1,172 முறை ரத்ததானம்... 24 லட்சம் குழந்தைகள் உயிரைக் காப்பாற்றிய `பிதாமகன்'!Sponsoredத்ததானம் செய்வதற்கு, பரந்த மனம் வேண்டும். அதற்கு இப்போதும்கூட பலர் மறுப்பதுண்டு. ஆஸ்திரேலியாவில் 81 வயது மனிதர் ஒருவர், தன் வாழ்நாள் முழுவதுமே ரத்ததானம் செய்துள்ளார். அவரால் காப்பாற்றப்பட்ட உயிர்கள் கணக்கில் அடங்காதவை. அவரின் இயற்பெயர் ஜேம்ஸ் ஹாரிஸன். `தங்கக் கைகொண்ட மனிதர்' என்பது அவரின் செல்லப்பெயர். 18 வயது முதல் 81 வயது வரை 60 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக ரத்ததானம் செய்த ஹாரிஸனின் இளவயது வாழ்க்கை, துயரம் நிறைந்தது. 

1936-ம் ஆண்டு பிறந்த ஜேம்ஸ் ஹாரிஸனுக்கு 14 வயதானபோது, நுரையீரல் தொற்று காரணமாக அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 6 மணி நேரம் நடந்த அறுவைசிகிச்சைக்குப் பிறகு, 7 லிட்டர் ரத்தம் ஹாரிஸனுக்குச் செலுத்தியாக வேண்டும். ஹாரிஸனின் பெற்றோர் 7 லிட்டர் ரத்தம் பெறுவதற்கு படாதபாடுபட்டனர். அப்போதுதான், ஹாரிஸன் ரத்ததானத்தின் மகிமையை உணர்ந்தார். ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை 18 வயதுக்குமேல்தான் ஒருவர் ரத்ததானம் வழங்க முடியும். 18 வயதை எட்டியவுடன் ரத்ததானம் செய்ய வேண்டுமென்று ஹாரிஸன் மனதுக்குள் உறுதிபூண்டார். 1954-ம் ஆண்டு ஹாரிஸன் 18 வயதை எட்டியவுடன் செய்த முதல் வேலை ரத்ததானம். அப்போதுதான் ஹாரிஸன் ரத்தத்தில் anti-D மருந்து தயாரிக்க உதவும் பிளாஸ்மா கலந்திருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். 

Sponsored


உலகில் 80 சதவிகித மக்கள், Rh ரத்தப் பிரிவைக்கொண்டவர்கள். ரத்தத்தில் Rh இருந்தால் அது ஏ, பி, ஏபி, ஓ பாசிடிவ் ரத்த வகையைச் சேர்ந்தது. Rh இல்லையென்றால் அது நெகட்டிவ். அதாவது ஏ, பி, ஏபி, ஓ நெகட்டிவ் ரத்த வகையைச் சேர்ந்தது. கருத்தரிப்பின்போது தாயின் ரத்தம் குழந்தை ரத்தத்துடன் நேரடியாகக் கலப்பதில்லை. ஊட்டச்சத்து, ஆக்சிஜன் போன்றவை நஞ்சுக்கொடியின் வழியாகவே குழந்தைக்குக் கிடைக்கும். அதே வேளையில், டெலிவரி நேரத்தில் குழந்தையின் ரத்தத்துடன் தாயின் ரத்தம் கலப்பதற்கான வாய்ப்புள்ளது. தாயின் ரத்தம் O நெகட்டிவ் என வைத்துக்கொள்வோம். தந்தைக்கு O பாசிடிவாக இருக்கும்பட்சத்தில் குழந்தைக்கும் O பாசிடிவ் ரத்தம் இருக்கக்கூடும். குழந்தையின் ரத்தத்தில் தாயின் ரத்தம் கலந்தால், குழந்தையின் ஓ பாசிடிவ் ரத்தத்துக்கு எதிரான ஆன்டிபயாட்டிக்கை தாயின் O நெகடிவ் ரத்தம் உருவாக்கத் தொடங்கிவிடும். இதனால் முதல் குழந்தைக்குப் பெரியளவில் பாதிப்பு ஏற்பாடாது. ஆனால், இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்தால், தாயின் ரத்தம் குழந்தை ரத்தத்துக்கு எதிராக ஆன்டிபயாட்டிக்கை தானாகவே உருவாக்கத் தொடங்கும். இதனால், இரண்டாவது குழந்தைக்கு ரத்தச்சோகை, மஞ்சள்காமலை நோய் தாக்குதல்கள் ஏற்படக்கூடும். குழந்தையின் உடல் வீங்கிவிடும். சில நேரங்களில் குழந்தை இறந்தே பிறக்கலாம். இதைத் தடுக்கவே முதல் குழந்தை பிறந்த பிறகு பெண்களுக்கு anti-D ஊசி செலுத்துவார்கள். 

Sponsored


இந்த anti-D பிளாஸ்மா, இயல்பாகவே ஹாரிஸனின் ரத்தத்தில் இருந்தது. இதனால், மருத்துவர்கள் ஆச்சர்யமடைந்தனர். ஹாரிஸனின் ரத்தத்தில் உள்ள சிறப்புத் தன்மையை அவரிடம் கூறினர். `தொடர்ந்து ரத்ததானம் செய்துவந்தால், லட்சக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காப்பற்ற முடியும்' என்றும் டாக்டர்கள் வேண்டுகோள்விடுத்தனர். அப்போது ஹாரிஸன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. `எத்தனை முறை வேண்டுமானாலும் ரத்ததானம் செய்கிறேன்' என்று மருத்துவர்களிடம் உறுதியளித்தார். ஒருவர், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தாராளமாக ரத்ததானம் செய்யலாம். கடந்த 60 ஆண்டுகளாக 1,172 முறை ஹாரிஸன் ரத்ததானம் செய்துள்ளார். ஹாரிஸனின் ரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்ட anti-D எதிர்ப்புச்சக்தி மருந்தால், 24 லட்சம் குழந்தைகள் காப்பாற்றப்பட்டனர். 

ஆஸ்திரேலியாவில், 81 வயதுக்குப் பிறகு ரத்ததானம் செய்யக் கூடாது. அதனால், கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஹாரிஸன் கடைசியாக ரத்ததானம் செய்தார். அன்று அவரால் காப்பாற்றப்பட்ட ஏராளமான குழந்தைகளை, பெற்றோர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுவந்திருந்தனர். சில குழந்தைகள் அவரின் முகத்தை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தன.

``இனிமேல் ரத்ததானம் செய்ய முடியவில்லையே என்கிற வருத்தத்தைத் தவிர எனக்கு வேறு எந்தக் கவலையும் இல்லை'' என்று கூறும் ஹாரிஸன், ``எனக்கு அறுவைசிகிச்சை நடந்தபோது மூன்று மாதங்கள் மருத்துவமனையில் இருந்தேன். 100 தையல்கள் போடப்பட்டிருந்தன. முகம் தெரியாத பலரும் ரத்ததானம் செய்தனர். அவர்களை நான் மீண்டும் சந்திக்கப்போவதில்லை. ஆனால், ஏதோ ஒரு வகையில் சமூகத்துக்குத் திருப்பிச் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டேன். அதற்கு வாய்ப்பாக, கடவுளே எனக்கு இந்த அரியவகை ரத்தத்தைக் கொடுத்துள்ளார். என் சாதனையை இன்னொருவர் முறியடிக்க வேண்டும். அதுதான் என் ஆசை'' என்று மனநிறைவுடன் சொல்கிறார்.

ஆஸ்திரேலியாவில் இந்த அரிய வகை பிளாஸ்மா நிறைந்த ரத்தம்கொண்டவர்கள், 50-க்கும் குறைவானவர்களே! ஹாரிஸனின் ஓய்வுக்குப் பிறகு, அவரின் இடத்தை வேறு ஒருவர் நிரப்புவார் என ஆஸ்திரேலிய ரெட் க்ராஸ் ரத்ததான அமைப்பு நம்புகிறது.Trending Articles

Sponsored