"அம்மா ஏன் அதை எனக்குச் செய்தார்?” - பெண்ணுறுப்புச் சிதைப்பின் பல வலிகள் ஒரு மேடையில்...!Sponsored`உலகில் வாழ்ந்துவரும் பெண்களில் 200 மில்லியன் பெண்களுக்கும் மேலானோர் பெண்ணுறுப்புச் சிதைப்பால் (Female genital Mutilation) பாதிக்கப்பட்டவர்கள்' என்கிறது யுனிசெஃப் அமைப்பு. பெண்ணுறுப்புச் சிதைவு என்றால் என்னவென்று கேட்கிறீர்களா?

பெண்ணுறுப்பை பிளேடாலோ, கூர்மையான சிறு ஆயுதங்களாலோ வெட்டி எடுக்கும் கோர நடைமுறை. பெண்ணுறுப்பிலிருந்து மாதவிடாய் வெளியேறும் அளவுக்கு, சிறு துவாரத்தை மட்டும் விட்டுவிட்டு, மற்ற பகுதிகளைத் தைத்து மூடிவிடும் கொடுமை அது. ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக நடக்கும் இந்தச் சடங்கு, பெண்களை புனிதர்களாக, திருமணத்துக்கு முன்பு உறவில் ஈடுபட அஞ்சுபவர்களாக வைத்திருக்கச் செய்யப்படும் சித்ரவதை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த வழக்கம் அங்கே பின்பற்றப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான இந்த வன்கொடுமையை முற்றிலும் தடைசெய்யும் நோக்கில், ஆப்பிரிக்க நாடுகளுக்கு பலமுறை அழுத்தம் கொடுத்தது ஐக்கிய நாடுகள் சபை. சமூக மாற்றமும் பெண் கல்வியும் இத்தகைய முட்டாள்தனங்களுக்கு எதிரான மனோபாவத்தை ஏற்படுத்தியிருந்தாலும், பழங்குடி மக்களிடமும், அப்பழுக்கற்றப் புனிதத்தை நம்பும் சில குழுக்களிடமும் இந்த வழக்கத்தை முற்றிலுமாக தடைசெய்துவிட முடியவில்லை என ஒப்புக்கொண்டுள்ளது ஐ.நா.

Sponsored


Sponsored


இந்தியாவிலும் சில பகுதிகளில் பெண்ணுறுப்புச் சிதைப்புச் சம்பவங்கள் நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது. பாகிஸ்தான், இந்தியா, ஏமன், கிழக்கு ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் மேற்கு பகுதிகளில் வாழும் தாவூதி போஹ்ரா சமூகத்தைச் சேர்ந்தவர்களிடமும், சில ஆசிய பழங்குடி மக்களிடமும் பெண்ணுறுப்புச் சிதைப்புத் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்திவருகிறது சஹியோ தன்னார்வ அமைப்பு. கதை சொல்லும் நிகழ்வை மும்பையில் ஒருங்கிணைத்து, பெண்ணுறுப்புச் சிதைவால் பாதிக்கப்பட்ட நான்கு பெண்களின் கதையை, நடிகர்களைக்கொண்டு உலகத்துக்குச் சொல்லவைத்திருக்கிறது சஹியோ. சோபிதா துலிப்பாலா, ரசிகா டுக்கல், ப்ளாபிதா போர்தாக்கூர், டாலி தாக்கரே எனும் நான்கு நடிகர்கள், பாதிக்கப்பட்ட பெண்களின் வலியை தங்கள் குரலில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

பெண்ணுறுப்புச் சிதைப்புக் கொடுங்கதைகளை, நடிகர்களின் குரல்களால் சொல்லவைத்து, கூடுதல் டெசிபலில் கேட்கவைத்திருக்கிறது சஹியோ அமைப்பு. ஒரு முக்கியத்துவம் வாய்ந்த, வலிமிகுந்த கதை இங்கே...

`எனது பெயர் இன்சியா. நான், படித்தவர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவள். என் சகோதரர்களைப்போலவே என் குடும்பத்தில் எனக்கு எல்லா உரிமைகளும் இருந்தன. என்னையும் அவர்களுக்கு இணையாகவே படிக்கவைத்தனர். மகளாக இருந்தாலும் மகனாகவே கொண்டாடப்பட்டேன். எனது குடும்பமும், எங்கள் சமூகமும் இறுகிப் பின்னப்பட்ட ஒன்று. குடும்பத்தில் இருந்த மற்றவர்களின் வலியுறுத்தலாலும் அழுத்தத்தாலும் அம்மா அந்த முடிவை எடுத்திருந்தார். `கட்னா’ என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? ஏழு வயதில் கட்னா என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால், கட்னாவால் எனக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியும். எனக்கு அந்த நாள் மிகத் தெளிவாக நினைவில் இருக்கிறது.

புனேவில் இருக்கும் அழுக்கான ஒரு கட்டடத்துக்குப் போயிருந்தோம். அங்கு ஏன் வந்திருக்கிறோம் என்ற குழப்பத்தில் எல்லோரையும் பார்த்து மிரண்டுபோயிருந்தேன். அங்கே ஒரு ஆன்ட்டி நின்றுகொண்டிருந்தார். அவர் யாரென எனக்குத் தெரியவில்லை. பதற்றமடைந்த என்னை, என் அம்மா தேற்றினார். பெட்ஷீட் மட்டும் விரிக்கப்பட்ட ஓர் அறையில் என்னை அழைத்துபோனார்கள். அந்த அறையின் வெறுமையை நான் உணர்வதற்கு முன்பே, எனது உள்ளாடைகளைக் கழற்றிவிட்டு படுக்கச் சொன்னார்கள். என் தனிப்பட்ட உடல் பகுதிகளை யாரும் தொடக் கூடாது என்று அம்மாதானே எனக்குச் சொல்லித்தந்தார்!

நான் அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். எனது கைகளையும் கால்களையும், அம்மாவும் பாட்டியும் அழுத்திப் பிடித்துக்கொண்டார்கள். `எனக்கு ஏன் இதைச் செய்கிறீர்கள்?' என்று கத்தினேன். ஐந்து நிமிடம் கழித்து என் உள்ளாடைகளை அணிந்துகொள்ளுமாறு சொன்னார்கள். அந்த ஆன்ட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு திரும்பிவரும் வழியில், எனக்கு பலூன்கள் வாங்கிக் கொடுத்தார் என் அம்மா. என் அப்பாவுக்கோ, என் சகோதரர்களுக்கோ இது தெரியக் கூடாது எனச் சொன்னார் என் அம்மா. பதில் கிடைக்காத பல கேள்விகளும், அழுத்தமும், மன உளைச்சலும் இன்னும் என்னைத் துரத்திக்கொண்டிருக்கின்றன.

தனிப்பட்ட இடங்களைத் தொடுவது வன்முறை. குழந்தைகளுக்கு நடக்கும் வன்கொடுமை... அப்படித்தானே! ஆனால், என் அம்மா ஏன் அதை எனக்குச் செய்தார்? அந்தச் சம்பவத்துக்குப் பிறகு நடந்த விஷயங்கள் எனக்கு நினைவில் இல்லை. மீள முடியாத துயரத்துக்கு நான் போவேனென்று என் அம்மாவுக்குத் தெரியவில்லையா! காலத்துக்கும் வருந்தவேண்டிய முடிவை ஏன் அவர் எடுத்தார்? இன்னும் ஒரு பெரிய கேள்வி இருக்கிறது... `அவர்கள் எதை வெட்டி எடுத்தார்கள்?' என்று கண்ணீருடன், தொண்டை அடைத்து நின்றபடி பெருமூச்சை வெளியேற்றி படித்து முடித்தார் நடிகர் சோபிதா துலிப்பாலா.Trending Articles

Sponsored