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முந்தைய உயர் ஆணையரின் அறிக்கைகளில் கூறப்பட்டபடி, இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டால்தான் காணாமற்போகச் செய்யப்பட்டவர்களின் அலுவலகமானது உரிய காலத்துக்குள் செயல்பாட்டுக்கு வரமுடியும். நல்லிணக்கம் மற்றும் உண்மைக்கான ஆணைக்குழுவுக்கு சட்ட அங்கீகாரம் அளிப்பது இனியும் தாமதப்படுத்தப்படக் கூடாது. 

இழப்பீடு விவகாரத்தைப் பொறுத்தவரை, அரசாங்கம்  சாதாரணமாக மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதைப்போல அல்லாமல், பொறுப்புஉணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். மிக மோசமான மனிதவுரிமை மீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனித்தனியாகவும் மொத்தமாகவும் இழப்பீடு அளிக்கப்பட வேண்டும். அவர்கள் எவ்வளவு மீறலுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பதன் அடிப்படையிலும் பாதிக்கப்பட்டவர்களின் இனம், பிரதேசம், மதம் மற்றும் பிற காரணங்களால் பாகுபாடு இல்லாமலும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். குறிப்பாக பாலினப் பாகுபாட்டை முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டும். 

ஐநா மனித உரிமைப் பேரவையின் 30/1 தீர்மானத்தில் உறுதியளிக்கப்பட்ட பொறுப்புடைமையைப் பொறுத்தவரை, அதற்கான நீதித்துறைச் செயல்பாடுகள் சிறிதும் மேற்கொள்ளப்படவில்லை. பன்னாட்டுச் சட்டப்படியான குற்றங்களில் ஈடுபட்டுள்ளவர்களைத் தண்டிக்கும்வகையில் உள்நாட்டில் அவற்றைச் சட்டத்துக்குள் கொண்டுவரப்படவில்லை. இலங்கை மனித உரிமை ஆணையத்தின் சுயேட்சைத் தன்மைக்கு அரசின் அனைத்துப் பிரிவுகளும் ஆதரவும் மரியாதையும் அளிக்கவேண்டிய தேவை கூடுதலாக உள்ளது. 

இலங்கை அரசுத்தரப்புத் தகவலின்படி, (ஜனவரி 18-ம் தேதி நிலவரம்), பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்படி 72 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்; 11 பேர் குற்றச்சாட்டு நிலுவையில் விசாரணை முடிக்கப்பட்டும் 61 பேர்  உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுடனும் உள்ளனர். 

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ராணுவத்தால் பிடித்துவைக்கப்பட்டுள்ள நிலங்களுக்கான இழப்பீடு இன்னும் முடிவுறாத விவகாரமாகவே இருக்கிறது. மைலடி துறைமுகம் மற்றும் 54 ஏக்கர் பகுதியானது 30 ஆண்டுத் தடைக்குப் பின்னர் கடந்த ஆண்டு ஜூலை 3-ம் தேதி விடுவிக்கப்பட்டது. மக்களின் நிலம் 842 ஏக்கரும் அரசு நிலம் 4,318 ஏக்கரும் ஜனவரிக்கும் டிசம்பருக்கும் இடையில் விடுவிக்கப்பட்டுள்ளது என இலங்கை அரசு தெரிவிக்கிறது. இந்த நிலையில் பொதுமக்களின்  5,327 ஏக்கர் நிலம் உட்பட 36,002 ஏக்கர் நிலத்தை ராணுவமே வைத்திருக்கும் என்பதையே அரசாங்கத்தின் திட்டங்கள் காட்டுகின்றன. 2009-ல் 70% நிலத்தை உரியவர்களிடம் கொடுத்துவிட்டதாக அரசு கூறியநிலையில், ராணுவம் ஆக்கிரமித்துள்ள முழு நிலத்தையும் குடிமக்கள் தங்களுடையது எனக் கோருவது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். உயர் ஆணையரைப் பொறுத்தவரை, ராணுவமானது அதன் பாதுகாப்புக் காரணங்களுக்கு  அவசியமான அளவு நிலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; அதையும் மீறி தேவைப்படும் நிலத்தை எடுப்பதற்கு சுயேட்சையான நடைமுறை அவசியமாகும். 

இலங்கை அரசின் நீதித் துறை அமைப்பானது குற்றமிழைத்த அரசு அதிகாரிகள் அல்லது ராணுவ அதிகாரிகள் தொடர்பாக இரட்டை அளவுகோலைக் கொண்டதாக இருக்கிறது. கடந்த செப்டம்பர் 7-ம் தேதியன்று ஊழல் வழக்கில் அதிபரின் முன்னாள் செயலாளர், தொலைபேசித் துறையின் தலைமை இயக்குநர் இருவரும் 3 ஆண்டுகள் சிறைவாசம் விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். சில மணி நேரத்துக்குள்ளேயே இருவரும் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். ஆனால், சாதாரண கைதிகள் தொற்று உட்பட உடனடியாக கவனிக்க வேண்டிய உடல்நலப் பிரச்னைகளைத் தெரிவித்தாலும் அது கண்டுகொள்ளப்படுவதில்லை. 20-ம் தேதியன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தால் ’அசாதாரண சூழல்’எனக் குறிப்பிடப்பட்டு, இருவரும் சிறையிலிருந்தே விடுதலை செய்யப்பட்டனர். இதே சமயம், பயங்கரவாத வழக்கில் சந்தேகத்தின் பேரில் பிடித்துவைக்கப்படுவோர் விசாரணையைச் சந்திக்காமலேயே 10 ஆண்டுகள்வரை சிறையிலேயே அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். "

” ஐநா மனிதவுரிமை ஆணையத்தின் உயர் ஆணையரின் முந்தைய அறிக்கையில் வலியுறுத்தப்பட்ட முக்கிய வழக்குகளில்கூட முன்னேற்றத்தைக் காட்டாமல் இருப்பதானது, அரசுத் தரப்பில் இழைக்கப்பட்டுள்ள மோசமான குற்றங்கள், பன்னாட்டு மனிதாபிமான மற்றும் குற்றவியல் சட்டப்படியான மனிதவுரிமை மீறல்களுக்காக தனி நீதிமன்றம் அமைக்கவேண்டும் எனும் கோரிக்கையை வலுப்படுத்துகிறது. 

கடந்த அக்டோபரில் ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் குறிப்பிட்டதைப்போல, பிரேசிலுக்கான இலங்கை அரசின் தூதராக போர்க்குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ராணுவத் தளபதிக்கு எதிரான வழக்கு, பெரும் பனிமலையின் உச்சிமுனைதான். உள்நாட்டு நீதிவழங்கல் இல்லாதபட்சத்தில் இதைப் போல எத்தனையோ வழக்குகள் கிளம்புவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே நீதிவழங்கலானது நம்பகமாகவும் குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் நம்பக்கூடியதுமான இருப்பதற்கு, வெளியிலிருந்து வரும் ஆதரவு தேவைப்படுகிறது. அப்படியான ஆதரவு வராதபட்சத்தில், ஐநா மனிதவுரிமை உயர் ஆணையர் அலுவலகமானது பன்னாட்டு நீதிவழங்கலைச் செயல்படுத்த உறுப்பினர் நாடுகளை வலியுறுத்துகிறது. 

உயர் ஆணையரின் முந்தைய அறிக்கையால், 2015 ஜனவரி முதல் இலங்கை மனிதவுரிமை சூழலில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மதச் சிறுபான்மையினரைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள், அவற்றுக்கு அரசின் மெதுவான நடவடிக்கைகள் மற்றும் அரசின் (அப்போதைய) சில முக்கிய அமைச்சர்களின் அறிக்கைகள் ஆகியன அரசாங்கத்தின் மனிதவுரிமைக் கடப்பாட்டைக் கெடுத்துவிட்டுள்ளன. தேசிய மனிதவுரிமைச் செயல்திட்டம் (2017-21) கடந்த ஆண்டு ஜனவரியில் அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது; நவ. 1 ஆம் தேதி இது வெளியிடப்பட்டது. இது வரவேற்புக்குரிய முன்னகர்வு என்றாலும் அரசாங்கம் இதை நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்யவேண்டும். 

ஐநா மனிதவுரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்துக்கு, இந்த இரண்டரை ஆண்டு கால நிலைமாறு காலகட்டத்தில், மனிதவுரிமை மீறலுக்கு ஆட்பட்டோர், அவர்களைப் பாதுகாப்பவர்கள், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் துன்புறுத்தப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. செயற்பாட்டாளர்களைக் கண்காணிப்பது போன்ற தேவையற்ற நடவடிக்கைகளைத் தவிர்த்து, உண்மைக்கும் நம்பகத்தன்மைக்குமான முன்னிபந்தனைகளே, நல்லிணக்கத்துக்குத் தேவையாக இருக்கின்றன. உயர் ஆணையரிடம் இந்த நிலைமை குறித்து அரசுத் தரப்பில் மீண்டும் மீண்டும் உறுதியளிக்கப்பட்டாலும் இந்த செயல்களை நிறுத்தமுடியாமல் இருப்பது பெரும் எச்சரிக்கையாகும். இந்த இரண்டாண்டுகளில் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான தாக்குதல் அல்லது மிரட்டப்படுவதும் கண்காணிக்கப்படுவதும் குறைந்தது இரண்டு முறையாவது நிகழ்ந்திருக்கிறது. 

சித்திரவதை கையாளப்படுவதும் இன்னும் தொடர்ந்துவருகிற முக்கியமான பிரச்னை ஆகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் அயல்நாட்டு ஊடகங்களில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆட்கடத்தல், கடும் சித்திரவதை, பாலின வன்கொடுமை விவகாரங்கள் மிகவும் கவலைக்குரியவை. ஐநா மனிதவுரிமை உயர் ஆணையர் அலுவலகமானது இந்தக் குற்றச்சாட்டுகளை எப்படி விசாரிப்பது என்பது பற்றி ஆராய்ந்துவருகிறது. அரசுத் தரப்பில், இதில் சட்டத்தின் மூலம் அதிகபட்சமாக உரியமுறையில் விசாரித்து தண்டனை வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு முழுவதும்  சமூகங்களுக்கு இடையிலான வன்முறைச் சம்பவங்கள், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள், வெறுப்புப் பேச்சு குறித்தும் நான் அதிகமாகக் கவலைகொள்கிறேன். கடந்த மே மாதத்தில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், மசூதிகள் மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கவை. முதல் இரண்டு வாரங்களில் ஏறத்தாழ தினமும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களுக்குத் தலைமைதாங்கியது, முஸ்லிம்களுக்கு எதிரான வெறித்தனம் கொண்ட சிங்கள பௌத்த தேசியவாதக் குழுவாகும். பொதுபல சேனா எனப்படும் குழுவின் தலைவரான ஞானசார தேரருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதையொட்டி, வன்முறைகள் அரங்கேற்றப்பட்டன. ஜூன் 13-ல் இந்த வன்முறைகளைக் கண்டித்து அரசுத்தரப்பால் அறிக்கை வெளியிடப்பட்டது. 

அடுத்து, கடந்த செப்டம்பர் 26 அன்று ’சிங்கள தேசியப் படை’ எனப்படும் புத்த பிக்குகளால் தலைமைதாங்கப்பட்ட ஒரு கும்பல், கொழும்புவில் தங்கியிருந்த ரோகிங்கியா அகதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தது. அவர்கள் தங்கியிருந்த வீடு, ஐநா அகதிகள் உயர் ஆணையர் அலுவலகம் மற்றும் முஸ்லிம் எய்ட் ஆகியவற்றின் உதவியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போலீசாரின் முன்னிலையிலேயே ரோகிங்கியா அகதிகள் மீது கல்லெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலை அடுத்து அவர்கள் அனைவரும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர்.  இன்னொரு சம்பவத்தால், நவம்பரில் தமிழ் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இடையில் பதற்றம் ஏற்பட்டது. 

கடந்த ஆண்டின் மோசமான சம்பவமானது, நவம்பர் 18, 19 தேதிகளில் தெற்கு மாகாணத்தின் ஜிண்டோட்டாவில் 70 முஸ்லிம் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் தாக்கி, சூறையாடப்பட்டன. சிங்களவர் மற்றும் முஸ்லிம் இளைஞர்களுக்கு இடையிலான ஒரு போக்குவரத்து பிரச்னையே, இந்த வன்முறைக்கு காரணமாக அமைந்தது. மே மாத வன்முறைகளைப் போல அல்லாமல், ஜிண்டோட்டாவில் அரசாங்கமானது விரைவாகச் செயல்பட்டது. சிறப்பு போலீஸ் படைகளை இறக்கியதுடன் ஊரடங்கு உத்தரவுகளையும் பிறப்பித்தது. பிரதமரே சம்பவ இடத்தைப் பார்வையிட்டதுடன், இதைப் போன்ற சம்பவங்களில் சட்டத்தின் முழு வீச்சும் பயன்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். குற்றம்சாட்டப்பட்ட 19 பேரும் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதற்கிடையில் இவாஞ்சிலிக்கல் கிறித்தவர்கள் மீதான தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இந்த வன்முறைகள் தொடர்பான தகவல்களை தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் விவரித்த முக்கிய வழக்கறிஞரும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளருமானவரை, அப்போதைய நீதித்துறை அமைச்சர் பகிரங்கமாக மிரட்டினார்; அந்த வழக்கறிஞரின் தொழில் உரிமத்தைப் பறித்துவிடுவதாகவும் அவர் கூறினார். 

ஆகவே, ஐநா மனிதவுரிமைகள் உயர் ஆணையர் கடந்த மார்ச்சில் கூறியபடி, முக்கியமான கடப்பாடுகளைச் செய்துமுடிப்பதன் மூலம் ஆக்கப்பூர்மான ஒத்துழைப்பு ஏற்படுத்தப்படவேண்டும். 30/1 தீர்மானத்தின்படி நிலைமாறு காலகட்ட நீதிக் கடப்பாடுகள் ஓராண்டுக்கும் மேலாக அப்படியே நிற்கின்றன. நம்பிக்கை தரக்கூடிய நடவடிக்கைகளின் மூலமான முன்னகர்வு போதுமானதாகவும் தீர்மானகரமானதாகவும் இல்லை. இதற்கான அமைப்புகள் தேவையான அரசியல் ஆதரவைத் திரட்டிக்கொள்ளவோ பெற்றுக்கொள்ளவோ இல்லை. 

2015 முதல் உயர் ஆணையர் தன் அறிக்கைகள் மற்றும் கருத்துகள் மூலமாக நிலைமை முன்னேற்றமில்லாமல் இருப்பதைக் குறிப்பிடும்போது, சாதகமான நிலை உருவாக்கப்படுகிறது. ஆனாலும் கடந்த ஆண்டில் இனங்களுக்கு இடையிலான பதற்றமும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களும் நிலைமையைச் சிதறடித்துவிடுகின்றன. 

இவற்றைப் போன்ற கவலைப்படக்கூடிய நிகழ்வுகளைச் சரிசெய்ய அரசாங்கமானது முயற்சிக்கையில் இந்த வகை வன்முறையானது நாட்டில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் அதீதமான வன்முறைக்கு இட்டுச்சென்றுவிடுகிறது; பெரும் பிரச்னையாகவும் மாறிவிடுகிறது. குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால், வெறுப்புப் பேச்சு, தவறான தகவலும் சமூக ஊடங்களில் போராட்டமும் அரசியல் லாபநோக்கை உருவாக்குவதும் சேரும்போது பிரச்னை பெரிதாகிவிடுகிறது. 

நீடித்துவரும் சித்திரவதை மற்றும் கண்காணிப்புக் குற்றச்சாட்டுகள், பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விலக்குவது, இச்சட்டத்தின் கீழான வழக்குகளில் தீர்வுகாண்பது போன்ற நம்பிக்கையை வளர்த்தெடுக்கும் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக நிலவும் மந்தம், அரசாங்கத்தின் சீரமைப்பு முயற்சிகளுக்கு ஊறு விளைவிப்பதாகவே இருக்கும். 

எனவே, ஐநா மனிதவுரிமைப் பேரவையானது இலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புடைமையும் மேம்படுவதற்கான செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கவேண்டும்; பேரவையின் உறுப்பு நாடுகள் சர்வதேச நீதிமுறையைப் பயன்படுத்துவது உட்பட வேறு  வழிகளைப் பற்றி ஆராயவேண்டும்.”Trending Articles

Sponsored