5 ஸ்டார் ஹோட்டலில்கூட பேப்பர் பிளேட்... தண்ணீர்ப் பிரச்னையை சமாளிக்குமா தென்னாப்பிரிக்கா?Sponsoredதண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். தண்ணீரை அதிகம் வீணாக்கக்கூடாது என ஐந்து மார்க் கேள்விக்கும் பத்து மார்க் கேள்விக்கும் பள்ளி நாள்களில் மாய்ந்து மாய்ந்து பதில் எழுதியிருப்போம். ஆனால், நிஜ வாழ்க்கையில் நேர் எதிராகத்தான் தண்ணீரைப் பயன்படுத்துவோம். தண்ணீரைப் பற்றிய விழிப்பு உணர்வையோ அதன் முக்கியத்துவத்தையோ அரசு மக்களிடையே பெரிதாக பரப்புவதில்லை. அதன்பின் இருக்கும் உலகளாவிய அரசியல் அப்படி...

அரசும் மக்களும் சேர்ந்தால் தண்ணீரைப் பற்றிய அறிவையும் விழிப்பு உணர்வையும் நாடு முழுக்க ஏற்படுத்த முடியும். அதற்கான பலன்களையும் பெற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது தென்னாப்பிரிக்கா. ஆனால், நிலத்திலும் கையிலும் ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லாமல் போகும் என்ற நிலை வந்த பின்னர்தான் இந்தச் சிக்கன நடவடிக்கையும் தண்ணீரைப் பற்றிய விழிப்பு உணர்வும். கடந்த சில மாதங்களாக கேப்டவுனையும் டே ஜீரோவையும் பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்போம். வரும் ஜூன் மாதத்தில் 'டே ஜீரோ' எனப்படும் தண்ணீரே இல்லாத, ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லாத சூழல் ஏற்பட்டுவிடும் என்பதால், அதைச் சமாளிக்கும்விதமாக பல்வேறு முயற்சிகளை அந்நாட்டு அரசும் மக்களும் எடுத்து வருகிறார்கள். 

இந்தத் தண்ணீர்ப் பற்றாக்குறை பிரச்னை இப்போது திடீரென நிகழ்ந்தது இல்லை. கேப்டவுனுக்குப் பல காலமாக உயிர் ஆதாரமாக இருந்த தீவாட்டர்ஸ்க்லூஃப் (Theewaterskloof) அணை 10%க்கும் குறைவான நிலையை எட்டியது. நகருக்குத் தண்ணீர் வழங்கக் கூடிய வாய்ப்பைக் கொண்டிருக்கும் இன்னும் சில அணைகளும் 15% வந்துவிட்டன. கடந்த மூன்று வருடங்களாக படிப்படியாக உருவான இந்தப் பிரச்னை, அதனைக் கண்டுகொள்ளாததின் விளைவை இப்போது காட்டியுள்ளது. 2015-ம் ஆண்டிலேயே தென்னாப்பிரிக்காவின் முக்கியமான சமையற்கலை நிபுணரான லுக் டேல் ராபர்ட்ஸ் சாதாரண தட்டுக்களுக்குப் பதிலாக சுற்றுச்சுழலுக்கு உகந்த மறுசுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய தட்டுக்களை ஹோட்டல்களில் அறிமுகப்படுத்தினார். இதனால் தினமும் ஒரு ஹோட்டலில் 5000 தட்டுக்கள் கழுவ வேண்டிய தண்ணீர் சேமிக்கப்பட்டது. இப்படியான நீர் சிக்கன முன்னெடுப்புகளை இப்போது எல்லோரும் முன்னெடுத்திருக்கிறார்கள். 

Sponsored


Sponsored


தென்னாப்பிரிக்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடமும் தண்ணீரைப் பற்றிய தெளிவையும் தண்ணீரின் சிக்கனத்தையும் எடுத்துரைக்கிறார்கள். தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிடக்கூடாது என முனைப்புக் காட்டுகிறது அரசு. அதேநேரத்தில் நகரின் நீரியல் நிலைமையையும் ஆனால், அதனை எளிதாகச் சமாளித்துவிடலாம் என்றும் நம்பிக்கை ஊட்டுகின்றனர். தென்னாப்பிரிக்க சுற்றுலாத்துறையின் இணையத்திலேயே இதற்கான குறிப்புகளையும் கொடுத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் எப்படியெல்லாம் செயல்பட்டால் உள்நாட்டுக் குடிமகன்களைவிட அதிக நீரை உங்களால் சேமிக்க முடியும் எனச் சுற்றுலாப் பயணிகளுக்கு டிப்ஸ்களையும் வழங்குகின்றனர். அப்படிச் செயல்படும் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பதோடு சலுகைகளையும் வழங்குகின்றனர். 

தென்னாப்பிரிக்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான இடங்களை தங்குவதற்குத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதேபோன்று கேப்டவுன் நகரிலும் தென்னாப்பிரிக்காவின் மற்ற நகரங்களில் உள்ள ஹோட்டல்களும் நீரியல் சிக்கனங்களை முன்னெடுக்கிறார்கள். கழிவறைகளில் கொஞ்சமாக ஃப்ளஷ் பயன்படுத்துதல், பல் துலக்கும்போது பைப்பை திறக்காமல் இருத்தல், 90 விநாடிகளுக்கு மேல் ஷவரை பயன்படுத்தாமல் இருத்தல், ஒவ்வொரு துணியாகத் துவைக்காமல் மொத்தமாகத் துணி சேர்ந்தபின் துவைத்தல், ஒரே டவலைப் பயன்படுத்துதல் போன்ற நிபந்தனைகளைச் சுற்றுலாப் பயணிகளிடம் எடுத்துரைக்கிறார்கள். மேலும், வாட்டர்பாட்டில்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல் போன்றவற்றைச் செய்யும் பயணிகளுக்கு சலுகைகளைத் தருகின்றனர். 

இதுமட்டுமில்லாமல் ஏசியில் வெளியாகும்நீர், பிரிட்ஜ் போன்ற சாதனங்களில் இருந்து வெளிவரும் நீர் போன்ற கழிவுநீர்களை மறுசுழற்சி செய்து மீண்டும் தரையைத் துடைத்தல் போன்றவற்றுக்குப் பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமில்லாமல் சுற்றுலாப் பயணிகளின் அனுமதியோடு சமையலுக்கும் அதைப் பயன்படுத்துகின்றனர். யாரும் பெரிதாக மறுப்புத் தெரிவிப்பதில்லை என்கின்றனர். 

இத்தகைய முன்னெடுப்புகளை 'நீர் சிக்கன சுற்றுலா' என்று அழைக்கின்றனர். ஏற்கெனவே பல சூழலியாளர்கள் இதுபற்றி கூறியிருந்தாலும் நடைமுறைப்படுத்துவது இதுவே முதல்முறை. தென்னாப்பிரிக்காவானது சுற்றுலாவைப் பெரிதும் நம்பியுள்ள நாடு. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.1% சுற்றுலாவால் கிடைக்கும் வருமானம். ஆண்டுக்கு 3,20,000 வேலைவாய்ப்புகள் சுற்றுலாப் பயணிகளால் உருவாகிறது. மேலும், அவர்களது தண்ணீர்த் தேவை 1% ஆகத்தான் இருக்கிறது. எனவே, தென்னாப்பிரிக்காவின் நிலைமையைச் சமாளிக்க சுற்றுலாவானது குறையாமல் இருக்க வேண்டும். அவர்களும் தென்னாப்பிரிக்காவில் இன்னும் சுற்றுலா இருக்கிறது என விளம்பரப்படுத்தி வருகின்றனர். இத்தகைய நீர் சிக்கன முன்னெடுப்புகள் மூலம் நீரின் தேவையை 1.2 பில்லியன் லிட்டரிலிருந்து 515 மில்லியன் லிட்டராகக் குறைத்துள்ளனர். 4,50,000 லிட்டராக நீரின் தேவையைக் குறைப்பதே இலக்காக வைத்துச் செயல்படுகின்றனர். 

நீரின் வளம் குறையும்போது அமைதியாக இருந்த அரசு அது உட்சபட்ச நிலையை எட்டியபிறகே நெருக்கடி நிலையில் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. நீர் சிக்கனம் குறித்தும் நீர் குறித்த தெளிவையும் தனது நாட்டின் குடிமக்களுக்கு ஒவ்வொரு அரசும் ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு அரசும் மக்களும் இந்த நெருக்கடி நிலையைச் சந்திக்கும் சூழல் வெகுதொலைவில் இல்லை. ஏனென்றால் சுற்றுச்சூழலுக்கு நாம் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் அவ்வளவு அதிகம்.Trending Articles

Sponsored