சமூக வளர்ச்சியில் ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு எழும் ஆப்கானிஸ்தான்!



ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானை யாருமே மறக்க முடியாது. ஐ.பி.எல் தொடரில் அசத்திய ரஷித்தை இந்திய குடிமகனாக்க வேண்டும் எனும் அளவுக்கு ரசிகர்கள் கேட்கும் வீரராக ஒரு ஆப்கான் வீரர் வளர்ந்துள்ளார். இதேபோல் ஒரு நிகழ்வு 10 வருடத்துக்கு முன்னால் நிகழ்ந்திருக்குமா என்றால் சந்தேகமே இல்லாமல் 'இல்லை' என்ற பதில் வந்திருக்கும். ஆப்கான் 10 ஆண்டுகளில் ரஷித் கான்களை மட்டும் உருவாக்கவில்லை. ஆப்கானின் ஒட்டுமொத்த ஆரோக்கிய வளர்ச்சியையும் மேம்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் உள்ள இரட்டை கோபுரத்தை ஒசாமா பின்லேடன் இடித்தார். அதற்கு பழிவாங்க அமெரிக்கா ஆப்கானிஸ்தானை சல்லடையாக சலித்து ஒசாமாவை வீழ்த்தியது என்பது ஒரு வரிச் செய்தி ஆனால் அதற்குப் பின்னணியில் ஏகப்பட்ட அரசியல் இருந்தது அனைவரும் அறிந்ததே. ஆப்கானிஸ்தான் சிறிய நாடு என்றாலும், கிட்டத்தட்ட 175 வருடங்கள் போரில் மட்டுமே வாழ்க்கையைக் கழித்துவரும் ஒரு தேசம். முதலில், பிரிட்டன் கையில் சிக்கியது ஆப்கானிஸ்தான். பின்னர் போராட்டம், புரட்சி எனத் தொடங்கி சராசரியாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை யாரின் கையிலாவது சிக்கியது. காரணம், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஆசிய நாடுகளுக்கும் இணைப்புப் பாலமே ஆப்கானிஸ்தான் என்பதை உலக நாடுகள் நன்கு அறிந்திருந்ததுதான். 

Sponsored


Sponsored


ஆப்கான் அமெரிக்க போரில் சிக்கியபின் மக்களின் வாழ்வாதாரங்கள் மோசமாக பாதிக்கப்பட்டன. 2004-ம் ஆண்டு மனித மேம்பாட்டு வளர்ச்சிக் குறியீட்டில் 182 நாடுகள் இடம்பெற்ற தரவரிசையில் ஆப்கானிஸ்தானுக்குக் கிடைத்த இடம் 181. குழந்தைகள் பிறந்தவுடன் இறக்கும் விகிதம் என்பது 1000 குழந்தைகளுக்கு 257 என்ற அளவில் இருந்தது. 10ல் 4 குழந்தைகள் குறைந்த எடைகொண்ட குழந்தைகளாக பிறந்தன. ஆப்கானிஸ்தானில் 65 சதவிகித குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் தவித்தன. போர் முடிவுக்கு வந்த பின் ஆப்கானிஸ்தான் அரசு ஏழ்மை, ஆரோக்கியம் ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தது. அதன்படி கடந்த 10 வருடங்களில் அபரீத வளர்ச்சியை நோக்கிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. 

Sponsored


2004-ம் ஆண்டுக்குப் பிறகு அதிபர் ஆட்சி முறை ஆப்கானிஸ்தானில் அமல்படுத்தப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சிக்கு வந்த பின் உடனடியாக பெரிய மாற்றங்கள் ஏற்படாவிட்டாலும் மெல்ல மெல்ல மாற்றங்களுக்கான விதை விதைக்கப்பட்டது. ஒசாமாவை அமெரிக்கா தேடும் வேலை ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு புறம் ஆப்கான் ஏதோ ஒரு வகையில் தன்னை மாற்றியமைத்துக் கொண்டிருந்தது.

2004-2016-ம் ஆண்டுக்குள் ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி அதிவேகமடைந்துள்ளது. பெண்கள் கருவுரும் விகிதம் 16 சதவிகிதத்திலிருந்து 53 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கான மருத்துவம் 40 சதவிகிதத்திலிருந்து 80 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 100ல் 39 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளாக இருந்தது. இன்று 100ல் 20 குழந்தைகள் என்ற அளவுக்கு அது குறைந்துள்ளது. 2004-ம் ஆண்டு குழந்தைகளுக்குப் பாலூட்டும் விகிதம் 30 சதவிகிதமாக இருந்தது. இன்று அது 58.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 181-வது இடத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் இன்று 169-வது இடத்தில் உள்ளது. இந்த வளர்ச்சியை 10 வருடங்களில் ஆப்கானிஸ்தான் எட்டியுள்ளது.

ஆப்கானிஸ்தான் விளையாட்டு, ஆரோக்கியம் , கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. பதற்றமான சூழல், போர், தீவிரவாதம், இப்போதும் ஆங்காங்கே குண்டு வெடிப்புகள் என சிக்கித் தவித்தாலும் ஆப்கான் வளர்கிறது. ஆப்கான் அரசும், மக்களும் இந்த வளர்ச்சியை மகிழ்ச்சியாக பார்க்கிறார்கள். கிரிக்கெட்டில் மட்டுமல்ல ஆப்கான் வளர்ச்சியிலும் சிக்ஸர் அடிக்கிறது. 



Trending Articles

Sponsored