’சீனா திருந்தியாச்சு... இந்தியா மோசமாச்சு..!’ - #WHO ரிப்போர்ட் சொல்லும் சோகச் செய்திSponsoredபொருளாதார வளர்ச்சியே பருவநிலை மாற்றங்களின் காரணியாக விளங்குகிறதா... எனில் நாங்கள் அந்தப் பொருளாதார வளர்ச்சியின் காரணியாக விளங்க மாட்டோம். எங்களுக்குத் தேவை சுத்தமான காற்று, சுகாதாரமான வாழ்விடம், தூய்மையான குடிநீர். இதில் எதுவும் கிடைக்காத நிலையில் இவை அனைத்தையும் பெற்றுக்கொண்டு வசதியான இடத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கும் முதலாளிகளின் முக்கிய நோக்கமான பொருளாதார வளர்ச்சியில் நாங்கள் பங்குகொள்ள மாட்டோம். காற்று, வாழ்விடம், குடிநீர் மூன்றும் மனிதர்களுக்கு மட்டுமல்ல பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்குமான அடிப்படை உரிமை. அந்த உரிமைகளைப் பெறாத வரையிலும் நாங்கள் உரக்கக் கேட்டுக்கொண்டே இருப்போம்.


இன்னும் எத்தனை காலங்களுக்கு சமூகப் போராளிகளும், அடித்தட்டு மக்களும், குழந்தைகளும் இந்தியச் சுகாதார அமைச்சகத்தின் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருப்பது? இதற்கு ஒரு முடிவே இல்லையா! கடந்த சில ஆண்டுகளாக டெல்லியில் காற்று மாசடைந்து இருப்பதைப் பற்றிய விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டேயிருக்கின்றன. ஒட்டுமொத்த நாட்டின் கண்களையும் தலைநகரம் மறைத்திருக்க, மொத்த இந்தியாவிலும் இருக்கும் காற்று எந்த அளவிற்கு மாசடைந்து உள்ளது ,அது எவ்வளவு அபாயமானது என்பது தற்போது உலக சுகாதார நிறுவனத்தின் கண்களுக்குத் தெரிந்துள்ளது. உலகின் காற்று மாசுபாடு குறித்த ஆய்வு நடத்தியுள்ளது உலக சுகாதார நிறுவனம் (WHO). அதன்மூலம் உலகில் மிக அதிகமாகக் காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முதல் 20 நகரங்களில் 14 இந்தியாவில் உள்ளன. 2014ஆம் ஆண்டின் ஆய்வில் அதிகமாக மாசடைந்து இருப்பதாகக் கூறப்பட்ட சீனா தற்போது தனது மாசு அளவைக் குறைத்துப் பட்டியலில் பின்னுக்குச் சென்றுள்ளது. ஆனால் இந்தியா மாசு அளவை அதிகரித்துப் பட்டியலில் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Sponsored


Sponsoredஉலகளவில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 3000 நகரங்களின் காற்று மாசுபாட்டு அளவைக் கணக்கில் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் PM10 மற்றும் PM2.5 என்று கூறப்படும் காற்றில் கலக்கும் மாசுத் துகள்களின் அளவுகளைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்து உள்ளார்கள். அதாவது காற்றில் 10 மைக்ரோமீட்டர் விட்டத்திற்குள் இருக்கும் தூசித் துகள்களையும் வாயுக்களையும், 2.5 மைக்ரோமீட்டர் விட்டத்திற்குள் இருப்பவற்றையும் வைத்து ஆய்வுசெய்துள்ளார்கள். அதன்படி அந்தத் துகள்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டினாலே அது அபாயகரமான விளைவுகளைத் தரக்கூடியது. ஆனால் இந்தியாவின் 14 நகரங்களில் இரண்டைத் தவிர அனைத்தும்  100ஐ தாண்டிவிட்டது. பட்டியலில் முதலாவாதாக இருக்கும் கான்பூரில் பி.எம் அளவு 173.

2015இல் நான்காவது இடத்தில் இருந்த டெல்லி தற்போது 6வது இடத்திற்கு வந்திருந்தாலும், எட்டாவது இடத்தில் இருந்த கான்பூர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதன்மூலம் அனைவராலும் பேசப்படும் பிரச்னைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுவது புரிகிறது. கடந்த சில ஆண்டுகளில் டெல்லிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில் கொஞ்சமேனும் மற்ற நகரங்களுக்கும் கொடுத்து இருந்தால் இந்தியா தற்போது இந்த நிலைக்கு வந்திருக்காது. இதே அய்வு 2011இல் நடத்தப்பட்டபோது இந்தியாவின் இரண்டு நகரங்கள் மட்டுமே முதல் 20 நகரங்களின் பட்டியலில் இருந்தன. தற்போது 20இல் 14 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. 

நெதர்லாந்தில் இருக்கும் உலக சுற்றுச்சூழல் ஆய்வகம் மாசுபாட்டில் அதிகப் பங்கு வகிக்கும் பசுமை இல்ல வாயுக்கள் குறித்து நடத்திய ஆய்வின் படி அதிலும் இந்தியத் தொழிற்சாலைகள் பட்டியலில் முண்டியடித்து முன்னுக்கு வந்திருப்பது தெரிகிறது. அந்த ஆய்வறிக்கையின் படி இந்தியாவின் Coal India என்ற நிறுவனம்தான் 2076.2 மில்லியன் டன்கள் என்று இருப்பதிலேயே அதிகளவில் அபாயகரமான கரிம வாயுக்களை வெளியேற்றிக் கொண்டு இருக்கின்றன. அதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் 263.3 மில்லியன் டன்களும்,  தேசிய தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனமான NTPC 191.8 மில்லியன் டன்களும், ஓ.என்.ஜி.சி நிறுவனம் 149.8 மில்லியன் டன்களும் தத்தம் பங்குகளுக்குக் கரிம வாயுக்களை வள்ளல்களாய்க் காற்றுக்குத் தானமளித்துக்கொண்டு இருக்கிறார்கள்.


2015ஆம் ஆண்டு நடந்த பாரீஸ் காலநிலை உச்சிமாநாட்டின் போது காற்று மாசுபாட்டிலும், வெப்ப மயமாதலிலும் முக்கியப் பங்கு வகிக்கும் பசுமை இல்ல வாயுக்களைக் குறைப்போம் என்று உறுதிமொழி எடுத்த நாடுகளில் சீனாவும் அமெரிக்காவும் ஓரளவுக்கு அதைச் சாத்தியப்படுத்தியும் விட்டது. தனது பசுமை இல்ல வாயு வெளியீட்டு அளவில் 0.7% சீனாவும், 2.6% அமெரிக்காவும் குறைத்துள்ளன. ஆனால் இந்தியாவில் பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுவது 5.1 சதிவிகிதமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு தூய்மையான சுகாதாரத்தை உருவாக்குவதில் முனைந்திருக்கும் இந்திய அரசாங்கத்தின் தூய்மை இந்தியா திட்டம் இத்தகைய விளைவுகளை ஏன் கண்டுகொள்ளவில்லை? அடித்தட்டு மக்களிடம் சுற்றுச்சூழல் பற்றி எடுத்துரைத்துக் கொண்டிருக்கும் அரசாங்கம் அதற்குக் கேடு விளைவிப்பதில் பெரும்பங்கு வகிக்கும் தொழிற்சாலைகளை ஏன் கண்டுகொள்ளவில்லை? போன்ற கேள்வி எழுகின்றன.

இது போன்ற அதிகமான காற்று மாசு மக்களுக்கு உடல்நலக் கோளாறுகளையும் மூச்சுத் திணறல்களையும் ஏற்படுத்துவதோடு குழந்தைகள் உட்படப் பெரும்பாலான உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும். அந்தவகையில் காற்று மாசு காரணமாக அதிகம் உயிரிழந்தவர்கள் விகிதத்தில் கூட உலகளவில் நாமே முன்னிலை வகிப்பது வேதனையளிக்கிறது. இந்தியத் துணைக்கண்டத்தில் காற்று மாசுபாட்டினால் மிக அதிகமான உயிரிழப்புகள் நடப்பது இந்தியாவில் தான். மாசடைந்த காற்றால் மட்டும் கொடிய சுவாச மண்டலக் குறைபாடு, நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு, ஆஸ்துமா போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் மட்டும் 2,515,518 பேர் உயிரிழந்துள்ளார்கள். நாட்டின் இறப்பு விகிதத்தில் 30 சதவிகிதம் மாசடைந்த காற்றினால் ஏற்படுவது. ஒரு லட்சத்திற்கு 196 மக்கள் என்ற விகிதத்தில் இதனால் இறந்துகொண்டு இருக்கிறார்கள்.

மக்களை இவை அனைத்திற்கும் அரசாங்கம் ஆளாக்குவது எதற்காக? நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக. இந்திய உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவதற்காக. அதன்மூலம் நாட்டு மக்களை வறுமையின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்காக. அனைவருக்குமான வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்காக. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் தொழிற்சாலைகளை அதிகப்படுத்த முயற்சித்த மத்திய அரசு அந்தத் தொழிற்சாலைகளின் மாசு வெளியீட்டு அளவினை கவனிக்க மறந்துவிட்டது. பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு புதிய இந்தியாவை முன்னேற்றத் துடித்தவர்கள் அதிலும் தோல்வியையே தழுவியதாகத் தோன்றுகிறது. உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2016இல் 7.9 சதிவிகிதமாக இருந்தது தற்போதைய 2018ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 6.1%. இது கூட சென்ற ஆண்டின் அதே காலாண்டில் 5.7% ஆக மேலும் மோசமாக இருந்ததைத் தற்போது ஓரளவுக்கு முன்னேற்றி இருக்கிறார்களே தவிர நமது நாட்டின் பழைய உற்பத்தித் தரத்தைக்கூடத் தற்போது இழந்தே நிற்கிறோம்.


இந்திய மக்கள் தொகையில் 27 கோடிப் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே தான் தற்போது வாழ்ந்து வருகிறார்கள். அதாவது ஐந்து இந்தியர்களில் ஒருவர் ஏழை. தனது அன்றாட உணவு உடை இருப்பிடத்திற்கு உழைப்பதிலேயே தமது வாழ்நாள் முழுவதையும் செலவு செய்கிறார் என்கிறது உலக வங்கி. இதில் 43% சதவிகிதம் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவைச் சேர்ந்தவர்கள். மொத்தமே மக்கள் தொகையில் 28% மட்டுமே இருக்க மிக அதிகமாக வறுமையில் வாடுபவர்கள் அவர்களாகத் தான் இருக்கிறார்கள். நாட்டின் வேலையின்மையும் அதிகரித்து இருப்பதாகவே தரவுகள் கூறுகின்றன. பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் கொண்டு வரப்படும் தொழிற்சாலைகளால் அந்த வளர்ச்சியும் பெருமளவில் நடக்காமல், நாட்டின் சூழலையும் மாசுபடுத்தி மக்களின் வாழ்க்கையையும் வாழிடத்தையும் அழித்துக் கொண்டிருக்கின்றன.மக்களுக்கு என்று இருப்பதே அவர்களின் சுற்றுச்சூழல் தான்.அதையும் அழித்து அவர்களை விஷவாயுக்கள் அடங்கிய காற்றைச் சுவாசிக்க வைக்கிறார்கள். தற்போதைய கணக்கின் படி நாட்டில் 90% பேர் மாசடைந்த காற்றைத் தான் சுவாசித்துக்கொண்டு இருக்கிறார்கள். நாட்டு மக்களின் உழைப்பால் பெரும் லாபம் ஈட்டும் பெரு நிறுவனங்கள் மக்களின் சுகாதாரமான வாழிடத்தின் மீது சிறிதேனும் அக்கறை செலுத்தி இருந்தால் இன்று இந்த நிலைக்கு வந்திருக்காது. அதைச் செய்யவும் இல்லை. அரசாங்கம் அப்படி செய்யச் சொல்லவுமில்லை.Trending Articles

Sponsored