``ஹாலிவுட் படங்கள் நிஜமாகலாம்!” - குளோபல் வார்மிங்கின் ஆபத்தைச் சொல்லும் ஐ.நா. அறிக்கைபல சின்னத் தீவு நாடுகள், ஏழை நாடுகள் குளோபல் வார்மிங்கின் விளைவுகளால் அகதிகளாக மாறி வருகின்றன. இதனை இன்னும் மெய்ப்பிக்கும் விதமாக ஓர் அறிக்கை உருவாக்க ஆராய்ச்சியாளர் வேலை செய்து வந்துள்ளார்கள். அந்த அறிக்கை வெளியாகும் முன்பே `லீக்’ ஆகியிருக்கிறது.

புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்தும் உடனடி நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டால் பூமியின் வெப்பநிலை உயர்வு 1.5 டிகிரி செல்சியஸை எளிதாகக் கடந்துவிடும். ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் (UN's Intergovernmental Panel on Climate Change (IPCC)) அறிக்கையின் படி, ``பசுங்குடில் வாயுக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டால் மனிதர்களால் தூண்டப்பட்ட புவி வெப்பமாதல் விளைவால் 2040 ம் ஆண்டுக்குள் 1.5 டிகிரி செல்சியஸைக் கடந்துவிடும்". பூமியின் வெப்பநிலை உயர்வு 1.5 டிகிரி செல்ஸியஸுக்குக் கீழ் இருக்கும்போதுதான் காலநிலை மாற்றத்தின் உடனடி விளைவுகளைச் சமாளிக்க முடியும் என்கிறது அறிக்கை. அதைத் தாண்டினால் விளைவுகள் இன்னும் பயங்கரமாக இருக்கும் என வரையறுக்கின்றனர் ஆய்வாளர்கள். உண்மையில் பூமியின் சராசரி வெப்பநிலை உயர்வானது 1 டிகிரி செல்சியஸைத் தொடுவதற்குள்ளாகவே அதன் தாக்கத்தை உலகம் முழுவதும் பார்க்க முடிகிறது. தீவு நாடுகள், மூன்றாம் உலக நாடுகள் எனப் பல நாடுகள் காலநிலை மாற்றத்தால் அல்லற்பட்டு வருகின்றனர். புவி வெப்பமாதல் குறித்த இந்த அறிக்கையானது ஜூன் 4 ம் தேதி கருத்து கேட்பதற்காகப் பல்வேறு நாடுகளுக்கு முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்களிடமிருந்து 25,000 கருத்துகள் கேட்கப்பட்டு இந்த அறிக்கை தயாராகியுள்ளது. அடுத்த அக்டோபர் மாதம் வெளியாகவிருந்த அந்த அறிக்கைதான் முன்கூட்டியே இணையத்தில் பரப்பப்பட்டுள்ளது. 

Sponsored


Sponsored


பூமியின் சராசரி வெப்பநிலை 14.6 டிகிரி செல்சியஸ். 2040க்குள் அந்த வெப்பநிலையானது 1.5 டிகிரி செல்சியஸ் உயர்வதால் பூமியில் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் அந்த அறிக்கையில் குறிப்பிடுகின்றனர். வெள்ளம், மழையின் பருவம் மாறுதல், வறட்சி, கடல் நீர் மட்டம் உயருதல் போன்ற காலநிலை மாற்ற விளைவுகள் ஏற்கெனவே தலைதூக்க ஆரம்பித்துவிட்டன. புவி வெப்பமாதல் அதிகரிப்பதால் இந்த விளைவுகள் இன்னும் வீரியமாகும். இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது வளர்ந்து வரும் நாடுகள்தாம். இந்தியா போன்று வேகமாக வளர்ந்து வரும் நாடுகள் பொருளாதாரரீதியாகவும் சுற்றுச்சூழல்ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்கிறது அந்த அறிக்கை. காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் தொடர்ச்சியாகப் பல்வேறு நாடுகளில் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் சீர்குலைத்து வருகிறது. வளரும் நாடுகள் வறுமையை ஒழிக்கப் போராடி வரும் சூழலில் புவி வெப்பமாதல் எனும் புதிய சவாலையும் எதிர்கொள்ள வேண்டும். ஏனென்றால், இதனால் முதலில் பாதிக்கப்படுவது வளரும் நாடுகளில் வாழும் ஏழைகள்தாம். காலநிலை மாற்றத்துக்கு எதிரான விழிப்புஉணர்வில் இந்தியாவுக்கு மூன்று மிகப்பெரிய சவால்கள் இருக்கின்றன. சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குதல், வறுமையை அழித்தொழித்தல், வறுமையில் இருப்பவர்களைக் காலநிலை மாற்ற விளைவுகளிலிருந்து பாதுகாத்தல் என இவற்றில் ஒன்றில் கவனம் இல்லாவிட்டாலும் அது மற்ற இரண்டை எளிதாகப் பாதிக்கும். ஆனால், இந்திய அரசின் வளர்ச்சித்திட்டங்களோ இவை எவற்றையும் இம்மியளவு கூட கவனிக்கவில்லை என்பதைச் சமீபகால நிகழ்வுகள் நமக்குச் சொல்கின்றன. 

Sponsored


பசுங்குடில் வாயுக்களை வெளியேற்றும் ஆற்றலிலிருந்து தூய்மையான ஆற்றலுக்கு மாறுவது கொஞ்சம் சிரமம்தான். அப்படியோர்  அரசு முயற்சி செய்யுமானால் அதற்கான பொருள்செலவும் முயற்சிகளும் உள்கட்டமைப்பு வசதிகளும் அதிகமாய்த் தேவைப்படும். ஏழை நாடுகள், வளரும் நாடுகளின் பொருளாதாரம் இதற்கு இடம் தராது. இந்நிலையில் வளர்ந்த பணக்கார நாடுகள் இதனை எளிதில் செயல்படுத்தலாம். ஆனால், அவற்றில் சில நாடுகளே இந்த முயற்சியை மேற்கொள்கின்றன. மற்ற நாடுகள் பசுங்குடில் வாயுக்கள் வெளியேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அப்படி இல்லையெனில் கார்பன் வெளியேற்றத்தை வளிமண்டலத்தில் நிகழ்த்தாமல் நிலத்திலும் கடல்களிலும் கார்பன் டை ஆக்ஸைடு அளவை அதிகமாக்குகின்றன. இவையும் புவி வெப்பமாதலில் முக்கியப் பங்கு வகிக்கக் கூடியவைதாம். 2015 ம் ஆண்டு பாரீஸ் மாநாட்டில் கூட வளர்ந்த நாடுகள் காலநிலை மாற்றத்திற்கான பொறுப்பை ஏற்கவில்லை. பசுங்குடில் வாயு வெளியேற்ற அளவையும் தளர்த்திக் கொண்டன. பூமியின் இந்த நிலைக்குக் காரணமானவர்களே அவற்றிலிருந்து தப்பித்துக் கொண்டனர். 

``உலகாளவிய தீயணைப்பு அலாரத்தை உருவாக்க வேண்டிய நிலை கூட வரலாம்" என இது குறித்து கொஞ்சல் கிண்டலோடு குத்தும் உண்மைகளைச் சொல்கிறார் ஆக்‌ஷன் ஏய்டு சர்வதேசக் காலநிலைக் கொள்கை அதிகாரி (Climate Policy Officer for ActionAid International) தெரசா ஆண்டெர்சன் (Teresa Anderson). மேலும் அவர் கூறுகையில், ``அறிக்கை மிகத்தெளிவாக ஆபத்தைச் சுட்டிக் காட்டியுள்ளது. நம்மிடையே நிறைய புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும் இதைத் தடுக்க முடியாது. முக்கியமாகத் தொழிற்புரட்சிக்குப் பின் பூமியை மாசுபடுத்தி வளர்ந்த நாடுகள்தாம் காலநிலை மாற்றத்தில் முக்கியப் பொறுப்பேற்க வேண்டும். இப்போதும் விரைந்து வலுவாகச் செயல்பட்டால் இந்த ஆபத்தை எளிதாக எதிர்கொள்ள முடியும்" என நம்பிக்கையும் சொல்கிறார். 2015 ம் ஆண்டு நடந்த பாரிஸ் மாநாட்டில் 200 நாடுகள் கையெழுத்திட்டு பாரிஸ் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டன. இந்தியா கூட 2011 ம் ஆண்டுக்குள் 175 ஜிகா வாட்ஸ் தூய்மை ஆற்றலை உற்பத்தி செய்வதாகவும் காடுகளின் அளவை அதிகப்படுத்துவதாகவும் உறுதி கொடுத்திருக்கிறது. ஆனால், உலகம் முழுக்கவே அதற்கான முயற்சியைச் சில நாடுகள் மட்டுமே எடுக்கின்றன. 

வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகள் என அனைவரும் சேர்ந்துதான் இதனை எதிர்கொண்டு மாற்றியமைக்க வேண்டும். முக்கியமாக வளர்ந்த நாடுகள் மற்ற நாடுகளுக்கு உதவி செய்வது இந்த நேரத்தில் அவசியமாகிறது. சொல்லப்போனால் அது மனிதக்குலத்தின் நல்வாழ்வுக்கான உதவி. காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் எனும் இந்த நூற்றாண்டின் பிரச்னைகளை அடுத்த நூற்றாண்டுக்குள் முற்றிலுமாகச் சரி செய்யும் முயற்சிகள் வேண்டும். இல்லையெனில் ஹாலிவுட் படங்கள் காட்டும் கற்பனைகள் நிஜமாகலாம். அதைத்தான் இந்த அறிக்கையும் சொல்கிறது. Trending Articles

Sponsored