அமெரிக்காவுக்குத் தண்ணி காட்டிய தீவு... வழிநடத்தபோகும் காஸ்ட்ரோ சகோதரர்கள் அல்லாத ஒருவர்!Sponsoredகியூபாவில் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் காஸ்ட்ரோ சகோதரர்கள் (பிடல், ராவுல்) அல்லாத ஒருவர், அந்நாட்டின் அதிபர் பொறுப்பை ஏற்கவுள்ளார். 1492- ம் ஆண்டின் முடிவில் கொலம்பஸ் கண்டறிந்த தீவான கியூபா, 16- ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்பெயினின் ஆதிக்கத்துக்கு உள்ளானது. கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகள் கியூபாவைச் சுரண்டியது ஸ்பெயின். பின்னர் 19- ம் நூற்றாண்டின் கடைசியில் கியூபாவை அமெரிக்கா கைப்பற்றியது. 

யுனைடெட் ஃப்ரூட் கம்பெனி, பேருக்கேற்றாற் போல வெறும் வாழைப்பழம் ஏற்றுமதி செய்யும் கம்பெனி மட்டுமல்ல; ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்க நாடுகளின் வளங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்த கம்பெனி. பிரேசில், சிலி, கௌதமாலா, அர்ஜென்டினா என இந்தப் பழ நிறுவனம் கால்பதிக்கும் இடமெல்லாம் அமெரிக்காவின் பிடிக்குள் சிக்கியது. இதில், சொர்க்க பூமியாகக் கிடைக்கப்பெற்ற கியூபாவின் நிலங்கள் சூறையாடப்பட்டன. ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஒன்று அல்லது இரண்டு டாலர் என்று சொற்ப விலை நிர்ணயம் செய்து கியூபாவின் நிலவளங்களைக் கபளீகரம் செய்தனர்.

Sponsored


'கியூபாவை நேரடியாகச் சுரண்ட வேண்டாம்' என்று நினைத்த அமெரிக்கா, 1902-ம் ஆண்டு மே 20-ல், கியூபாவைச் சுதந்திர நாடாக அறிவித்தது. கைப்பாவையாக ஓர் அரசை அமைத்து யுனைடெட் ஃப்ரூட் கம்பெனி மூலம் அதனை இயக்கியதுடன், அந்நாட்டின் வளங்களைச் சுரண்டியது. இப்படியாக கியூபாவை வளைத்ததன் மூலம் ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்காவையும் தன்வசப்படுத்தும் நோக்கில் செயல்பட்டுவந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கண்களுக்குள் விரலை விட்டு ஆட்டியவர் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ. 1959-ல், அமெரிக்காவின் கைக்கூலியாக இருந்த பாடிஸ்டா ஆட்சியைக் கவிழ்த்தது ஃபிடல் மற்றும் சேகுவேரா தலைமை தாங்கிய கியூபா புரட்சி. இந்தப் புரட்சி நடந்த 1959- ம் ஆண்டிலிருந்து 2008- ம் ஆண்டுவரை ஃபிடல் காஸ்ட்ரோவே கியூபாவை ஆட்சி செய்தார். பின்னர் 2008 முதல், ஃபிடல் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ ஆட்சி செய்தார். இந்நிலையில், கியூபாவில் நடைபெற்ற ஜனநாயகத் தேர்தலில், மிகெல் டயஸ் கேனல் அந்த நாட்டின்  புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Sponsored


யார் இந்த மிகெல் டயஸ்?

கியூபா புரட்சிக்குப் பின்னர் பிறந்த இவருக்கு ஏப்ரல் 20-ம் தேதியன்று 58 வயதாகிறது. 1993- ம் ஆண்டில் தன் 33-வது வயதில் கியூபா கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். 1994-ல் வில்லா கிளாரா மாகாணத்தின் அரசாங்கச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கபட்டார். பின்னர் 2003-ல் ஹோல்குயின் மாகாணத்தின் அரசாங்கச் செயலாளராகப் பதவி வகித்தார். மாகாணத்தின் அரசாங்கச் செயலாளர் என்றால் மாகாண ஆளுநர் பதவிக்குச் சமம். 2009- ம் ஆண்டு மே மாதம் முதல் 2012- ம் ஆண்டு மார்ச் மாதம் வரை உயர் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு கியூபாவின் துணை அதிபரானார். இதுதான் மிகெல் டயஸ் கடந்து வந்த பாதை.

மக்கள் பலம் கொண்ட ஃபிடல்:-

அமெரிக்காவின் கோரப்பிடியில், வல்லாதிக்க வெறியில் சிக்கி இன்றைய நாள்வரை மீளமுடியாமல் இருக்கும் நாடுகள் பல. ஆனால், அமெரிக்காவை விட பரப்பளவில் 90 மடங்கு சிறிய நாடான கியூபா, அமெரிக்காவிலிருந்து வெறும் 90 கடல் மைல் தூரத்தில்தான் இருக்கிறதென்றாலும், கடந்த 60 ஆண்டுகளாக, கியூபாவின் சுண்டுவிரலைக் கூட அமெரிக்காவால் தொடமுடியவில்லை. இதற்குக் காரணம் ஃபிடல் காஸ்ட்ரோ மட்டுமே. தனியொரு ஆளாக நின்று அமெரிக்காவை எதிர்த்திருந்தால் இத்தனை ஆண்டுகள் அமெரிக்காவுக்கு ஃபிடல் தண்ணி காட்டியிருக்க முடியாது. அவரின் பலமே மக்கள்தான். நாட்டின் கொள்கை இதுதான். நாடு எப்படிப்பட்ட அடிமைத்தனத்திலிருந்து சிக்கி மீண்டிருக்கிறது, இதனை எப்படிக் காத்துக்கொள்ள வேண்டும் என்று மக்களுக்குச் சொல்லிச் சொல்லி போராட்டங்களில் மக்களையும் இணைத்துக் கொண்டார். மக்களின் ஒன்றுதிரண்ட சக்தியை எவராலும் வீழ்த்த முடியாது என்பதே காஸ்ட்ரோவின் எண்ணம். இதுதான் அவரின் வெற்றிக்குக் காரணம். கியூபா புரட்சிக்குப் பின்னர் அமெரிக்கா, அந்நாட்டை சும்மாவா விட்டுவைக்கும்?

புரட்சிக்குப் பின்னர் ஃபிடலால் வந்த மாற்றம் என்ன?

காஸ்ட்ரோ செய்த வேளாண் சீர்திருத்தம் முதலாளித்துவ பிடிகளிலிருந்த கியூபாவை விவசாயிகளின் நாடாக மாற்றியது. `யாராக இருந்தாலும் 993 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கக் கூடாது', `வெளிநாட்டினர் கியூபாவில் நிலம் வைத்திருக்கத் தடை' என ஆரம்பத்தில் அவர் கையெழுத்திட்ட இவ்விரண்டு சட்டம்தான் அந்த நாட்டின் விடிவெள்ளியானது. இலவசக் கல்வி கொடுத்தார், இலவச மருத்துவம் கொடுத்தார். இதுதான் இன்றுவரை பல வளர்ந்த நாடுகளை விடவும் கியூபா, கல்வியறிவில் முன்னணி நாடாக இருக்கக் காரணம். முதலாளித்துவம் அடிபட்டுப்போன நிலையில், நாடு கம்யூனிசக் கொள்கையைத் தழுவுவதாக அறிவித்தார் காஸ்ட்ரோ.  எண்ணற்ற குடைச்சல்களை கியூபாவுக்குத் தர ஆரம்பித்தது அமெரிக்கா. 1960-ல் நடந்த ஐ.நா. மாநாட்டில் கலந்துகொள்ளவிடாமல், தங்க இடம் தராமல் கொடுமை செய்தது. அதையும் மீறி ஐ.நா-வில் கியூபாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார் வெற்றிகரமாக. கியூபாவை அடக்க 1962-ல் பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா. அமெரிக்காவுக்கு ஆகாத நாடென்பதால் சோவியத் யூனியன் கியூபாவுக்குக் கரம்கொடுத்தது.

ஃபிடலைக் கொல்ல சி.ஐ.ஏ இதுவரை 638 முறை முயற்சி செய்தும் தோல்வியடைந்தது. எல்லாக் கொலை முயற்சியையும் முறியடித்தார் காஸ்ட்ரோ. 1994-ல் எரிபொருள் பற்றாக்குறையினால் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டன. வேறு ஏதாவது நாடாக இருந்திருந்தால் படுத்த படுக்கையாகச் சுருண்டிருக்கும். ஆனால், மக்கள் ஒத்துழைப்பால் மீண்டெழுந்தது கியூபா. 2001- ம் ஆண்டு கியூபாவைச் சூறாவளித் தாக்கியபோது, பல்வேறு நாடுகள் அந்நாட்டிற்கு உதவி செய்தபோதிலும், `மருந்து மற்றும் உணவுப் பொருள்கள் தரமாட்டேன்' என மனிதநேயமற்ற முறையில் நடந்துகொண்டது அமெரிக்கா. கடும் எதிர்ப்புக்குப் பின்னர் பிடியைத் தளர்த்தியது அமெரிக்கா. எந்தத் தொல்லையைப் பற்றிக் கவலைப்படாமல், அமெரிக்காவுக்கு அவ்வப்போது ஃபிடல் பதிலடி கொடுத்து வந்தார்.

ஃபிடலின் வழி நடப்பாரா மிகெல்?

உலக நாடுகள் பலவற்றை அமெரிக்கா தன் சட்டைப்பைக்குள் போட்டாலும் கியூபா என்ற ஒற்றைத் தீவை அமெரிக்காவால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்படிப்பட்ட வளமிக்க நாடாக கியூபாவை உயர்த்திய காஸ்ட்ரோ சகோதரர்கள் அல்லாத ஒருவர் தங்களை ஆளப்போகிறார் என்பதை ஏற்றுக்கொள்ள கியூபா மக்களுக்குச் சில நாள்களாகலாம். ஒரு மனதாக அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ள மிகெல் டயஸ், காஸ்ட்ரோவின் கொள்கைகளை, சீர்திருத்தங்களைத் தொடர்ந்து தாங்கிப்பிடிப்பாரா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்....Trending Articles

Sponsored