பாகிஸ்தான் எம்.பி-யாக இந்து தலித் பெண்..! யார் இந்தக் கிருஷ்ணகுமாரி?Sponsoredபாகிஸ்தான் நாட்டில் முதல்முறையாக இந்து மதத்தைச் சேர்ந்த தலித் பெண் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டில் இந்து மதத்தைச் சேர்ந்தவரான கிருஷ்ணகுமாரி கோலி எம்.பி-யாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெருமைப்பட வேண்டிய ஒன்று.

யார் இந்தக் கிருஷ்ணகுமாரி கோலி?

Sponsored


பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நடந்த எம்.பி தேர்தலில் மகளிருக்கான ஒதுக்கீட்டில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் 39 வயதான கிருஷ்ணகுமாரி கோலி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தக் கட்சியின் தலைவர் பிலாவால் பூட்டோ சர்தாரி ஆவார். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவரான கிருஷ்ணகுமாரி, சிந்து மாகாணம் நாகர்பாரிக்கர் மாவட்டத்தின் தார் கிராமத்தைச் சேர்ந்தவர். 1979-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவர் பிறந்தார். இதே மாகாணத்தில் இருக்கும் உமர்கோட் மாவட்டத்தின் குன்ரி கிராமத்தைச் சேர்ந்த நிலச்சுவான்தாரிடம் கிருஷ்ணகுமாரியும், அவரின் பெற்றோரும் அடிமைகளாக இருந்து பணியாற்றி வந்துள்ளனர். அந்தக் கிராமத்தில் இருந்துகொண்டே கிருஷ்ணகுமாரி 9-ம் வகுப்புவரை படித்துள்ளார். பின்னர், தன்னுடைய 16-வது வயதில் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தபோது லால்சந்த் என்பவருடன் இவருக்குத் திருமணம் நடந்தது. என்றாலும், திருமணம் தன் வாழ்க்கைக்கும், குறிக்கோளுக்கும் எந்தவிதத்திலும் தடையாக இருந்துவிடக் கூடாது என்பதில் திடமாக இருந்த அவர், தொடர்ந்து படித்தார். சிந்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சமூகவியல் பாடத்தில் பட்டம் பெற்றார். பின்னர் மறைந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியில், இணைந்து தன் தம்பியுடன் கட்சிப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றினார். அதன்பின், பெரனோ நகரின் யூனியன் கவுன்சில் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். தார் பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகவும், அவர்களின் நலன்களுக்காகவும் அயராது பாடுபட்டார் கிருஷ்ணகுமாரி. தற்போது, நாடாளுமன்றத் தேர்தலில், பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் அவர் வெற்றிபெற்றுள்ளார். செனட் சபையில் 52 உறுப்பினர்களுக்கான இடம் காலியாக இருப்பதால், அதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 15 இடங்களில் ஆளும் கட்சியான நவாஸ் ஷெரீப்பின் 'பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி' வெற்றிபெற்றுள்ளது. இரண்டாவது இடத்தை 'பாகிஸ்தான் மக்கள் கட்சி' பிடித்துள்ளது. 

Sponsored


கிருஷ்ணகுமாரிக்கு அவரின் குடும்பத்திலிருந்தே அரசியல் ஆர்வம்  ஏற்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்டத்திலேயே அவரின் குடும்பம் பங்கெடுத்துள்ளது. 1857-ம் ஆண்டில் நாகர்பாரிக்கர் பகுதியில் ஆங்கிலேயர்களை எதிர்த்து, கிருஷ்ணகுமாரியின் தாத்தா ரூப்லோ கோல் போராட்டம் நடத்தியுள்ளார். அதன் விளைவாக 1858-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு அவர் தூக்கிலிடப்பட்டார்.

பாகிஸ்தான் நாடாளுமன்ற செனட் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட பின்னர், அதுபற்றிக் கருத்துத் தெரிவித்த கிருஷ்ணகுமாரி, "நான் தேர்வு செய்யப்பட்டிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நான் இதை எதிர்பார்க்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து போராடுவேன். மருத்துவம் மற்றும் கல்விசார்ந்த விஷயங்களுக்கு எப்போதும் நான் குரல் கொடுப்பேன்" என்றார். 

கிருஷ்ணகுமாரி போலவே பாகிஸ்தானில் மேலும் பலருடைய கனவுகளும் நனவாக வாழ்த்துகள்....!Trending Articles

Sponsored