தூத்துக்குடி படுகொலைகள்- இந்திய அரசுக்கு ஐநா வல்லுநர் குழு அழுத்தம்Sponsoredதூத்துக்குடியில் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையொட்டி, ஸ்டெர்லைட் தாமிர ஆலையின் விரிவாக்கத்துக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தமிழக போலீஸ் அளவுக்கதிகமாக உயிர்குடிக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளது என ஐ.நா. வல்லுநர் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் வேதாந்தா குழுமத்தின் ஒரு பிரிவாக, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலை இயங்கிவருகிறது. இந்த ஆலையை விரிவாக்க முடிவுசெய்யப்பட்ட நிலையில், அதனால் குடிநீர், நிலம், சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் என பாதிக்கப்படும் பகுதி மக்கள் போராடத் தொடங்கினர். போராட்டத்தின் நூறாவது நாளன்று மாவட்ட ஆட்சியரகத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்ற பொதுமக்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 

Sponsored


``நிராயுதபாணிகளாக வந்த மக்கள் மீது குறிபார்த்துச் சுடும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி படுகொலை செய்தது அப்பட்டமான மனித உரிமை மீறல்” என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் மட்டுமின்றி, வெளிமாநில அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. ஆசிய மனித உரிமை அமைப்பு கண்டனத்தை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், உலக நாடுகளைச் சேர்ந்த ஐ.நா. மனித உரிமை அமைப்பின் வல்லுநர்கள், தூத்துக்குடி படுகொலைகள் தொடர்பாக கரிசனத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர். 

Sponsored


அந்த அறிக்கையில், ``அடிப்படை மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் மீதான உரிமைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் நடந்த போராட்டக்காரர்களின் ஊர்வலத்தில், அளவுக்கதிகமாகவும் வெடிபொருள்களையும் உயிரைக்குடிக்கும் ஆயுதங்களையும் பயன்படுத்தியுள்ளனர் என்பது கவலைக்குரியது. இதுதொடர்பாக இந்திய அரசானது தாமதமில்லாமல் சுயேச்சையான வெளிப்படையான புலன்விசாரணை நடத்துவதையும் குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின்பிடியில் கொண்டுவரப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும். வர்த்தகம், தொழில்ரீதியான மனித உரிமை மீறல்களை விமர்சிக்கும் ஒரு கருவியாகவும் ஒரு மைல்கல்லாகவும் கருத்துசுதந்திரம் இருக்கிறது எனும்நிலையில், அதை உறுதிப்படுத்துவதும் இந்திய அரசின் கடமையாகும்” என்று ஐ.நா. வல்லுநர்கள் கூறியுள்ளனர். 

தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையால் நிலத்தடிநீர் கடுமையாக மாசுபாடு அடைந்துள்ளது; அந்தப் பகுதியில் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது; மற்ற வகைகளிலும் சுற்றுச்சூழலின் தரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது; இதை மாநில, தேசிய நீதித்துறைகளும் நிர்வாகங்களும் பதிவுசெய்துள்ளன என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

`` வர்த்தகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான  ஐ.நா.வின் வழிகாட்டும்கொள்கைகளின்படி, அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மனித உரிமைகளையும் மதிக்கவேண்டிய பொறுப்பு கொண்டவையாகும். அதாவது மனித உரிமைகளில் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிவது, தடுப்பது, குறைப்பது ஆகியவை தொடர்பாக அக்கறையுடன் இருக்க வேண்டும். இதன்படி, ஸ்டெர்லைட் நிறுவனமும் அதன் தாய் நிறுவனமான வேதாந்தா குழுமமும் சூழல் சீர்கேட்டைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; அந்தப் பகுதி மக்களுக்கு நல்ல சுகாதாரமும் பாதுகாப்பான குடிநீரும் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

இந்தியாவில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களும் தேசிய, சர்வதேச மனிதஉரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மதித்து நடக்க வேண்டும்; இதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுக்க வேண்டும் என்று ஐநா வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

மேலும், இந்திய அரசின் சுற்றுச்சூழல் சட்டவிதிகளை நிறைவேற்றி, பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் அர்த்தமுள்ள கலந்துரையாடலை மேற்கொண்ட பிறகே, ஸ்டெர்லைட் ஆலையானது மறுபடியும் இயக்கத்தைத் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

தேசங்கடந்த தொழில்கழகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான ஐநா பணிக்குழுவின் தலைவர் அனிதா ராமசாஸ்திரி மற்றும் ஐநா மனிதஉரிமைப் பேரவையின் சிறப்பு அறிக்கையாளர்களான பேஸ்கட் டன்காக், ஆக்னஸ் கல்லாமார்ட், மைக்கேல் ஃபாஸ்ட், டேவிட் கே, கிளமெண்ட், ஜான் எச். நாக்ஸ், லியோ ஹெல்லெர் ஆகியோரே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இவர்கள், ஐநா மனித உரிமைப் பேரவையால் குறிப்பிட்ட நாடு அல்லது நாடுகளின் நிலைமைகளை ஆராய்வதற்கு நியமிக்கப்படும் வல்லுநர்கள் ஆவர்.Trending Articles

Sponsored