சிரிய மக்களை பலி வாங்கிய 'சரின்' தாக்குதல்... ரசாயன வீச்சில் சீரழியும் சிரியா!Sponsored'சிரியாவில் உள்ள எண்ணெய் வளத்தைக் கையில் எடுத்து, வல்லரசுக்கெல்லாம் வல்லரசாக துடிக்கிறது' என அமெரிக்காவின் மீது பெரும் குற்றச்சாட்டு இருந்துவருகிறது. இது ஒருபுறமிருக்க... மறுபுறம், அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது, அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான சிரியா அரசு. இதை ரஷ்யப் பேரரசும் ஆதரித்து வருகிறது. 

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்துக்கும் நடக்கும் போரில் அப்பாவி பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் ஈவுஇரக்கமின்றிக் கொல்லப்பட்டு வருகின்றனர். ராணுவத்தினர் கிளர்ச்சியாளர்கள் யார்... பொதுமக்கள் யார் என்றெல்லாம் பார்ப்பதில்லை. மனிதர்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில் பீரங்கிக் குண்டுகள், ரசாயன ஆயுதங்கள் மூலம் கடுமையான தாக்குதல் நடத்தப்படுகிறது. இப்படிக் கொடூரத்தின் உச்சத்தில் இருக்கிறது சிரியா. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று சிரிய அரசு டமாஸ்கஸில் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Sponsored


கடந்த ஏப்ரல் 6-ம் தேதி சிரிய அரசு, கிளர்ச்சியாளர்களை அடக்க சிரியத் தலைநகர் டமாஸ்கஸில் ரசாயனங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 42 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 300-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர் என்றும் அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகப் பலர் மூச்சுவிட முடியாமல் திணறிவருவதாகவும், இன்னும் சிலர் வாயில் நுரை தள்ளியபடியும், கண்ணெரிச்சலுடனும் அவஸ்தைப்படுவதாகவும் அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களுக்குப் போதிய மருத்துவ வசதிகள் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.   

Sponsoredஇந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோர், ``எங்கள்மீது பயங்கர குளோரின் நாற்றமடிக்கும் ரசாயனத்தை அரசு ஹெலிகாப்டர்கள் வீசின'' என்று கூறியுள்ளனர். இதுகுறித்து ஐ.நா. சபையின் முன்னாள் ஆயுத ஆய்வாளர் ஜெர்ரி ஸ்மித், ``இதற்குமுன் சிரியாவில் நடந்த ரசாயனத் தாக்குதல்களில் மக்களின் பலி எண்ணிக்கை, மக்கள் இறந்த வேகம், அவர்களுக்கு வந்த வலிப்பு நோய் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்ததில், இது கொடிய ரசாயனம் ஒன்றால் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அது, ஆர்கானோபாஸ்பேட்டாக இருக்கலாம்'' என்று தெரிவித்திருக்கிறார். ``ஆட்சியாளர்கள் சரின்னையும் குளோரின்னையும் கலந்த மிகப்பெரும் வீரியமுடைய உயிர்க்கொல்லியான ரசாயனத்தைத் தாக்குதலில் பயன்படுத்தியுள்ளனர்'' என ஐரோப்பிய உளவுத்துறை சேகரித்த ஆவணங்கள் கூறுகின்றன.

கடந்த ஆகஸ்ட் 2013-ல் டமாஸ்கஸில் நடத்தப்பட்ட தாக்குதலின்போதும், ஏப்ரல் 2017-ல் கான் ஷெய்கவுனில் நடத்தப்பட்ட தாக்குதலின்போதும் சிரிய அரசு தொடர்ந்து, `சரின்' என்கிற ரசாயனத்தைப் பயன்படுத்தியிருக்கிறது. இதனால், ஆகஸ்ட் 2013-இல் நடத்தப்பட்ட தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,400. இந்த ரசாயனத்தை அதிகமாகப் பிரயோகித்ததால்தான் இவ்வளவு உயிர்ப் பலிகள் ஏற்பட்டன என்று விசாரணையில் தெரியவந்தது. 

 இந்த நிலையில், தற்போது சிரிய அரசு தாக்குதல் நடத்துவது குறித்து பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன்-வெஸ் லெ ட்ரியன், ``சிரிய அரசு டோமாவில் இப்படியொரு தாக்குதல் நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவது போர்க்குற்றமாகும். ஒரு சர்வதேச அளவிலான அத்துமீறல், ஒரு குடியரசு நாடாகப் பிரான்ஸ் ரசாயனத் தாக்குதல்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல்கொடுக்கும்" என்றார்.  

இந்த நிலையில், சிரிய அரசின் ரசாயனத் தாக்குதலையும், அதன்பின் இருக்கும் ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இதுகுறித்து அவர், ``சிரியா அரசு நடத்தும் ரசாயனத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் எனப் பலரும்  பலியாகியுள்ளனர். இது, ஓர் அறிவுகெட்ட கொடூரத் தாக்குதல். டோமாவில் நடக்கும் கொடூரங்கள் யாரும் அறியக்கூடாது என்பதற்காகச் சிரிய ராணுவத்தால் முற்றுகையிடப்பட்டுள்ளது. சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத் என்ற மிருகத்தை ஆதரிக்கும் ரஷ்யாவும், அதன் அதிபரும், ராணுவத்தினரும் மட்டுமே இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு மிகப்பெரும் விளைவை இவர்கள் எல்லோரும் சந்திக்க வேண்டியுள்ளது. டோமாவில் என்ன நடக்கிறது என்பது தெரிய வேண்டும், மருத்துவக் குழு சென்று சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட வேண்டும்” என்றார். 

டமாஸ்கஸில் மீதமுள்ள கிளர்ச்சியாளர்களை விரட்ட சிரிய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை மிகவும் மனிதத்தன்மையற்றது. மக்கள் மீது போர் தொடுப்பதே மனிதாபிமானமற்றச் செயலாக இருக்கும்போது, இரக்கமற்ற முறையில் கொத்துக் கொத்தாகப் பலியாகும் பிஞ்சு உயிர்கள் மற்றும் அப்பாவி மக்களின் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.Trending Articles

Sponsored