6 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதித்த ஆட்சிக்கு முடிவுரை எழுதிய மலேசியா மக்கள்!



வெறும் 6  சதவிகித ஜி.எஸ்.டி வரி விதித்த நஜீப் ரஸாக் அரசை, மலேசிய மக்கள் ஆட்சிக் கட்டிலிலிருந்து அகற்றியுள்ளனர். 92 வயதுடைய மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர், அபார வெற்றி பெற்று மீண்டும் அரியணை ஏறியுள்ளார். 

Sponsored


கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மலேசியாவில் நஜீப் ரஸாக் இரண்டாவது முறையாக பிரதமர் ஆனார். இவரின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, மலேசியாவின் 14-வது பொதுதேர்தல் மே 8-ம் தேதி நடைபெற்றது. நஜீப் தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணிக்கும் (பரிஸான் நேஷனல்) 15 ஆண்டுகாலத்துக்குப் பிறகு மீண்டும் அரசியலுக்குள் நுழைந்த மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீரின் நம்பிக்கை கூட்டணிக்குமிடையே (பக்காத்தான் ஹராப்பான்) தேர்தலில் கடும் போட்டி நிலவியது. பிரதமர் நஜீப்பின் ஆட்சியை அகற்றிவிட வேண்டும் என்பதற்காக மீண்டும் கங்கணம் கட்டிக்கொண்டு களம் இறங்கினார் மகாதீர். இதற்காக யாருடனும் சமரசம் செய்துகொள்ள தயாராக இருந்தார். 

Sponsored


பாலியல் குற்றச்சாட்டில் சிறை தண்டனை பெற்ற  மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்ராஹீமும் மகாதீரும் மலேசிய அரசியலில் கீரியும் பாம்பும் போன்றோர். 1998-ம் ஆண்டு மலேசிய துணைப் பிரதமராக இருந்த அன்வரை, பிரதமராக இருந்த மகாதீர் பதவிநீக்கம் செய்ததுடன் சிறையிலும் அடைத்தார். அதிலிருந்தே இருவருக்கும் ஆகாது. மகாதீர் என்ன செய்தாலும் அதை அன்வர் எதிர்ப்பார். இருப்பினும் பழைய பகையை மறந்து, பொது எதிரியான நஜீப்பை வீழ்த்த மகாதீரும் அன்வரும் கரம் கோத்தனர். 

Sponsored


அன்வருக்கு தற்போது  தோள்பட்டையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக கோலாலம்பூர் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவருகிறார். தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக அன்வர், `மலேசிய மக்களே இந்தத் தேர்தலில் மாகாதீருக்கு வாக்களித்து மாற்றத்தை விதையுங்கள்' என்று அறிக்கை வாயிலாக வேண்டுகோள்விடுத்தார். அன்வரின் கடைசிகட்ட வார்த்தைகள், நஜீப் ரஸாக் கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. 

மலேசிய வரலாற்றில் மிகக் கடுமையான தேர்தலாக இது பார்க்கப்பட்டது. தேர்தல் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க, இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளிலிருந்து தேர்தல் ஆணையர்களை மலேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் அகமத் ஷெரீப் அழைத்திருந்தார். அதை ஏற்று, பல நாட்டுத் தேர்தல் ஆணையர்களும் மலேசியாவுக்கு வந்திருந்தனர். பலத்த பாதுகாப்புடனும் கண்காணிப்புடனும் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுதான் மலேசியாவில் அரசியல் பூகம்பத்தையே ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் மகாதீர் வெற்றிபெற்று, மீண்டும் மலேசிய பிரதமராகியுள்ளார். மலேசியாவில் ஆட்சி அமைக்க மொத்தமுள்ள 222 தொகுதிகளில் 112-ல் வெற்றி பெற வேண்டும். மகாதீரின் நம்பிக்கை கூட்டணிக்கு 121 தொகுதிகள் கிடைத்தன. நஜீப் ரஸாக் கட்சிக்கு 79 இடங்களே கிடைத்தன. கடந்த தேர்தலில் நஜீப் கட்சி 133 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. 

92 வயதில் பிரதமராகி உலக மக்களை வியக்கவைத்த மகாதீர், 1925-ம் ஆண்டு பிறந்தவர். 1946-ம் ஆண்டு 21 வயதிலேயே அரசியலுக்குள் நுழைந்தார். சுமார் 70 ஆண்டுகள் அரசியல் அனுபவம் உள்ள மகாதீர், இதற்கு முன் 1981-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை சுமார் 22 ஆண்டுகள் மலேசியாவை ஆட்சிசெய்துள்ளார். மலேசிய வரலாற்றில் நீண்டகாலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமைகொண்ட மகாதீர், இப்போது உலகிலேயே அதிக வயதில் பிரதமரானவர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

இதற்கு முன்னர் பரிஸான் நேஷனல் கட்சி சார்பாகப் போட்டியிட்டுதான் மகாதீர் வெற்றி பெற்று மலேசியாவை ஆட்சிசெய்தார். 2008-ம் ஆண்டு பிரதமர் ஆன நஜீப் ரஸாக், மகாதீரின் சிஷ்யர்தான். 2003-ம் ஆண்டுக்குப் பிறகு அரசியலிலிருந்து ஒதுங்கிய மகாதீர், 2015-ம் ஆண்டு மீண்டும் அரசியலுக்குள் வந்தார். அதுமட்டுமல்ல, மலேசியாவில் கடந்த 61 ஆண்டுகளாக பரிஸான் நேஷனல் கட்சிதான் ஆட்சிபுரிந்து வந்தது. மீண்டும் அரசியலுக்குள் நுழைந்த மகாதீர், தாய்க் கட்சியை விழ்த்தியுள்ளார்.

நஜீப் ரஸாக்கின் தோல்விக்கு இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, ஊழலில் திளைத்தது. மற்றொன்று, ஜி.எஸ்.டி வரி. நஜீப் இரண்டாவது முறையாக பிரதமர் ஆனதும், 2015-ம் ஆண்டு மலேசியாவில் 6 சதவிகித ஜி.எஸ்.டி வரியை அறிமுகப்படுத்தினார். மக்களிடையே இந்த 6 சதவிகித ஜி.எஸ்.டி வரி, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்திய  பிரதமர் மோடியைப் போலவே, ``ஜி.எஸ்.டி வரி விதிப்பால் பொருள் உற்பத்திச் செலவை அதிகரித்தாலும், வருங்காலத்தில் நாட்டுக்கு பலன் உள்ளதாக இருக்கும்'' என்று  பரப்புரைக் கூட்டங்களில் பேசி நஜீப் ஆதரவு திரட்டினார். ஆனால், மக்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல், நஜீப் ரஸாக்கின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளனர்.

மலேசிய பிரதமராக நஜீப் பதவியேற்ற பிறகு,  2009-ம் ஆண்டிலிருந்து ஜி.எஸ்.டி வரியை மலேசியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டுவந்தது. 2013-ம் ஆண்டு, மலேசிய நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு ஒப்புதல் கிடைத்தது. 2015-ம் ஆண்டு முதல், மலேசிய நாட்டில் 6 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிப்பு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து ஜி.எஸ்.டி வரி விதிப்பை அமல்படுத்திய நஜீப், ஆட்சியை இழந்துள்ளார்.

6 சதவிகிதத்துக்கே இப்படியென்றால், 21 சதவிகிதத்துக்கு?



Trending Articles

Sponsored