வேதியியலில் பி.ஹெச்.டி முடித்த முதல் பெண்... அணுசோதனைக்கு எதிரான குரல்..! #HappyBirthDayKatsukoSaruhashiSponsored``இங்கே பல பெண்களுக்கு மிகச்சிறந்த விஞ்ஞானிகளாகும் தகுதி இருக்கிறது. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப துறையில் ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் வேலை பார்க்கும் நாளை காண விரும்புகிறேன்” 

இன்று கூகுள் டூடுள் உருவாக்கியிருக்கும் ஜப்பானியப் பெண் விஞ்ஞானியான, கட்சுகோ சருஹாஷி (Katsuko Saruhashi) கூறிய வார்த்தைகள் இவை. இவரைப் பற்றி எங்கு தேடினாலும் இந்தப் பொன்மொழி இல்லாத கட்டுரைகளே இல்லை. பெண் விஞ்ஞானியாக மட்டுமன்றி, பல பெண் விஞ்ஞானிகள் உருவாகுவதில் பெரும் ஆர்வம் காட்டியவர் என்பதே, வரலாற்றில் அவரைத் தனித்துக்காட்டியது. இந்த மார்ச் 22, அவருடைய 98-வது பிறந்தநாள். 

Sponsored


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 1920-ம் ஆண்டு பிறந்தவர், கட்சுகோ சருஹாஷி. பள்ளி படித்துக்கொண்டிருந்தபோது, வகுப்பறை ஜன்னல் வழியாக மழைப் பொழிவை ரசித்த அனுபவமே, அறிவியல் மீது பெரும் ஆர்வம் ஏற்படக் காரணமாக அமைந்தது. கல்லூரிப் படிப்பை முடித்ததும், வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து, புவிவேதியியல் (Geochemistry) ஆய்வுக்கூடத்தில் பணிபுரிய ஆரம்பித்தார். 

Sponsored


1950-ம் ஆண்டு, கடல் நீரில் இருக்கும் கரியமில வாயுவின் (CO2) அளவு தொடர்பாக ஆராய்ச்சி செய்யலானார். அன்றைய காலத்தில், தண்ணீரில் இருக்கும் கரியமில வாயு அளவின் முக்கியத்துவம் குறித்து யாருக்கும் தெரியாது. அதனால், இதை அளப்பதற்காக ஒரு தனி முறையையே கண்டுபிடித்தார். அது, `சருஹாஷி டேபிள்’ (Sarohashi's Table) என்று குறிப்பிடப்பட்டது. தண்ணீரில் இருக்கும் கரியமில வாயுவின் அளவை அளப்பதற்கு, சர்வதேச தரம்கொண்ட முறையை உருவாக்கியது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 


PC: elpais.com

1957-ம் ஆண்டு, டோக்கியோ பல்கலைக்கழகத்தில், வேதியியலில் பி.எச்.டி வாங்கிய முதல் பெண்மணி என்ற பெருமைக்கும் சொந்தக்காரர், கட்சுகோ சருஹாஷி. ஜப்பானிய அறிவியல் மன்றத்தில் சேர்க்கப்பட்ட முதல் பெண் விஞ்ஞானியின் பெயரும் இவருடையதுதான். புவிவேதியியலுக்காக, மியாகே (Miyake) விருதுபெற்ற முதல் பெண்மணியும் இவர்தான். மியாகே என்பவர், புவிவேதியியலில் சருஹாஷியின் அறிவுரையாளர். அவரின் கீழ்தான், சருஹாஷி பல ஆய்வுகளை மேற்கொண்டார். பாலினப் பாகுபாடு அதிகமாக நிலவிய அன்றைய காலத்தில், ஆண்-பெண் வேறுபாடு பார்க்காமல், சருஹாஷியின் திறமையை மட்டுமே கருத்தில்கொண்டு, 1979-ம் ஆண்டில் அந்த ஆய்வுக்கூடத்தின் நிர்வாக இயக்குநரா நியமித்தார், மியாகே. 

சருஹாஷி செய்த மற்றொரு ஆராய்ச்சி முக்கியமானது. கடலில் அணு சோதனை நடத்துவதால் ஏற்படும் விளைவுகளைக் கண்டுபிடித்து, எந்த அளவுடன் சோதனைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற வரையறையை உருவாக்கினார். இந்த முறையையே அமெரிக்கா, சோவித் யூனியன் உள்பட பல நாடுகள் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

பெண் விஞ்ஞானிகள் பலரும் உருவாக வேண்டும் என்ற பெரும் ஆசை, கட்சுகோ சருஹாஷிக்கு உண்டு. `ஜப்பானிய பெண் விஞ்ஞானிகள் சமூகம்' என்ற அமைப்பை 1958-ம் ஆண்டில் உருவாக்கினார். இந்த அமைப்பின் மூலம் அறிவியல் தொடர்பாகப் பேசவது, விவாதிப்பது, செயல்முறை தீர்வுகளை உருவாக்குவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டார். வானிலை ஆராய்ச்சி ஆய்வுக்கூடத்தில் 35 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றதும், பெண் விஞ்ஞானிகளுக்காக, பிரைட் ஃபியூச்சர் ஆஃப் வுமன் சயின்டிஸ்ட் (Bright Future of Women Scientists) என்ற அமைப்பையும் உருவாக்கினார். சருஹாஷியின் லட்சியத்துக்கு மதிப்பு அளிக்கும் வகையில், 1981-ம் ஆண்டிலிருந்து, சிறந்த ஜப்பானிய பெண் ஆராய்ச்சியாளருக்கு, `சருஹாஷி விருது' வழங்கப்பட்டு வருகிறது. 

2007-ம் ஆண்டு, நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் சருஹாஷி. அறிவியலையும் ஆராய்ச்சியையும் அவர் எந்த அளவுக்குக் காதலித்தார் என்பதை அறிய, ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசிய இந்த வரிகளைப் படித்தால் போதும். ``நான் கடினமாக உழைத்தேன். அறிவியலில் எப்படி இயங்க வேண்டும் என்பதைத்தான் நான் முழு நேரமும் கற்றுக்கொண்டிருந்தேன். ஆனால், இதனை ஆணுக்குப் போட்டியாகச் செய்யவில்லை. எனக்குத் தெரியும். கடினமாக உழைப்பதன் மூலம் இயற்கையின் ரகசியங்களைக் கட்டவிழ்க்க முடியும். அது மிகவும் குதூகலமாக இருக்கும். ஓர் ஆராய்ச்சியாளராக அந்த மகிழ்ச்சியை நான் கொண்டாடுகிறேன்.”Trending Articles

Sponsored